ஸ்டாலின் தன்னை நாத்திகன் என்று சொன்னதில்லை!
நம் நாளிதழுக்கு, முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அளித்த சிறப்பு பேட்டி:
வெகு காலமாக தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தும், தற்போது, கூட்டணியில் நான்கு முஸ்லிம் கட்சிகள் இருப்பதால், உங்களுக்கு முக்கியத்துவம் குறைந்துள்ளதா?
தமிழகத்தில், 48 முஸ்லிம் கட்சிகள் உள்ளன. இவை, 'நேற்று இல்லை; இன்று இருக்கிறது; நாளை இருக்குமா' என்று தெரியாத நிலையில் உள்ள கட்சிகள். ஆனால், முஸ்லிம் லீக் என்பது, 1948 மார்ச் 10 முதல் இன்று வரை, 17 மாநிலங்களில் உள்ள வரலாற்று இயக்கம். கடந்த 1952 முதல் இன்று வரை, பார்லிமென்ட்டில் முஸ்லிம் லீக் எம்.பி.,க்கள் இருந்து வருகின்றனர். இப்போதும் ஐந்து எம்.பி.,க்கள் உள்ளனர். இந்தியா முழுதும் காங்கிரசுக்கு ஆதரவளித்த முஸ்லிம் சமுதாயம், தமிழகத்தில் தி.மு.க., பக்கம் நிற்கிறது. எனவே, எங்களுக்கு முக்கியத்துவம் எப்போதும் குறையாது.கடந்த முறை ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை தி.மு.க., பறித்து விட்டதே...
'கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., பெற்ற ஓட்டுகள் அடிப்படையில், 33 தொகுதிகளில் வெற்றி பெறும் வியூகத்துடன், அக்கட்சியை கூட்டணியில் சேர்த்துள்ளோம். தே.மு.தி.க.,வுக்கு ஆறு சட்டசபை தொகுதிகள் தரவுள்ளோம். அதற்காக ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைமை கேட்டது. தே.மு.தி.க.,வை சேர்ப்பது நல்ல முடிவு என்று கருதினோம். அதனால், ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தோம்.கடந்த தேர்தலில், முஸ்லிம்கள் அதிகம் உள்ள மூன்று தொகுதிகளில் போட்டியிட்டும், ஒன்றில்கூட வெற்றி பெற முடியவில்லையே?
பணம் இல்லாததே தோல்விக்கு காரணம். இதுவரை நாங்கள் தேர்தல் நிதி திரட்டியதில்லை. முதல் முறையாக இந்த தேர்தலுக்கு, 60 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளோம்.தி.மு.க., உங்களுக்கு உதவி செய்வதில்லையா?
தி.மு.க.,வால் ஓரளவுக்குதான் உதவி செய்ய முடியும். அனைத்து செலவுகளையும் செய்ய முடியாது. இந்த தேர்தலில், இரு தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதற்கான பணிகளை செய்து வருகிறோம்.தி.மு.க.,வின் 5 ஆண்டு கால ஆட்சியில், முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என, அவர்களே புலம்புகின்றனரே...
ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான தி.மு.க., அரசின் திட்டங்களில், முஸ்லிம்களும் பயனடைந்துள்ளனர். முஸ்லிம்களை மட்டும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. ஹஜ் இல்லம், காயிதே மில்லத் நுாலகம் போன்ற, எங்களின் பல்வேறு கோரிக்கைகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றியுள்ளது. எங்களின் எந்த கோரிக்கையையும், தி.மு.க., மறுத்ததில்லை.புதுக்கோட்டையில் மணல் கொள்ளையை எதிர்த்த, சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொல்லப்பட்டார். சமூக பிரச்னைகளில் அக்கறையுள்ளவராகக் கூட, இதை நீங்கள் தட்டிக் கேட்கவில்லையே?
இதுபோன்ற கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களை, நாங்கள் தட்டிக்கேட்டே வந்துள்ளோம். இனியும் தட்டிக் கேட்போம்.போதை பொருள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு பிரச்னை என, தினம்தோறும் தி.மு.க., அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அதில், நீங்கள் வாயே திறக்கவில்லையே?
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் எல்லா ஆட்சிகளிலும் நடப்பதுதான். இந்த குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். மதுதான் அனைத்து தீமைகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே, மது இல்லாத சமுதாயம் உருவானால், அனைத்தும் சரியாகும். அதற்காக மக்களிடம் பிரசாரம் செய்வோம்.இஸ்லாம் மதுவை தடை செய்கிறது. ஆனால், மதுக்கடை வருமானத்தையே நம்பி உள்ள அரசுக்கு, எந்த அடிப்படையில் ஆதரவு கொடுக்கிறீர்கள்?
முஸ்லிம் மார்க்கத்தில், 'மது, மாது, சூது' தடை செய்யப்பட்டவை. அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளை, நாங்கள் ஆதரிக்கவில்லை. மதுவுக்கு எதிராக பள்ளிவாசல்களில் பிரசாரம் செய்கிறோம். மதுக்கடைகளை மூடும் காலம் ஒருநாள் வரும் என நம்புகிறோம்.'நாத்திக கோட்பாட்டை கொண்ட தி.மு.க.,வுடன் ஏன் முஸ்லிம் கட்சிகள் கூட்டணி வைக்கின்றன?
ஈ.வெ.ராமசாமி தான் நாத்திக கொள்கையை பேசினார். அண்ணாதுரை தி.மு.க.,வை துவங்கியபோது, திருமூலரின், 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பதுதான் கட்சியின் கொள்கை என்றார். கருணாநிதி தன்னை நாத்திகன் என்றார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தன்னை நாத்திகன் என்று, எந்த இடத்திலும் சொன்னதில்லை. தி.மு.க.,வில் உள்ள சிலர் நாத்திகம் பேசலாம். ஆனால், தி.மு.க.,வின் கொள்கை நாத்திகம் என்று, நாங்கள் நம்பவில்லை. தமிழகத்தில் பெரும்பான்மையினர் இறை நம்பிக்கை கொண்டர்கள். எங்கள் கொள்கையில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.சிறுபான்மையினர் ஓட்டுகளால்தான் தி.மு.க., வெல்கிறது. ஆனால், தனது அமைச்சரவையில், ஸ்டாலின் ஒரே ஒரு முஸ்லிமுக்கு இடம் கொடுத்துள்ளார். இது போதுமா?
முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. அது ஒன்றா, இரண்டா என்பதை தீர்மானிக்கும் இடத்தில், ஆளும் கட்சிதான் உள்ளது. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதபோது, நாங்கள் குரல் கொடுத்திருக்கிறோம்.கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெறும் தி.மு.க., ஆட்சியில் பங்கு தருவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறது. கேரளத்தில் கூட்டணி அரசில் அங்கம் வகித்த நீங்கள், இங்கு ஏன் வலியுறுத்த மறுக்கிறீர்கள்?
கேரளத்தில் முஸ்லிம் லீக் வலிமையாக உள்ளது. கடந்த தேர்தலில், 22 தொகுதிகளில் போட்டியிட்ட நாங்கள் இப்போது, 28ல் போட்டியிடுகிறோம். அங்கு கூட்டணி ஆட்சி கலாசாரம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை தனிக்கட்சி ஆட்சிதான். வருங்காலத்தில் எப்படி என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும்.மத சார்புள்ள நான்கு முஸ்லிம் கட்சிகள் உள்ள கூட்டணியை, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என அழைத்துக் கொள்வது முரண்பாடாக இல்லையா?
மதச்சார்பற்ற என்றால், மதங்களை மறுப்பது என்பதல்ல. முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்சி நடத்துகிறோம். நாங்கள் மதவாத கட்சி அல்ல. எந்த மதத்தினருக்கும் எதிரானவர்கள் கிடையாது. எனவே, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பதில் எந்த முரணும் இல்லை.பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, தொகுதியை குறைத்துக் கொண்டதாக, தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூறுகின்றன. பா.ஜ., எதிர்ப்பு மட்டும் போதும் என நினைக்கிறீர்களா?
தேசிய அளவில் பெரிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு இல்லை. தமிழகம் என்ற கடலில் தாமரை மலராது. வெற்றி பெறவே முடியாத பா.ஜ.,வை தோற்கடிக்க, எதற்காக முயற்சிக்க வேண்டும்; பா.ஜ.,வை தோற்கடிக்க தி.மு.க., கூட்டணி உருவாகவில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதைத்தான் எதிர்க்கிறோம்.அமீரகத்தின் மன்னரும்-, மோடியும் பரஸ்பரம் சகோதர உறவு கொண்டாடுகின்றனர். இருப்பினும், மோடியையும் பா.ஜ.,வையும் நீங்கள் ஏன் எதிர்கிறீர்கள்?
முஸ்லிம் நாடுகளுடன், பிரதமர் மோடி நட்பு பாராட்டுவது நல்ல விஷயம் தானே. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டுச் செல்ல, பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார் என்பதை, நாங்கள் மறுக்கவில்லை. அதற்காக முஸ்லிம் நாடுகளுடன் மிக நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரின் நல்ல முயற்சியை பாராட்டுவோம். தவறு செய்தால் தட்டிக் கேட்போம்.மோடி அரசின் வெளியுறவு கொள்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
நேரு காலம் முதல் அணிசேரா கொள்கையில், இந்தியா உறுதியாக இருந்தது. ஆனால், பிரதமர் மோடி காலத்தில் இஸ்ரேலுடன் காட்டும் நெருக்கம், இந்தியா அணிசேரா கொள்கையிலிருந்து விலகி விட்டதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் என்பது தனித்தீவு போன்றது. ஆனால், அரபு நாடுகளுடன் இந்தியாவுக்கு பொருளாதார உறவு உள்ளது. பல லட்சக்கணக்கான இந்தியர்கள், அரபு நாடுகளில் பணியாற்றுகின்றனர். எனவே, அரபு நாடுகளுடனான உறவை, இந்தியா நல்ல முறையில் தொடர வேண்டும்.நடிகர் விஜயின் த.வெ.க.,வில் முஸ்லிம் இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் சேருவதாக சொல்லப்படுகிறதே?
த.வெ.க.,வில் முஸ்லிம் ஆண்கள், பெண்கள் சேருவதாக, நானும் கேள்விப்பட்டேன். தமிழகத்தில், 'கள் வேண்டுவோர் கழகம்' என்ற அமைப்பை ஒருவர் துவங்கியதுபோது, அதில் கூட ஒரு முஸ்லிம் இருந்தார். ஆனால், முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் த.வெ.க.,வில் இணைய மாட்டார்கள்.இந்தியாவில் 25 கோடி முஸ்லிம்கள் இருந்தும், தேசிய அளவில் ஒரு கட்சி சாத்தியமாகவில்லை. முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை இல்லையா?
இந்தியாலில், 42,960 ஜாதிகளில் இருந்தும், முஸ்லிம் மதத்திற்கு மாறி வந்துள்ளனர். அவர்கள் முஸ்லிம் கொள்கையில் இருப்பர். ஆனால், 25 கோடி முஸ்லிம்களும், 'ஒரே மொழி, ஒரே பண்பாடு' என இருக்க மாட்டார்கள். தமிழக முஸ்லிம்கள் தமிழ் பண்பாட்டில் தானே இருப்பர். மாநிலங்களின் அரசியல் சூழலுக்கேற்ப முஸ்லிம்கள் முடிவெடுக்கின்றனர். அதனால்தான் ஒரே கட்சி சாத்தியமாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 18 )
உனக்கு காரியம் ஆகவேண்டும் அதனால் ஸ்டாலின் காலைப்பிடித்து அழுதுகொண்டிருக்கிறாய் .. அதற்க்கு இதெல்லாம் ஒரு கேடுகெட்ட விளக்கம்..
முஸ்லிம் விழாவில் இந்து மத திருமண மந்திரங்களை பற்றி தவறான புரிதலுடன் இழிவு படுத்தியவர் ஸ்டாலின். அவர் இந்து விரோதி.
நாத்திகன் என்று சொன்னதில்லை சரி இந்துக்களின் திருமணம், மந்திரங்களை கிண்டல் செய்தது போல முஸ்லிம், கிறிஸ்தவ மத சடங்குகளை கிண்டல் செய்ததில்லை. முஸ்லிம், கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொன்னது போல இந்து பண்டிகைகளை வாழ்த்துக்கள் சொன்னதே இல்லை. திமுகவின் விடியல் திராவிடத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மட்டுமே மதம்.
மாறி மாறி பேசிவிட்டால் மக்கள் உங்களை புத்திசாலி என்று எடைபோடுவாரகள் என்ற நினைப்பு.
பயங்கர முட்டு. நாத்திகம் இல்லையேல் கழகம் இல்லை. பொது வாழ்வில் ஒழுக்கமும் இல்லை.
அண்ணாரின் வார்த்தைகளில் உண்மையும், நேர்மையும் முழுதும் இல்லை, எப்போதும் பொய்யே எல்லா பாவங்களின் முதல் திறவு கோல், என்று புனித நூல்கள் சொல்லும், மேலும் உண்மையான இறை நம்பிக்கையும், பய பக்தி உள்ள வழிபாடும் ஆழ்ந்து நிலையில் அகத்தில் உணர்ந்து உள்ளோர், தன் சுய நலத்திற்காக எதிலும், எங்கேயும் எதற்காகவும் யாரிடமும் பொய் பேசார். முன் மாதிரியான தலைவன், தன் நிலை உணர்தல் நலமே
வேலூர் தேர்தல் வழக்கில் முஸ்லிம் லீக் தனிக்கட்சியல்ல. அது தி.மு.க வின் சிறுபான்மை அணிதான் என திமுக சார்பில் வாதிடப்பட்டது. வரலாறு முக்கியம்
He. may not himself nastik. But he lives as one by conviction letter and spirit.
சமீபத்தில் சிறுபான்மை பிரிவு இஃப்தார் விழாவில் மத குரு அரபியில் ஓதிய போது ஸ்டாலின் அமைதி காத்தார். ஆனால் ஆலயங்களில் தமிழில் மட்டும் அர்ச்சனை நடக்க வேண்டும் என்கிறார். முன்பு (மனைவி தவிர மற்றவர்கள் கூறும்?) ஹிந்து மந்திரங்களை கேட்டால் நடுக்கம் வருகிறது என்றார். இதுதான் ஆத்திக திமுக வின் உண்மை சொரூபம்.
ஸ்டாலின் தான் நாத்திகன் என்று சொல்லவில்லை. வாஸ்தவம்தான். ஆனால், இந்துக்கடவுள்களும், சனாதனமும் தான் அவருக்கு ஏற்புடையதில்லை. அவர் மகன், துணை முதலமைச்சர், சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு, ஒழிப்பேன் என்றார். தமிழக முதல்வராக அதனை கட்டு படுத்தவோ, கண்டிக்கவோ இல்லை. சிறுபான்மையினர் விழாக்களுக்கு மட்டும் வாழ்த்து சொன்னதோடு இந்து விழாக்களை இன்று வரை புறக்கணித்துள்ளார். மக்கள் பார்த்து கொண்டு தானிருக்கிறார்கள்.
நாத்திகன் என்று சொல்லமாட்டார் - ஆனால் இந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசுவார்
மேலும் செய்திகள்
ஒன்று, இரண்டு தொகுதிகளுக்காக வெற்றி வாய்ப்பை கெடுக்க விரும்பவில்லை; திருமா பேட்டி
மார் 24, 2026 01:35 pm
தொகுதி பங்கீட்டில் தமாகாவுக்கு அதிருப்தியா? பரவிய வதந்திக்கு ஜிகே வாசன் முற்றுப்புள்ளி
மார் 24, 2026 10:49 am
புதுச்சேரியில் தனித்துப்போட்டி; கூட்டணியால் தேவையற்ற மன உளைச்சல் என்கிறார் திருமா
மார் 24, 2026 10:58 am