/ செய்திகள் / (எரி)வாயு பிரச்னையை கிளப்பும் தி.மு.க.,

(எரி)வாயு பிரச்னையை கிளப்பும் தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

இந்த மாதம் பாதி கடக்கும் வரை கூட, சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., வசம் தகுந்த பேசுபொருளே இல்லாமல் இருந்தது. அதாவது, யாரை வில்லனாக்குவது என்று தெரியவில்லை. யாரையாவது அல்லது எதையாவது வில்லனாக்கி உணர்ச்சிப்பூர்வமாக திசை திருப்புவது தான் தி.மு.க.,வின் வழக்கமான பாணி. பல பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப, இப்போது கட்டாயம் வேறு!தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் போதை, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தான் எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள ஆயுதங்கள். இவற்றை பற்றி பேசுவதை மக்களும் வரவேற்கின்றனர். இவற்றில் இருந்து மக்களை திசை திருப்ப வேண்டுமே, எதுவும் சிக்கவில்லையே என்ற டென்ஷனில் இருந்த தி.மு.க.,விற்கு இப்போது லட்டு போல் ஒரு விஷயம் கிடைத்துள்ளது.

அட்சய பாத்திரம்

கடந்த 2019, 2021, 2024 தேர்தல்களில், பா.ஜ., பாசிச ஹிந்துத்துவ சக்தி என்றும், அது மாநில நலன்களை நசுக்கப் பிறந்தது என்றும் தி.மு .க., பிரசாரம் செய்தது. பா.ஜ.,வின் முகமான பிரதமர் மோடியையும் விட்டுவைக்கவில்லை. இந்த பிரசாரம் தி.மு.க.,வுக்கு ஓட்டுகளை அள்ளித்தரும் அட்சயப் பாத்திரமாக அமைந்தது.ஆனால், கடந்த மே மாதம் நடந்த 'ஆப்பரேஷன் ஸிந்துார்' நடவடிக்கைக்கு பின் நிலை மாறிவிட்டது. என்ன தான் 'ஒன்றிய அரசு' என்று தி.மு.க., சூளுரைத்தாலும், மக்கள் மத்தியில் வீரியமான வரவேற்பு இல்லை. இது போன்ற மாற்றங்களை கண்டுகொள்வதில் தி.மு.க.,வினர் தேர்ந்தவர்கள். அதனால் தான் கடந்த ஓராண்டாகவே, சம்பிரதாய அளவில் மட்டும், 'நிதி தரவில்லை' என மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய் கூட, முதலில், தி.மு.க., ஊழல்களோடு பா. ஜ.,வை கொள்கை எதிரி என பிரசாரம் செய்து வந்தார். ஆனால், மோடி எதிர்ப்புக்கு மக்களிடம் பேராதரவு இல்லை என்று அவரது ஆலோசகர்கள் கூறவே, பா.ஜ., விமர்சனத்தை நிறுத்திவிட்டார்.

ஈரான் - அமெரிக்கா போர்

இந்த சூழலில் தான் தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இன்று இல்லை. பழைய பகை என்பது எங்கும் காணக் கிடைக்கவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை விமர்சித்தால் ஓட்டு விழும் என்பதும் இல்லை. இலவசங்கள் எல்லாம் முடிந்த அளவு கொடுத்தாகிவிட்டது. இப்படிப்பட்ட பேசுபொருள் இல்லாத நிலையில் தான் தி.மு.க.,விற்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது சமையல் காஸ் தட்டுப்பாடு.ஈரான் -அமெரிக்கா போரால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர முடியாமல், கச்சா எண்ணெய் கப்பல்களும் இயற்கை எரிவாயு கப்பல்களும் சிக்கியுள்ளன. இதனால், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. வணிக சிலிண்டர், கிடைப்பது குதிரைக்கொம்பாகி உள்ளது. 21 நாளில் கிடைத்துவந்த வீட்டு உபயோக சிலிண்டர் தற்போது கிடைப்பதற்கு 30- - 35 நாட்களாகிறது.இது தற்காலிகமான பிரச்னை தான் என, மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் தினமும் விளக்கம் அளித்து வருகின்றன. ஆனால், இந்த பிரச்னை எப்போது தீரும் என யாராலும் தெளிவாக சொல்ல முடியவில்லை. காரணம் ஈரான்- - அமெரிக்கா போரில் நிறுத்தமோ திருப்பமோ வந்தால் தான் தீர்வு கிடைக்கும்.மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயம், தீர்வு எப்போது என்று தெரியாத விஷயம் என்பதால், மிக சாதுர்யமாக, இதை தேர்தல் பேசுபொருளாக மாற்ற தி.மு.க., முயற்சித்து வருகிறது. தற்காலிகமான பிரச்னை என்றாலும் தேர்தல் நடக்கும் வரையாவது நீடிக்கும் என்பது தி.மு.க., வின் கணக்கு. அதனால், சர்வதேச பிரச்னையை, மத்திய அரசிற்கு எதிரான பிரச்னையாக மாற்றி வருகிறது.தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, தமிழகம் முழுதும், மத்திய அரசுக்கு எதிராக, காஸ் தட்டுப்பாடை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அப்போது, தமது எக்ஸ் வலைப்பதிவில் ஸ்டாலின்:வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ., அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொலை நோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை. களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.நாடு முழுதும் உள்ள 'இண்டி' கூட்டணி கட்சிகள் இதை பிடித்துக்கொள்ளவே, அனைத்து இடங்களிலும் காஸ் தட்டுப்பாடு பற்றிய வதந்திகள் பரவத்தொடங்கின. அதை தொடர்ந்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், பிரதமர் மோடி, 'மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலை, உலகளவில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், இந்தியா எப்போதும் தயார் நிலையில், ஒன்றுபட்டு , எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் நாடு ஒன்றுபட்டு பிரச்னையைஎதிர்கொண்டது போல, இன்றும் அதே மனநிலையுடன் செயல்பட வேண்டும்' என்று பார்லிமென்டில் பேசினார். இப்படி பேசியது, எந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.இதையும் திரித்த ஸ்டாலின்:'கோவிட் காலத்தைப் போல' என பிரதமர் பேசியதால், ஏற்கனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள், மேலும் சிரமத்துக்கு பீதிக்கும் உள்ளாகப் போகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் வாயிலாக உடனடியாக இவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அதை செய்ய வேண்டிய ஒன்றிய பா.ஜ., அரசு, இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது.பா.ஜ., ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேச மாட்டோம் என, தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறது. சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? கொரோனா காலத்தை ஞாபகப்படுத்தும் விதமாக கூறிய மோடி, தயாராக இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார். அப்படி தயாராக இருக்க வேண்டியது நீங்களா... மக்களா?மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ., அரசு என்ன செய்கிறது? என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி. இவ்வாறு தனது எக்ஸ் வலைப்பதிவில் குறிப்பிட்டார். இதே போன்ற பதிவை மறுநாளும் வெளியிட்டார். முடிந்தவரை பிரச்னையை பெரிதாக்க தி.மு.க., முடிவு செய்திருக்கிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய பா.ஜ., வழக்கம் போல், அது வேறு யாருக்கோ பிரச்னை என்ற பாணியில் நடந்துகொண்டு இருப்பது, தி.மு.க.,வை மேலும் குஷிப்படுத்தி உள்ளது. இதை தி.மு.க., வெற்றிகரமாக பிரசாரம் செய்தால் பா.ஜ.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் கடும் வாயு பிரச்னையாக மாற வாய்ப்புள்ளது என, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 110 )

vivek
மார் 28, 2026 08:13

பாஜகவிலே கேஸ் ப்ராக்ளம். எப்பவுமே இருப்பது தான்.


vivek
மார் 28, 2026 08:12

கேஸ் எரிவாயு இல்லாமலேயே இங்கே பற்றி எரிகிறது.


M Ramachandran
மார் 27, 2026 20:20

உங்க்ளுக்கு ஜால்றா தட்டணும்னு எதிர் பார்கிறீங்க்க. அப்படி எய்தாள் அவர்கள் காட்சியை கலைத்து விட்டு உங்கட்சியிலேயே ஐக்கியம் ஆகி விடலாமே கமால் வைக்கோ மாதிரி. அப்புறம் பழனி என்ன செய்வது உங்களிடம் பிச்சை ஏந்தனும்ன்னு எதிர் பார்கிறீங்க்கள்ளா . அது சரி உலகளாவிய கொள்ளையடித்து திருப்தி இல்லையா. மட்ரவர்களும் மக்களை கொள்ளையடிக்கட்டுமே.


Barakat Ali
மார் 27, 2026 20:17

ஏன் ???? தன்னுடைய சாதனையாக சொல்லிக்கொள்ள ஒன்றுமே இல்லை ........


Nathan
மார் 27, 2026 20:07

திமுக தலைவர் சவுதி கத்தார் துபாயில் உள்ள தனது கழக உடன்பிறப்புகளிடம் பேசி எரிவாயுவை அனுப்பி வைக்க சொல்லி கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த லூலூ பாய் க்கு ஒரு போன் செய்ய வேண்டியது தானே


என்னத்த சொல்ல
மார் 27, 2026 21:15

அவரால் கண்டிப்பா செய்யமுடியும் நீங்கள் அவரை பிரதமர் ஆக்கினாள்.


ராஜா
மார் 27, 2026 19:36

ஆமாம் ஐந்தாண்டுகள் மணல் கடத்தல், டாஸ்மாக் வருமானம், சட்ட ஒழுங்கில் சந்தி சறுக்கல் என்று உண்மையை பேசி மக்களிடம் ஓட்டு கேட்டாலே போதும்...திமுக இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.


Palanisamy Sekar
மார் 27, 2026 19:28

இப்படியெல்லாம் செய்து ஆட்சிமன்றத்தை கொண்டுவந்த காங்கிரஸ், அது வடக்கே செல்லுபடி ஆகும். மொரார்ஜி தேசாயின் ஆட்சிக்கு வெங்காயமும் தங்கமும் விலையேற்றத்தை கண்டதால் காங்கிரஸ் அதனையே பிரதானமாக கொண்டு பொய் பிரச்சாரம் செய்து ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தார்கள் அது உண்மைதான். ஆனால் இன்றைய சூழலே வேறுமாதிரி. இப்போது ஒவ்வொருவரின் உள்ளங்கைகளிலும் உலகம் சுழல்கின்றது. நாட்டுநடப்பு நன்கு தெரிகின்றது. அதனால் ஊழலாவதிகளின் இப்படிப்பட்ட பிரச்சாரமானது எடுபடாது. மாறாக அவர்களின் ஊழல்கள்தான் வெளியே குப்பையாக வந்து விழும். அதனால் திமுக தனது கற்பனை கோட்டையை மூட்டைகட்டிவிட்டு வேறு யோசிக்கட்டும்.


என்னத்த சொல்ல
மார் 27, 2026 19:27

திமுக்காவிற்கு மத்திய அரசின் புள்ளிவிவரங்களே போதுமானது.. எல்லா துறையிலும் டாப் 2 ல் தமிழ்நாடு இருப்பதாகவே சொல்கிறது.. இதை அவர்கள் பிரச்சாரம் பின்னாலே போதுமானது.. வாயு பிரச்னையும் முக்கியம்தான். பிஜேபி சும்மா கோவில், மதநம்பிக்கை, ஆன்மிகம்னு பேசிட்டு இருந்தாலே போதுமானது திமுக வெல்ல.


Thirumal Kumaresan
மார் 27, 2026 18:32

இதை பைத்தியக்காரர்கள் தான் நம்புவார்கள் தமிழக மக்கள் அப்படிபட்டவர்களா, இல்லை திமுக துடைத்தெறியபடும்


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
மார் 27, 2026 18:01

ஊடகங்கள் என்று அரசியல் சார்பற்று மக்கள் பிரச்சினைகளை பேசுகின்றனவோ கேள்விகுறியாகவே உள்ளது