எடுபடாத பிரசாரம்; இலக்கில்லாத களம்
- நமது நிருபர் - இந்த தேர்தல், பொதுவான பேசுபொருளே இல்லாத, 'போர்' அடிக்கும் தேர்தலாக இருக்கிறது என்ற எண்ணம் பரவலாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, தலைவர்களின் பிரசார பேச்சு அடையாளப்படுத்தப்படுகிறது. வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவை அமையவில்லை.
ஸ்டாலின் பிரசாரம்
தன் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், தனது அரசின் சாதனைகளை, சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அறிவிப்புகளை வெளியிடுவது போல் வாசிக்கிறார். அதன்பின், தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை, குறிப்பாக இலவச திட்டங்களை பட்டியலிடுகிறார். தவறாமல், பா.ஜ.,வையும் மத்திய அரசையும் விமர்சிக்க கணிசமான நேரம் ஒதுக்குகிறார். மோடி அரசு ஹிந்தியை திணிக்கிறது; மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்துகிறது; சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்குகிறது; பள்ளிக்கல்வி நிதியை தர மறுக்கிறது; கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடாமல் தாமதம் செய்கிறது; தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களை தருவதில்லை என, கடந்த 12 ஆண்டுகளாக பேசியதையே பேசுகிறார். தவிர, மோடி பலவீனமான பிரதமர் என்றும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். வழக்கம்போல சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகளை குறிவைத்து, 'மதவெறி பார்வையுடன் பா.ஜ., அரசு செயல்படுகிறது' என மேடைதோறும் விமர்சிக்கும் ஸ்டாலின், நாகர்கோவிலில் பேசும்போது, 'விளவங்கோடு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் பெயரை, தென்னிந்திய திருச்சபை தெற்கு கேரள திருமண்டல செயலர் பிரவீன்' என அழுத்தம் திருத்தமாக சொல்லி ஓட்டு கேட்கிறார். இது, விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. மதுரை திருமங்கலத்தில் பேசிய ஸ்டாலின், 'தி.மு.க., கூட்டணி மத நல்லிணக்க மாடல், தே.ஜ., கூட்டணி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் ஆரிய மாடல்; மதுரையை மணிப்பூராக்க துடிக்கிறது' என்றார். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை விமர்சிக்கும் போதும், அவர் டில்லியின் அடிமை, மோடியின் அடிமை என்று, அதிலும் பா.ஜ.,வை தான் ஸ்டாலின் குறிவைக்கிறார். கடைசியில், ஜெயலலிதா பிரசார பாணியை பின்பற்றி, 'தி.மு.க.,வை ஏழாவது முறையாக ஆட்சியில் அமர்த்த நீங்கள் ரெடியா; திராவிட மாடல் 2.0விற்கு ரெடியா; டில்லி அணியா, தமிழக அணியா' என கேட்கிறார். இது பார்முலாவாகிவிட்டது. இதில் பிரச்னைகள் என்னவென்றால், மாநில தேர்தலில், மத்திய அரசை விமர்சிப்பது சம்பந்தமில்லாத விஷயம் என்பது போலவே மக்கள் கடந்து செல்கின்றனர். அது மட்டுமல்லாமல், மத்தியில் பா.ஜ., அரசு, அடுத்த பொது தேர்தலை சந்திக்க இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அதுவரை அக்கட்சி ஆட்சியே தொடரும். கடந்த ஐந்து ஆண்டுகளாக, மத்திய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என பேசினால், மீண்டும் தி.மு.க., ஆட்சி அமையும் போது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்குமே என்ற எண்ணம் தான் வாக்காளர்களின் மனதில் பிரதிபலிக்கிறது மும்மொழி கொள்கை போன்ற விஷயங்களை வாக்காளர்கள் கடந்து சென்று விட்டனர். இந்த ஏ.ஐ., யுகத்தில், பெரும்பாலானோருக்கு மொழி அரசியலில் ஆர்வம் இல்லை என்பதே நிதர்சனம் ஆப்பரேஷன் சிந்துார், ஈரான் விவகாரத்தில் பெட்ரோல் -- டீசல் விலை ஏற்றம் இல்லை என்ற விஷயங்களில் பிரதமர் மோடி மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அவரை பலவீனமான பிரதமர் என்று சொல்வதை பலர் ரசிப்பதில்லை சட்டசபை தேர்தலில் மாநில பிரச்னைகளை பேசாமல், எதிர்காலத்தை பற்றி பேசாமல், பழைய விஷயங்களையும் இல்லாத பூதங்களையும் பற்றி பேசுவது முதல்வரின் பிரசாரத்தையும் தி.மு.க., பிரசாரத்தையும் 'போர்' அடிக்கச் செய்துள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தமிழக பா.ஜ.,வில் அண்ணாமலையின் பாத யாத்திரை நடந்தது. அதையடுத்து, தமிழகத்துக்கு பிரதமரின் வருகைகள் தொடர்ந்தன. அதனால், தமிழக மக்கள் மனதில், 'பா.ஜ., அன்னிய கட்சி என்ற நிலையில் இருந்து, மற்றுமோர் கட்சி' என்ற நிலை ஏற்பட்டது. ஆனாலும், வரும் சட்டசபைத் தேர்தலுக்காக, வெறும் 27 சீட் தான் பா.ஜ., பெற்றுள்ளது. அதனால், அதை ஒரு அச்சுறுத்தலாக பெரும்பாலான தி.மு.க., வாக்காளர்களே கருதுவதில்லை.பழனிசாமி பிரசாரம்
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தன் பிரசாரத்தில் பெரும் பகுதியை, தமிழக அரசின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன்; கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை; போதை பொருள் விற்பனை; சட்டம் -- ஒழுங்கு சீரழிவு என, பேசியதையே பேசுகிறார். இவை எல்லாம் பேச வேண்டிய விஷயங்கள் என்றாலும், ஆளுங்கட்சிக்கு பயம் ஏற்படுத்தி, அவர்கள் பதில் சொல்லும் விதத்தில் பழனிசாமியின் பேச்சு இல்லை. ஆளுங்கட்சியை பதில் சொல்ல வைப்பதுதான், எதிர்க்கட்சியின் பிரசாரமாக இருக்க வேண்டும். மாறாக, ஸ்டாலின் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவே நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில் 8,900 கொலைகள் நடந்துள்ளன. போதை பொருள் கடத்தல் வழக்குகளில் கைதானவர்களில் பலர், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், கடந்த 2021ல் 6,852 ஆக இருந்த போதைப் பொருட்கள் தொடர்பான வழக்குகள், தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே 10,385 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் 68 பேர்; மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்தனர். பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில், மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்காததை கண்டித்து, வேங்கைவயல் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். ஆனால், இதையெல்லாம் பழனிசாமி தன் பிரசாரத்தில் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவது போல் பேசுவதில்லை. தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறார்; அதுவும் சம்பந்தமில்லாத பழைய விஷயங்களை கிளறி. தி.மு.க., பொதுச்செயலர் ஆ.ராஜா பேசியதாக, 'ஆடியோ' ஒன்று சமீபத்தில் வெளியானது. அதை பிரசாரத்தில் கையிலெடுத்த பழனிசாமி, தன்னை ஆளாக்கி வளர்த்த தந்தை கருணாநிதியை, முதல்வர் ஸ்டாலின் வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் என குற்றஞ்சாட்டினார். இதனால் கொந்தளித்து போன ஸ்டாலின், 'அமித் ஷாவிடம் அ.தி.மு.க.,வை அடகு வைத்துள்ள பழனிசாமி, தோல்வி பயத்தில் எல்லை மீறி பேசுகிறார். எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய கருணாநிதியை, நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக, நாக்கில் நரம்பின்றி பேசுகிறார்' என பதிலடி கொடுத்தார். இதுபோன்ற பழைய விஷயங்கள் தான், தேர்தல் களத்தில் பரபரப்பான விவாத பொருளாகி வருகின்றன. பழனிசாமி தான் இப்படி என்றால் கூட்டணியில் உள்ள தலைவர்களும், அவர் பாதையிலேயே செல்கின்றனர். சென்னை பெரம்பூரில் பிரசாரம் செய்த பா.ம.க., தலைவர் அன்புமணி, 'தி.மு.க.,வை வீழ்த்தவே, தே.மு.தி.க.,வை விஜயகாந்த் துவக்கினார். இப்போது, அதே தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருப்பதை விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை தாக்கினார். அதற்கு, டில்லியில் திரும்பி பார்க்க முடியாத அளவுக்கு ஊழல் வழக்கு உள்ளவர்கள், எங்களை விமர்சிக்கலாமா என கொந்தளித்தார் பிரேமலதா. இவர்களது பிரசார பேச்சில் பிரச்னைகள் என்னவென்றால்... தனிமனித தாக்குதல்கள் பற்றி சற்று நேரத்திற்கு பேசிவிட்டு மக்கள் நகர்ந்து விடுவர். அவை ஓட்டாக மாறாது. மாறாக, பழனிசாமியின் தரத்தை தான் குறைத்து காட்டும் தி.மு.க.,வை திட்டும் அதே நேரத்தில், அ.தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டால் இலவசங்கள் தவிர வேறு என்ன கிடைக்கும் என்று, பழனிசாமி இதுவரை தெளிவாக எடுத்துரைக்கவில்லை. அதாவது, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், எந்த விதத்தில் அவர்கள் வாழ்வு மேம்படும் என்பது பற்றி இன்னும் பழனிசாமி பேசவில்லை தி.மு.க., அரசின் குறைகள் அனைவருக்கும் தெரியும், அதனுடைய நிறைகளும் தெரியும். அவற்றில் குறைகளை துாக்கி காட்டுவதற்கு, வலுவான வாசகங்கள் தேவை. அவை பழனிசாமியிடம் இல்லை. அதனால், அவர் பேச்சு மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை பா.ஜ., கூட்டணியின் பலனாக 'டபுள் இன்ஜின்' ஆட்சி கிடைக்கும் என மறந்தும் சொல்வதில்லை. அதனால், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தும், பா.ஜ., அனுதாபிகளின் கவனத்தை கவர்வதும் கடினமாகிறது.இலக்கில்லாத பிரசாரம்
இவர்களுக்கு மாற்று என புறப்பட்ட த.வெ.க., தலைவர் விஜய், சில நாட்கள் பிரசாரம் செய்ததோடு வீட்டிலேயே முடங்கி விட்டார். பிரசாரத்திற்கு அனுமதி வாங்குவது, மறுப்பது என்பதிலேயே அவரது காலம் கழிகிறது. அவரும் தன் பிரசாரத்தில், ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறோம் என்பதை தெளிவாக சொல்லவில்லை. 'எனக்கும் ஸ்டாலின் சாருக்கும் தான் போட்டி' என்பதை மட்டும் கிளிப்பிள்ளை போல மீண்டும் மீண்டும் கூறுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களின் பிரச்னைகளை முன்வைத்தாலும், 'இந்த முறை, எனக்கு ஓட்டு போட்டா போடுங்க, இல்லாவிட்டால் போங்க' என, விரக்தியை வெளிப்படுத்தி வருகிறார். இப்படி, தி.மு.க., - அ.தி.மு.க., என அனைத்து கட்சி தலைவர்களும், எந்தவிதமான தொலைநோக்கு பார்வையும் தெளிவான இலக்கும் இல்லாமல், வழக்கமான பல்லவியை பாடுவதோடு, மனம்போன போக்கில், தனிமனித தாக்குதலை தொடுத்து வருகின்றனர். இதனால், தலைவர்களின் பேச்சுகள் சில நேரங்களில் சர்ச்சையாகிறதே தவிர, மக்களை கவரவில்லை. அவர்களின் வாக்குறுதிகளும், இலவசங்களை முன்னிறுத்தியே உள்ளன. ஆனால், எல்லா பிரதான கட்சிகளும் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளதால், இலவசங்கள் மீதான மக்களின் ஈர்ப்பு குறைந்திருப்பதாகவே தெரிகிறது. கடந்த முறை தேர்தலின் போது, நிறைய வாக்குறுதிகளை அள்ளிவிட்ட தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், எதையுமே செய்யாததால், இலவசங்கள் மீதும் மக்களுக்கு பிடிப்பில்லாத நிலையே களத்தில் காணப்படுகிறது. ஈரான் போர், உலக சூழல், தங்கம் விலை, சமையல் காஸ் விலை என, நிலையில்லாத சமூக சூழலில், நிலைத்தன்மையை தேடும் மக்களுக்கு, எந்த கட்சியின் பிரசாரமும் ஈர்ப்பாக இல்லை என்பதே நிதர்சனம். இலக்கோடு எந்த கட்சியும் தேர்தலை எதிர்கொள்ளவில்லை என்பதால், மக்களுக்கு களம் 'போர்' அடிக்க தொடங்கிவிட்டது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திமுக வுக்கும் அதிமுகவுக்கும் மற்ற பல கழகங்களுக்கும் கொள்கை வித்தியாசம் ஏதுமில்லை. அதனால் பிரச்சாரத்திற்கு ஒரே வழி தனிமனித தாக்குதல்கள்தான். இதுதான் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.
நல்ல வேளை. பிரசாரத்தை 14 நாட்களோடு கட்டுப் படுத்தி விட்டார்கள். இல்லாவிட்டால் அப்பப்பா தாங்க முடியாது. அந்த 14 நாட்களுக்கு எல்லா டிவி சேனல்களையும் தேர்தல் ஆணையமே கையில் எடுத்துக் கொண்டு தணிக்கை செய்யப்பட்ட பிரசாரத்தை மட்டும் ஒலிபரப்பலாம். மற்ற சமூக ஊடகங்களுக்கு 14 நாட்களுக்கு தடை விதித்து விடலாம்.
போலி ஜனநாயகம் ......... அம்பேத்கருக்கு நன்றி .........
இதனால் தான் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதே இல்லை!
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
ஏப் 08, 2026 08:04 am