வெள்ளமாக பாயும் பணம்: ஜெகத் ரட்சகன் மீது அன்புமணி புகார்

"தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது. தி.மு.க.,வினரின் விதிமீறல்களுக்கு தேர்தல் அதிகாரிகளே துணை போனால் தேர்தலை எவ்வாறு நியாயமாக நடத்த முடியும்?" என, பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரக்கோணம் லோக்சபா தொகுதியில் தோல்வி பயம் காரணமாக தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பணத்தை வெள்ளமாக வாரி இறைக்கிறார். தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார்கள் அளிக்கப்பட்டும் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான வளர்மதி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் அதிகாரிகள் ஆளும்கட்சியின் கைப்பாவைகளாக மாறி, மோசடிக்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. ஓச்சேரி கிராமத்தில் உள்ள தனியார் விடுதியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பா.ம.க., அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 4 வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால், பூபாலன் என்ற உதவி தேர்தல் அதிகாரி தலையிட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் வாகனத்தையும் விடுவித்திருக்கிறார். அந்த வாகனங்களுக்கு மாற்றாக வேறு ஒரு வாகனத்தை சோதனையிட்டதாகவும், அதில் பணம் இல்லை என்றும் போலியாக ஆவணங்களை தயாரித்துள்ளனர். இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல்.

தி.மு.க.,வினரால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட பனம் ரூ.34,000 இரண்டாடி கிராமத்திலும், ரூ.1,08,000 காட்டரம்பாக்கம் கிராமத்திலும் கைப்பற்றப்பட்டன. ஆனால், அவற்றின் மீது எந்த மேல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம் பா.ம.க. வேட்பாளர் வழக்கறிஞர் பாலு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் வலியுறுத்துகிறது. ஆனால், மாவட்ட தேர்தல் அதிகாரியே தி.மு.க.,வினரின் தேர்தல் விதிமீறல்களுக்கு துணை போனால் தேர்தலை எவ்வாறு நியாயமாக நடத்த முடியும்?

இது ஜனநாயகப் படுகொலைக்கு தான் வழிவகுக்கும். வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்கும் அரக்கோணம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் வளர்மதியை தேர்தல் அதிகாரி பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்