தி.மு.க.,வின் பொய்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்: பழனிசாமி பேச்சு

" சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் வெளியிட்ட 520 அறிவிப்புகளில் 10 சததவீதம் கூட நிறைவேறவில்லை. ஆனால், 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பொய் சொல்கிறார்" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

திருவள்ளுரில் தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:

அ.தி.மு.க., கூட்டணியை பற்றி ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். எங்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் அனைவரும் உழைப்பாளிகள். உங்கள் கட்சி பணக்கார கட்சி. ஆடை கூட கலையாமல் வாக்கு சேகரிப்பவர்கள் தான் உங்கள் கட்சியில் உள்ளனர்.

இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் நிறைய திட்டங்களை கொண்டு வருவோம் என ஸ்டாலின் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க., 14 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது, தமிழக மக்களுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தது?

எதையும் செய்யாமல், மத்தியிலும் மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் திட்டம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் கொள்ளையடிக்க சுலபமாக இருக்கும் என்பதால் தான் இண்டியா கூட்டணி என்ற போர்வைக்குள் ஸ்டாலின் இருக்கிறார்.

மத்தியில் ஆட்சி அதிகாரம் வேண்டும் என நினைத்திருந்தால் பா.ஜ., உடன் கூட்டணி வைத்திருப்போம். தேசியக் கட்சி என வரும் போது பாஜ.,வும் காங்கிரசும் மாறி மாறி வருகிறது. அவர்கள் மாநில கட்சிகளை புறக்கணிக்கின்றனர்.

தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அவர்கள் பார்வை தேசியத்தில் தான் இருக்கிறதே தவிர மாநிலத்தின் மீது இல்லை.

தேசிய அளவில் சட்டம் வரும்போது தமிழகம் பாதித்தால் அதை எதிர்த்து குரல் கொடுக்க முடியவில்லை, கூட்டணி தர்மம் என்ற ஒன்று தடுக்கிறது. இந்த நிலை மாறவே கூட்டணியில் இருந்து விலகினோம்.

38 எம்.பி.,க்களை வைத்திருந்த தி.மு.க., பார்லிமென்ட்டில் மக்கள் பிரச்னைக்காக என்ன குரல் கொடுத்தார்கள். அவர்கள் அங்கு நாற்காலிகளை தேய்த்தது தான் மிச்சம்.

என்னைப் பற்றி பிரசாரத்தில் ஸ்டாலின் பேசுவதால் என்ன நன்மை கிடைக்கப்போகிறது, நீங்கள் செய்த நன்மைகளைச் சொல்லி ஓட்டு கேளுங்கள். பார்லிமென்ட்டில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க முடிந்ததா?

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும் தி.மு.க.,வும் தான். இரட்டை வேடம் போடும் கட்சி தி.மு.க., பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்.

அ.தி.மு.க.,வின் 10 ஆண்டு கால ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் கண்டது. எங்கள் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை புள்ளி விபரத்துடன் குறிப்பிட்டு வருகிறேன். ஆனால் ஸ்டாலின் அது போல பேச மறுக்கிறார்.

நீங்கள் பேசும் பொய்களுக்கு இந்த தேர்தலோடு விடிவு காலம் பிறக்கும். சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் வெளியிட்ட 520 அறிவிப்புகளில் 10 சததவீதம் கூட நிறைவேறவில்லை. ஆனால், 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பொய் சொல்கிறார்.

நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இதுவரை ரத்து செய்யாதது ஏன். அ.தி.மு.க., மக்களுக்கு கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க., முடக்கிவிட்டது.

மாநில, மத்திய அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களை வஞ்சிக்கின்றது. துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடக்க காரணம் சில அரசியல் கட்சிகளின் துாண்டுதல் தான் காரணம். அதன் காரணமாகவே அந்த நிகழ்வு நடந்துவிட்டது. கருணாநிதி ஆட்சியில் விவசாயிகள் பம்புசெட்டு மின்சாரத்துக்கு விலையை குறைக்கக் கோரி போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல விவசாயிகள் இறந்தனர்.

அதில் இறந்த விவசாயிகளின் குடும்பங்கள் வறுமையில் இருப்பதை அறிந்த ஜெயலலிதா, 5 லட்ச ரூபாயை நிவாரணமாக கொடுத்தார். தி.மு.க., ஆட்சியில பல துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்வதற்கு 86 ஏக்கர் நிலம் தந்தது ஸ்டாலின். தி.மு.க., ஆட்சியை இருண்ட ஆட்சியாக மக்கள் பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்