பஞ்சாபில் சிக்சர் அடிக்கும் ஜாக்கர்

இந்த தேர்தலில் பா.ஜ., கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் மாநிலங்களில் ஒன்று பஞ்சாப். அங்கு, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது, வெகுநாள் கூட்டாளியான, சிரோமணி அகாலி தளம் விலகி நிற்கிறது. விவசாயிகள் போராட்டம் களத்தில் கோபத்தை உருவாக்கி இருக்கிறது.

இருப்பினும், பா.ஜ.,வின் ராஜதந்திர உத்திகள் காங்கிரஸ், ஆம் ஆத்மி மட்டும் அல்லாது அகாலி தளத்தையும் திகைத்து போக வைத்திருக்கின்றன. அதனால் பஞ்சாபில் பா.ஜ., பூஜ்ஜியம் தான் எடுக்கும் என்ற நிலை மாறி,கணிசமான இடங்களை கைப்பற்றும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

இதை சாத்தியப்படுத்தி வருபவர் பஞ்சாப் பா.ஜ., மாநில தலைவர் சுனில் ஜாக்கர்.

இதுவரை நடந்தவை



நாட்டிலேயே பழமையான மாநில கட்சியான அகாலி தளத்துடன், பா.ஜ., கூட்டணி அமைத்தே இவ்வளவு நாள் வண்டி ஓட்டியது. பஞ்சாபில் சீக்கியர்கள் 58 சதவீதம், ஹிந்துக்கள் 39 சதவீதம். சீக்கியர் ஓட்டுகளை அகாலி தளமும் ஹிந்து ஓட்டுகளை பா.ஜ.,வும் இணைத்ததன் மூலம், அந்தக் கூட்டணி இரு கட்சிகளுக்கும் தோதாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகவே அகாலி தளம் பலவீனமாகி வருகிறது.

பஞ்சாபில், 13 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2014ல் மோடி அலை, வடக்கை மூழ்கடித்த போதும் ஆறு இடங்களையே அகாலி தளம் - -பா.ஜ., கூட்டணியால் வெல்ல முடிந்தது.

கடந்த, 2019ல் நிலைமை இன்னும் மோசமானது. பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று இடங்களில் இரண்டும், அகாலி தளம், தனக்கு ஒதுக்கிக்கொண்ட 10 இடங்களில் இரண்டும் வென்றது. அந்த இரு இடங்களும் அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதலும், அவர் மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதலும் நின்றவை. எஞ்சிய இடங்களை காங்கிரசும் ஆம் ஆத்மியும் வென்றன.

அப்படிப்பட்ட நிலையிலும் கட்சியை வளர்ப்பதுதான் முக்கியம் என்பதால் பா.ஜ., அடக்கியே வாசித்தது. தன் இரு லோக்சபா உறுப்பினர்களில் ஒருவரான சோம பிரகாஷுக்கு, மத்திய இணை அமைச்சர் பதவி அளித்தது.

தேர்தலில் தோல்வியை தழுவிய ஹர்தீப் சிங் பூரியை ராஜ்ய சபா உறுப்பினராக்கி, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரும் ஆக்கியது.

அதேபோல, அகாலி தளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் பாதலுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்தது.

டில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றோரில் கணிசமானோர், பஞ்சாபை சேர்ந்த சீக்கிய விவசாயிகள். பா.ஜ., இந்த போராட்டத்தை எதிர்கொண்ட விதத்தால், அகாலி தளத்தின் கூட்டணி முறிந்தது.

இடையில், 2022 சட்டசபை தேர்தலில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இரண்டுமே மோசமான தோல்வியை சந்தித்தன. ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது.

காங்கிரஸ் தவறுகள்



ஆம் ஆத்மிக்கு முன்பு காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. 2017 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதோடு, 2019 லோக்சபா தேர்தலிலும் மாநிலத்தில் எட்டு இடங்களை வெல்ல காங்கிரசுக்கு உதவியவர், அப்போதைய முதல்வர் அம்ரீந்தர் சிங். அப்போது களத்தில் பெரும் பங்காற்றியவர் சுனில் ஜாக்கர். அப்போதைய மாநில காங்., தலைவர். முன்னாள் பிரதமர் இந்திராவின் விசுவாசியாகவும், முன்னாள் சபாநாயகராகவும் இருந்த பல்ராம் ஜாக்கரின் மகன்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவை களத்தில் முன்னிலைக்கு கொண்டு வருவதாக கூறி, முதல்வர் பதவியிலிருந்து அம்ரீந்தரை நீக்கியதோடு, கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து ஜாக்கரையும் நீக்கியது காங்., தலைமை. இந்த முடிவுகள், கட்சியை சகதிக்குள் தள்ளின.

இது பா.ஜ.,விற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.

பா.ஜ., ராஜதந்திரம்



கூட்டணியில் இருந்து அகாலி தளம் விலகிய நிலையில், பா.ஜ., தன் வட்டத்தைப் படிப்படியாக பெரிதாக்கியது.

காங்.,கில் இருந்து விலகிய அம்ரீந்தர் சிங், தனிக்கட்சி தொடங்கினார். பா.ஜ., அவருடன் கூட்டணி அமைத்தது. சுனில் ஜாக்கரை, 2021ல் கட்சிக்குள் இழுத்து மாநில தலைவராக்கியது. காங்.,, ஆம் ஆத்மி கட்சிகளில் இருந்து ஒரு கூட்டத்தையே இவர் பா.ஜ.,வுக்கு துாக்கி வந்துவிட்டார்.

இதற்கிடையில், அம்ரீந்தருடனான பா.ஜ.,வின் கூட்டணி தோல்வியில் முடிந்தது. இருப்பினும், கடந்த மாதம், அவர் மனைவி பிரணீத் கவுரை கட்சிக்குள் கொண்டு வந்து விட்டார் ஜாக்கர். நான்கு முறை எம்.பி.,யான பிரணீத் கவுருக்கு, பாட்டியாலாவில் நல்ல செல்வாக்கு உண்டு. இந்த தேர்தலில், பாட்டியாலாவின் வேட்பாளராக இவரை பா.ஜ., அறிவித்து இருக்கிறது.

பஞ்சாபின் 13 தொகுதிகளுக்கு தேர்வு செய்ய, 231 பேர் கொண்ட பட்டியலை டில்லி தலைமைக்கு ஜாக்கர் அனுப்பி வைத்தார்.

லுாதியானாவில் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரனும், மூன்று முறை எம்.பி.,யானவருமான காங்., தலைவர் ரவ்னீத் சிங் பிட்டுவும், ஜலந்தரில் கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே லோக்சபா எம்.பி.,யான சுஷில் குமார் ரிங்குவும், அமிர்தசரசில் முன்னாள் வெளியுறவு துறை அதிகாரி தரன்ஜித் சிங் சந்துவும் பா.ஜ.,வால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மூவருமே மிக சமீபத்தில் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டவர்கள். இதற்கெல்லாம் சூத்திரதாரி சுனில் ஜாக்கர்.

கலக்கத்தில் அகாலி தளம்



ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்தனியே இங்கு போட்டியிட்டாலும், தேசிய அளவில் அவை கூட்டணியில் உள்ளதால், ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிரான ஓட்டுகள் காங்கிரசுக்குப் போக வாய்ப்பில்லை. இந்த எதிர்ப்பு ஓட்டுகள் தன் பக்கம் திரும்பும் என்று எண்ணியே அகாலி தளம் தனித்து போட்டியிட துணிந்தது.

இப்போது, எல்லா தொகுதிகளிலும் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை பா.ஜ., நிறுத்துவதால், தனக்கான வாய்ப்பு பறிபோகுமோ என அகாலி தளம் அஞ்சுகிறது. ஏற்கெனவே சங்ரூர் இடைத்தேர்தலில் பா.ஜ.,வால் அகாலி தளம் பின்னுக்கு தள்ளப்பட்டது. மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு, 9 சதவீதமும், அகாலி தளத்துக்கு, 28 சதவீதம் ஓட்டு வங்கி இருக்கிறது என்றாலும், தொடர்ந்து அது சரிந்து வருகிறது.

கடைசி கட்டமாக, ஜூன் 1ல் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலம் இது. பா.ஜ., பாதி தொகுதிகளுக்கு தான் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்., மற்றும் ஆம் ஆத்மியில் தன் வேட்டையை முடித்துவிட்ட பா.ஜ., அடுத்து அகாலி தளம் நோக்கித்தான் நகர வேண்டும். அடுத்த இரு மாதங்களுக்குள் ஜாக்கர் என்னென்ன ஆட்டம் ஆட போகிறாரோ என்று பதற்றத்தோடு ஜாக்கரைப் பார்க்கிறது அகாலி தளம்!

-ஜனவாகன்- --கட்டுரையாளர், சுயாதீன பத்திரிகையாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)