வி.சி.,க்கு பானை... ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி: முடிவுக்கு வந்த சின்னம் சர்ச்சை

ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி சின்னத்தையும் வி.சி.,க்கு பானை சின்னத்தையும் ஒதுக்கி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், சின்னம் தொடர்பான குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் வி.சி.,க்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ம.தி.மு.க.,வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

தங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் கமிஷனில் ம.தி.மு.க., விண்ணப்பம் கொடுத்தது. அதனை தேர்தல் கமிஷன் நிராகரித்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தை ம.தி.மு.க., அணுகியது. 'பம்பரம் பொதுச் சின்னமாகவோ ஒதுக்கீட்டு சின்னமாகவோ இல்லாததால் தங்களுக்கு ஒதுக்குவதில் எந்த சிக்கலும் இல்லை' என, ம.தி.மு.க., வாதிட்டது.

இதற்குப் பதில் அளித்த தேர்தல் கமிஷன், "ஒரே மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் தான் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடியும். தவிர, அது பொது சின்னமாக அறிவிக்கப்படவில்லை. அதனை ஒதுக்கீடு செய்ய முடியாது" எனத் தெரிவித்தது.

நீதிமன்றமும், தங்களால் இந்த விவகாரத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, காஸ் சிலிண்டர் அல்லது தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கக் கோரி ம.தி.மு.க., விண்ணப்பித்தது. காஸ் சிலிண்டர் சின்னத்தைக் கேட்டு 4 பேர் விண்ணப்பத்திருந்ததால், தீப்பெட்டி சின்னம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்து, பானை சின்னத்தைக் கேட்டு பிப்.,2ம் தேதி தேர்தல் கமிஷனில் வி.சி., கடிதம் கொடுத்தது. அதற்குப் பதில் கொடுத்த தேர்தல் கமிஷன், 'உங்கள் கட்சி கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீத வாக்குகளைக் கூட பெறாத காரணத்தால் பொதுச் சின்னத்துக்கான கோரிக்கையை பரிசீலிக்க இயலவில்லை' என்று கூறி கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டை வி.சி., அணுகியது. "சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷன் முடிவெடுக்க வேண்டும்" என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், "பானை சின்னத்தை ஒதுக்க முடியாது" என தேர்தல் கமிஷன் கூறிவிட்டது.

ஆனாலும், பானை சின்னத்தில் போட்டி என்பதில் திருமாவளவன் உறுதியாக இருந்தார். இது குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட திருமாவளவன், "இந்த லோக்சபா தேர்தலில் நமது சின்னம் பானை. இந்த சின்னம் நமது உரிமை. இது கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.

தேர்தல் பிரசாரத்திலும் பானை சின்னத்துக்கே கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வாக்கு சேகரித்தனர். தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பானை சின்னத்தை வி.சி., கோரியது.

"விழுப்புரம் தொகுதியில் பானை சின்னத்தைக் கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால், அங்கு எளிதாக கிடைத்துவிடும்" என வி.சி., வட்டாரத்தில் கூறப்பட்டது. அதேநேரம், சிதம்பரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பானை சின்னம் கேட்டதால் வி.சி., தரப்பில் சற்று சந்தேகம் ஏற்பட்டது.

முடிவில், சிதம்பரம் தொகுதியில் தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்னா வி.சி.,க்கு பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்தார். அக்கட்சி விழுப்புரம் தொகுதியிலும் பானை சின்னத்திலேயே போட்டியிடுகிறது. இதன்மூலம், சின்னம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்