பானை சின்னம் கிடையாது: தேர்தல் கமிஷன் பதிலால் அதிர்ச்சியில் திருமா

"லோக்சபா தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பானை சின்னத்தை ஒதுக்க முடியாது" என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள சம்பவம், அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தலில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் வி.சி., போட்டியிடுகிறது. தமிழகத்தில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் திருமாவளவனும் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பிறகும் இன்னும் வி.சி., கேட்ட பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை.

இதுகுறித்து வி.சி., துணைப்பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும், 1 எம்.பி.,யையும் கொண்டிருக்கும் முக்கியமான அரசியல் கட்சியாக வி.சி., உள்ளது. ஐந்து மாநிலங்களில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பொதுச் சின்னம் ஒதுக்குமாறு பிப்ரவரி 2ம் தேதி தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டது.

அதற்குப் பதில் கொடுத்த தேர்தல் கமிஷன், 'உங்கள் கட்சி கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீத வாக்குகளைக் கூட பெறாத காரணத்தால் பொதுச் சின்னத்துக்கான கோரிக்கையை பரிசீலிக்க இயலவில்லை' என்றுகூறி கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டை வி.சி., அணுகியது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் கமிஷனின் வாதம் பொய்யானது என்பதை நிரூபிக்கும் வகையில், 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 1.51 சதவீத வாக்குகளையும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 1.18 சதவீத வாக்குகளையும் பெற்றதை நீதிமன்றத்தில் முன்வைத்தோம்.

இதன் விளைவாக, தேர்தல் கமிஷன் தன்னுடைய கடிதத்தை திரும்பப் பெற்றுள்ளது. இன்று மாலைக்குள் சின்னம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முதற்கட்ட வெற்றி.

த.மா.கா, அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுக்கு சுமூகமாக பொதுச்சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் கமிஷன், வி.சி.,க்கு மட்டும் தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வி.சி.,வுக்கு பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதனால் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு வி.சி., தள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாளை நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்வதற்கு வி.சி., திட்டமிட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்