மைக் வேண்டாம்... படகு கொடுங்க : சின்னத்தால் சீமான் குழம்பியது ஏன்?

லோக்சபா தேர்தலில் மைக் சின்னத்துக்கு பதில் மாற்று சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் கமிஷனில் நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் வைத்துள்ளது.

லோக்சபா தேர்தலில் போட்டியிட ஏதுவாக கரும்பு விவசாயி சின்னம் கோரி, தேர்தல் கமிஷனில் நாம் தமிழர் கட்சி கடிதம் கொடுத்தது. ஆனால், தாமதமாக விண்ணப்பித்ததால் அந்த சின்னம், கர்நாடகாவை சேர்ந்த பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் நடத்தியும் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஏற்கெனவே தேர்தல் கமிஷனில் கொடுத்த சின்னங்களின் பட்டியலில் இருந்து ஒரு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தெரிவித்தது.

இந்த கோரிக்கையை ஏற்று நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. 'சீமானுக்கு விருப்பமான சின்னமாக மைக் இருக்கும்' எனக் கூறப்பட்டது. ஆனால், இந்த சின்னத்தில் சீமானுக்கு உடன்பாடு இல்லை எனத் தகவல் வெளியானது.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திலும் மைக் சின்னத்தை முன்வைத்து சீமான் பேசவில்லை. இதுவும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மைக் சின்னத்துக்குப் பதில் படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இந்த மனுவின் மீது விரைவில் தேர்தல் கமிஷன் முடிவெடுக்க உள்ளது.

இது குறித்து நாம் தமிழர் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மைக் சின்னம் கொடுத்தாலும், அதை ஒலிவாங்கி என மக்களிடம் பேசினால், அந்த வார்த்தை சென்று சேருமா என்ற சந்தேகம் எழுந்தது. அந்த சின்னம் பார்ப்பதற்கு சரியான வடிவில் இல்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மைக் சின்னத்தை மக்கள் தேர்வு செய்வார்களா என்ற குழப்பமும் ஏற்பட்டது.

அதனால் படகு, பாய்மரப்படகு, ஆட்டோ, தீப்பெட்டி என மாற்று சின்னங்களை தேர்வு செய்து கொடுத்திருக்கிறோம். விரைவில் மாற்றுச் சின்னத்தை ஒதுக்குவார்கள் என நம்புகிறோம்" என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்