காமராஜர் இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்றே தெரியாது!

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.,வின் மூத்த தலைவர். கடந்த 1991 முதல் தொடர்ச்சியாக, லோக்சபா தேர்தலில், 10வது முறையாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். நம்பிக்கையோடு பேசுகிறார். மோடி ஆட்சி அமைப்பார், நான் வெற்றி பெறுவேன் என்கிறார். அவரது சிறப்பு பேட்டி:

கடந்த 2021-ல், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என்ற கோஷத்துடன் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்தீர்கள், தொண்டர்கள் வீட்டில் தங்கினீர்கள். ஆனால், நான்கு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அதன் பின் மூன்று ஆண்டுகளே கழிந்துஉள்ளன. ஆனால், இப்போது, பா.ஜ., வுக்கு 15 சதவீதம் ஓட்டு கிடைக்கும், ஒரு சில எம்.பி., தொகுதிகளும் கிடைக்கும் என கருத்து கணிப்புகள் வருகின்றன. இந்த மாற்றம் எப்படி வந்தது?

எனக்கு முன்பு இருந்த தலைவர்கள் எல்லாம் பலமான அஸ்திவாரம் போட்டனர். கடந்த 2016லேயே ஆட்சி அமைத்திருக்க வேண்டும். தமிழிசை, முருகன், காலத்தில் கடும் முயற்சி எடுக்கப்பட்டது. தற்போதைய தலைவர் அண்ணாமலை சிறப்பாக பணியாற்றுகிறார். உலக அளவில் பெயர் பெற்ற பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடக்கிறது. அதனால் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழக பா.ஜ.,வின் மூத்த தலைவர்கள் அனைவரும் பல்வேறு மாநிலங்களில் கவர்னராகி விட்டனர். உங்களை மட்டும், தேர்தலில் போட்டியிடும்படி, கட்சி ஏன் பணிக்கிறது?

கடந்த 37 ஆண்டுகளாக, நான் ஒரு முழுநேர ஊழியராக பணியாற்றுகிறேன். அதில் இருந்து பின்வாங்க தயாராகவில்லை. கவுரவ பதவிகளை நான் விரும்பாதவன்.

கடந்த 2019ல், 2.60 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வசந்தகுமார் உங்களை வென்றார். அதுவே, 2021 இடைதேர்தலில் விஜய் வசந்த், 1.38 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தான் உங்களை வென்றார். வித்தியாசம் குறைந்ததற்கான காரணம் என்ன? இந்த முறை அது தலைகீழாக மாறுமா? எப்படி?

கூட்டணி பலத்தில் வசந்தகுமார் வெற்றி பெற்றார். காலம் சென்றவரை பற்றி சொல்லக்கூடாது.

'குமரி, மேற்கு மாவட்டத்தில் ரோடு மோசமாக இருந்தது பற்றி கேட்ட போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேளுங்கள்' என்று நிருபர்களிடம் கூறினார். 'நான்கு வழிச் சாலைக்கும் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேளுங்கள்' என்றார். அப்போது தான் மக்கள் உணர துவங்கினர்.

இதனால், வசந்தகுமாரை அந்த பதவிக்கு பொருத்தமானவராக மக்கள் கருதவில்லை. அவரது வார்த்தைகளை மக்கள் கிரகித்து வைத்திருந்தனர். அதனால் அடுத்த தேர்தலில் ஓட்டு சதவீதம் குறைந்தது. வசந்தகுமார் படத்தை வைத்து ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் வெற்றி பெற்றனர். அல்லாத பட்சத்தில் பா.ஜ., சார்பில், 2021ல் நான் 1.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன்.

கடந்த 10 ஆண்டுகள் எம்.பி., எட்டு ஆண்டுகள் அமைச்சர். நீங்கள் சாதித்தது என்ன? செய்ய நினைத்தும் நடக்காமல் போன திட்டங்கள் உண்டா? அதை எண்ணி வருந்தியது உண்டா?

நிறைய இருக்கின்றன. ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் என் சாதனை. குழித்துறை பாலம். வீடுகள் வாங்க கடன் கொடுக்கும் வங்கியை கொண்டு வந்தேன். நான் தோற்றதால் அதை ரத்து செய்து விட்டனர். 'ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி சப் சென்டர்' வராமல் போனது.

இது வந்திருந்தால் உலக விளையாட்டு வரைபடத்தில் குமரி மாவட்டம் இடம் பெற்றிருக்கும். 60 ஆண்டு கால கனவான துறைமுகத் திட்டம், இ.எஸ்.ஐ. பல்நோக்கு மருத்துவமனை வராமல் போனது என் மனதை பாதித்தது. நான் தோற்றதை விட, என் மாவட்ட மக்கள் தோற்கடிக்கப்பட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன்.

வாஜ்பாய் அமைச்சரவையிலும், மோடி அமைச்சரவையிலும் பணியாற்றியுள்ளீர்கள். இருவருக்கும் இடையே என்ன வித்தியாசம்? வாஜ்பாயிடம் இல்லாத எது மோடியை இரண்டாம் முறை வெற்றிபெற செய்தது?

வாஜ்பாய் -தந்தை ஸ்தானத்தில் இருந்து வழிநடத்தினார். மோடி- மூத்த அண்ணன் இடத்தில் இருந்து வழிநடத்துகிறார். இரண்டு பேரிடமும் ஆழமான அன்பு இருந்தது. நடத்த வேண்டும், முடிக்க வேண்டும், செய்தாக வேண்டும். நாட்டை முதல் நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று மோடி உறுதியாக வழிநடத்துகிறார். வாஜ்பாய,் 23 கட்சி கூட்டணி அரசை நடத்தியதால் தந்தை ஸ்தானத்தில் வழிநடத்தினார்.

கடந்த 1991 முதல், ஒன்பது தேர்தல்களை சந்தித்துள்ளீர்கள். இந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டம் எவ்வாறு மாறியிருக்கிறது? அங்கு உள்ள வாக்காளர் எதிர்பார்ப்புகளில் மாற்றம் தெரிகிறதா?

நிச்சயமாக மாற்றம் தெரிகிறது. கனிமவள கடத்தலை கண்டு மக்கள் கவலைப்படுகின்றனர். தங்கள் மண், மலை, ஆறு, மரங்கள் திருடப்பட்டு கடத்தப்படுவதை கண்டு மக்கள் மனம் வருந்துகின்றனர். அவை கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக சொல்லும் அமைச்சர் மனோ தங்கராஜ் அதை வெளியிடாதது ஏன்? ஒரு எஸ்.ஐ., உட்பட ஆறு பேர் டாரஸ் லாரிகளால் கொல்லப்பட்டனர். மண், ஜல்லி இல்லை; கேரளாவுக்கு கடத்துகின்றனர். இதனால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்.

ஒரு அமைச்சர் தன் மகனை வைத்து ஆளுமை நடத்துகிறார். அவர் சார்ந்த மதம், ஜாதி, கட்சியினரை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் ஒட்டு மொத்தமாக மாற்றம் தெரிகிறது.

கன்னியாகுமரி தொகுதியில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாகி விட்டனர். அவர்கள் பா.ஜ.,விற்கு வாக்களிக்க வாய்ப்பிருக்கிறதா?

நீங்களே கடற்கரை கிராமத்தில் சென்று விசாரித்து பாருங்கள். மீனவர்கள் இறந்தாலே எம்.பி., என்ன என்று விசாரிப்பதில்லை. ஆறுதல் சொல்லக்கூட செல்வதில்லை. மீனவர்கள் மட்டுமல்ல, கிறிஸ்துவர்களும், பா.ஜ.,வுக்கும், பொன் ராதாகிருஷ்ணனுக்கும் வாக்களிக்க தயாராகிவிட்டனர்.

சமீபத்தில் விளவங்கோடு எம்.எல்.ஏ.,வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி பா.ஜ.,வில் இணைந்தார். அவர் கட்சியை விட்டு விலகியதால், உள்ளூர் காங்கிரசார் கொண்டாடினார். நிலை அப்படி இருக்க, அவரால் பா.ஜ.,வுக்கு ஏதேனும் பயன் இருக்குமா?

விஜயதரணி ஏன் சென்றார் என்று யோசித்து அதற்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு கொண்டாடுவது, 'அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்' என்று காத்திருப்பதை போன்றது. காமராஜர் இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்றே தெரியாது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், பிரதமர் பளபளக்கும் நெடுஞ்சாலைகளை திறந்து வைக்கிறார். நாகர்கோவில் - -திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பணி மட்டும், 20 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டே போகிறதே. இதற்கு யார் காரணம்?

நுாற்றுக்கு நுாறு மாநில அரசுதான் காரணம். ஜல்லி, மண், மணல் கொடுக்க மாட்டர். எப்படி ரோடு போட முடியும்? நிதின் கட்கரியை நான் சந்தித்து, 1,040 கோடி ரூபாய் பெற்றால், காங்., - எம்.பி., தான் வாங்கியதை போல் போஸ்டர் அடிக்கிறார். நான் வெற்றி பெற்றால், 2025க்கு முன்னதாகவே இந்த ரோட்டை முடித்து காட்டுவேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்கலை இல்லை என்ற குறை நெடுங்காலமாக இருந்து வருகிறது. பல மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மத்திய பல்கலைகள் உள்ளன. கன்னியாகுமரியில் ஏன் ஒரு மத்திய பல்கலையை கூட அமைக்க முடியவில்லை?

நிலம் இல்லாததுதான் பிரச்னை. நிலம் இருந்திருந்தால் வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே கொண்டு வந்திருப்போம். 5 ஏக்கர் நிலம் இருந்தால் கொண்டு வந்திருப்போம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்