கர்நாடகாவை தொடர்ந்து மஹாராஷ்டிரா: சீமானுக்கு அடுத்த சிக்கல்?

கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் (மார்ச் 15) விசாரணைக்கு வர உள்ளது.

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்குமாறு தலைமை தேர்தல் கமிஷனில் அக்கட்சி மனு அளித்தது. ஆனால், கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனு தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையின் போது வாதிட்ட தேர்தல் ஆணைய தரப்பு, ''விதிமுறை அடிப்படையில் மட்டுமே சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. பொது சின்னத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது. கரும்பு விவசாயி சின்னம் கோரி, நாம் தமிழர் கட்சி தாமதமாக விண்ணப்பித்தது'' என்றார்.

முடிவில், கரும்பு விவசாயி சின்னம் கோரிய நாம் தமிழரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு, நாளை மறுநாள் (மார்ச் 15) விசாரணைக்கு வர உள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கரும்பு விவசாயி சின்னத்தைப் பெறுவதற்கு சட்டரீதியாக போராடி வருகிறோம். ஒருவேளை கிடைக்காவிட்டால், மாற்று ஏற்பாடாக 15 சின்னங்களின் பெயர்களை குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருக்கிறோம்.

தற்போது, அதிலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. நாங்கள் கொடுத்த சின்னத்தின் பட்டியலில் 'இசைக்கருவியை முழங்கும் மனிதன்' சின்னம் உள்ளது. இந்த சின்னம் ஏற்கெனவே சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-சரத் சந்திர பவார் என்ற புதிய கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவை தவிர வேறு மாநிலத்தில் அவர்கள் போட்டியிடவில்லை என்றால் மட்டுமே, நாம் தமிழருக்கு இந்த சின்னம் வந்து சேரும். இதையும் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தால், படகு, மைக் உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்