தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 9+1 : முடிவுக்கு வந்த தொகுதிப் பங்கீடு

தி.மு.க., கூட்டணியில் புதுச்சேரியுடன் சேர்த்து காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கடந்த சில நாள்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தீவிரம் காட்டி வந்தார். அக்கூட்டணியில் இ.கம்யூ, மார்க்சிஸ்ட் கம்யூ, வி.சி, ம.தி.மு.க, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில், வி.சி., போட்டியிடும் 2 தொகுதிகள் குறித்தும் முஸ்லீம் லீக், கொ.ம.தே.க., ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்த விவரங்கள் மட்டும் வெளிவந்துள்ளன. ம.தி.மு.க, இடதுசாரி கட்சிகளுக்கான தொகுதி நிலவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கூட்டணியில் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதால், இருதரப்பிலும் இழுபறி நீடித்து வந்தது. இது குறித்து பேட்டியளித்த தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, 'ஓரிரு நாளில் நல்ல செய்தி வரும்' எனக் கூறியிருந்தார்.

அதன்படி, இன்று அறிவாலயத்தில் தி.மு.க., காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. இந்த உடன்பாட்டின்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அகில இந்திய காங்., பொதுச்செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முடிவில், தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடுக்குப் பின் காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், "தமிழகம் புதுச்சேரியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபடுவார்கள்" என்றார்.

காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:

தமிழ் பெருமை மீது மோடி அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. மோடி அரசை வீழ்த்துவதற்கு தமிழக மக்கள் முன்னுதாரணமாக இருப்பார்கள். தி.மு.க கூட்டணி என்பது கருணாநிதி-சோனியா நட்பு எப்படி நீடித்ததோ, அதேபோன்ற நட்பு இப்போதும் தொடர்கிறது. பா.ஜ.,வை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை இண்டியா கூட்டணி முன்னெடுத்துள்ளது.

அந்தப் போராட்டத்தில் மிக வலுவான கரமாக தி.மு.க கைகோத்துள்ளது. தி.மு.க.,வுடன் எங்கள் கூட்டணி பலமாக அமைந்துள்ளது. தோழமைக் கட்சிகள் போட்டியிடும் இடங்களில் வெற்றிக்காக காங்கிரஸ் பாடுபடும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது விரைவில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்