லோக்சபா தேர்தல்: பா.ஜ.,வில் ஓ.பி.சி.,க்கு அதிக வாய்ப்பு

ராஜஸ்தான் லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் ஐந்து, 'சிட்டிங்' எம்.பி.,க்களை கழட்டிவிட்டு, ஏழு புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்ததன் வாயிலாக, அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கும், புது முகங்களுக்கும் இடையே ஒரு சமநிலையை பராமரிக்கும் உத்தியை பா.ஜ., இந்தமுறை கையில் எடுத்துள்ளது.

நாடு முழுதும் உள்ள 16 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் இருந்து போட்டியிடும் 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ., தலைமை சமீபத்தில் வெளியிட்டது. இதில், ராஜஸ்தான் லோக்சபாவுக்கு மொத்தமுள்ள 25 தொகுதிகளில், 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பான்மை சமூகம்



தற்போது எம்.பி.,க்களாக உள்ள ராகுல் கஸ்வான், தேவ்ஜி படேல், ரஞ்சிதா கோலி, அர்ஜுன் லால் மீன, கனக்மால் கட்டாரா உள்ளிட்ட ஐந்து பேருக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. மாறாக, ஏழு புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., பலவீனமாக உள்ள தொகுதிகளில், அங்கு பெரும்பான்மை வகிக்கும் சமூகத்தினருக்கு இந்தமுறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



அந்த வகையில் புதுமுகங்களாக தேர்வாகி உள்ள ஏழு பேருமே, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்.

அதில் ஒரே பெண் வேட்பாளரான ஜோதி மிர்தா, ராஜஸ்தானின், ஷெகாவத்தி பிராந்தியத்தில் இருந்து நான்கு முறை எம்.எல்.ஏ.,வாகவும், ஆறு முறை எம்.பி.,யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாட் சமூக தலைவரான மறைந்த நாதுராம் மிர்தாவின் பேத்தி.

இவர், அந்த பகுதியில் ஜாட் சமூக ஓட்டுக்களை அள்ளுவார் என்ற கணக்கில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ஜோதி மிர்தா பா.ஜ.,வில் இணைந்தார். இவருக்கு நாகவுர் சட்டசபை தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வி அடைந்தார். இந்தமுறை தங்கள் கணக்கு தப்பாது என பா.ஜ., தலைமை உறுதியாக நம்புகிறது.

முதல் பட்டியலில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜுன் ராம் மேக்வால், பூபேந்திர சிங் யாதவ் ஆகியோருக்கு மறு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இவர்களை தவிர, சிட்டிங் எம்.பி.,க்களான சுமேத்தானந்த் சரஸ்வதி, மாநில பா.ஜ., தலைவர் சி.பி.ஜோஷி, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங் ஆகியோருக்கும் சீட் வழங்கப்பட்டுஉள்ளது.

கலவையான பட்டியல்



மிக சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் காங்., மூத்த தலைவரும், பழங்குடியின பிரமுகருமான மகேந்திர ஜீத் மால்வியாவுக்கு பன்ஸ்வாரா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் ஓட்டுக்களை இவர் கணிசமாக பெற்றுத் தருவார் என நம்பப்படுகிறது.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு சீட் வழங்கிய பா.ஜ., தலைமை, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு இந்த முறைவாய்ப்பளித்துள்ளது.

அனுபவம் வாய்ந்த தலைவர்களை ஒதுக்கிவிடாமல், அதே நேரம், புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கும் ஒரு கலவையான பட்டியலை பா.ஜ., தலைமை இந்தமுறைவெளியிட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்