30 ஆண்டுகளுக்கு பின் இலை: சூரியன் நேரடி மோதல்
பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் 30ஆண்டுகளுக்கு பின் தி.மு.க.,-அ.தி.மு.க.,நேரடியாக போட்டியிட உள்ளன. இதனால், களத்தில் உள்ள கட்சியினர் குஷியாகி இருக்கின்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,அண்ணாதுரை, அ.தி.மு.க.,சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,சேகர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் கடைசியாக நேரடியாக போட்டியிட்டடது. இதில் தி.மு.க., வெற்றி பெற்றது.அதன்பின், 2001ம் ஆண்டு தேர்தலில் த.மா.க.,வும், தி.மு.க.,வும் போட்டியிட்டன. 2006ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரசும் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற ம.தி.மு.க.,வும் போட்டியிட்டன.
2011ம் ஆண்டு தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வும் போட்டியிட்டன.2016ம் ஆண்டு தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.,வும் போட்டியிட்டன. 2021ம் ஆண்டு தி.மு.க.,வும், அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா.,கட்சியும் போட்டியிட்டன.
1996 ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டுமே தி.மு.க.,-அ.தி.மு.க., நேரடியாக போட்டியிட்டு அதன் வேட்பாளர்களை நிறுத்தியது. அதன்பின் கூட்டணி கட்சிகள் தான் போட்டியிட்டு வந்தன. இந்நிலையில் 30 ஆண்டுக்கு பின், தி.மு.க.,-அதி.மு.க.,வும் நேரடியாக நடப்பாண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளன.
பட்டுக்கோட்டையில் 30 ஆண்டுகள் கழித்து தி.மு.க.,வும்-அ.தி.மு.க.,வும் நேரடியாக போட்டியிடுவது கட்சியினரிடைய குஷியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்