வேட்பு மனு தாக்கல் எப்படி? வழிகாட்டும் தேர்தல் பிரிவினர்
திருப்பூர்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளருக்கு ஒருவரும், மற்ற வேட்பாளர்களுக்கு 10 பேரும், வேட்புமனுவை முன்மொழிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வேட்பு மனு தாக்கல், 30ம் தேதி துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் களம் காண, அ.தி.மு.க., - கூட்டணி, தி.மு.க., கூட்டணி, நா.த.க. - த.வெ.க. உள்ளிட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான பயிற்சி கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். அவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கண்ணன் உள்பட தேர்தல் பிரிவினர் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பயிற்சியின்போது தேர்தல் பிரிவு அதிகாரிகள் பேசியதாவது:
வேட்பு மனு தாக்கல், வரும், 30ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, படிவம் - 1 வாயிலாக, அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பு மனு பெறப்படும் தேதி, கடைசி நாள், பரிசீலனை நாள், வேட்பு மனுக்கள் பெறப்படும் இடம் ஆகிய விவரங்களை வெளியிடுவர்; அதன்பின், வேட்பு மனுக்கள் பெறப்படும். அரசு விடுமுறை நாட்களான, 31ம் தேதி, ஏப். 1, 3, 5ம் தேதிகளில் வேட்பு மனு பெறப்படாது. இம்மாதம் 30 ம் தேதி, ஏப். 2, 4, 6 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்கள் பெறப்படும். காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை மட்டுமே வேட்பு மனுக்கள் பெறப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளருக்கு, ஒருவரும், மற்ற வேட்பாளர்களுக்கு, பத்துபேரும், மனுவை முன்மொழிய வேண்டும். முன்மொழிபவர், கட்டாயம் அந்த சட்டசபை தொகுதியில் வாக்காளராக இருக்கவேண்டும். வேட்பாளர், போட்டியிடும் தொகுதியை சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை. எந்த தொகுதியை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதேநேரம், வேட்பாளர், தனது சொந்த தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்து சான்று பெறவேண்டியது அவசியம். வேட்பு மனுவான படிவம் - 2பி, ஆறு பகுதிகளை உள்ளடக்கியது. முதல் பகுதி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கானது. இரண்டாவது பகுதி, அங்கீகரிக்கப்படாத மற்றும் கட்சியினர்.
பகுதி - 3ல், வேட்பாளர் சுய விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும். பகுதி - 3ஏ வில், ஏதேனும் குற்ற வழக்குகள் இருப்பின் அவ்விவரங்களை குறிப்பிட வேண்டும். பகுதி - 4ல், வேட்பு மனு பெறப்பட்ட தேதி, நேரம் விவரங்களை, தேர்தல் நடத்தும் அலுவலர் பூர்த்தி செய்வார். பகுதி - 5ல், மனு பரிசீலனை தொடர்பான விவரங்களை, தேர்தல் நடத்தும் அலுவலர் குறிப்பிடுவார். பகுதி - 6 என்பது, மனு தாக்கல் செய்யும் வேட்பாளருக்கு ஒப்புகைச்சீட்டாக வழங்கப்படும். வேட்பு மனுவில் பெயர் உள்பட அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யவேண்டும்.
இந்த தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்படும் 'பேலட் ஷீட்'டில், வேட்பாளரின் கலர் போட்டோ சேர்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் தேதியிலிருந்து மூன்று மாதத்துக்குள் எடுக்கப்பட்ட வேட்பாளரின் போட்டோவையே, வேட்புமனுவில் இணைக்கவேண்டும். வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் நிறைவு நாளான ஏப். 6ம் தேதி, மாலை, 3:00 மணிக்குள், உறுதி மொழி பத்திரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.
இவ்வாறு, அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்