மக்கள் 'அழுக்கை' வாங்கி ஓட்டு போடுவதால் நல்ல வேட்பாளர்களால் வெற்றி பெற முடியவில்லை
த.மா.கா., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாசன், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
கடந்த காலங்களில் நடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களில், த.மா.கா., வேட்பாளர்கள், தென்னந்தோப்பு, ஆட்டோ, இரட்டை இலை, சைக்கிள் போன்ற சின்னங்களில் போட்டியிட்டனர்; தற்போது தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். சின்னம் மாற்றத்தில் தடுமாற்றம் ஏன்?
கடந்த 2014ல் காங்கிரசிலிருந்து வெளியேறி, த.மா.கா.,வை துவக்கினோம். கடந்த 2016 சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் இருந்தோம். சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம்.
அப்போது, ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியிடம் அந்த சின்னம் இருந்ததால் கிடைக்கவில்லை. விவசாயிகள் நலன் காக்கும் தென்னந்தோப்பு சின்னத்தை பெற்று, தேர்தலை சந்தித்து, வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டோம். மீண்டும், 2021 சட்டசபை தேர்தலில், அதே கூட்டணியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விண்ணப்பித்த போது, தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்தது. ஆறு தொகுதிகளில் போட்டியிட பிரபல சின்னம் தேவை.
ஆட்டோ சின்னத்தை, 'ரீச்' பண்ண முடியாத காரணத்தால், பிரபலமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டோம். அதிலும், த.மா.கா., வேட்பாளர்கள் வெற்றிபெற முடியவில்லை.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., இடம் பெறவில்லை. பிரதமர் மோடியை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக, பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இருந்தோம். நாங்கள் விரும்பிய சைக்கிள் சின்னம் கிடைத்தும், மூன்று தொகுதிகளில் வெற்றியை இழந்தோம்.
வரும் சட்டசபை தேர்தலில், 12 தொகுதிகளில் போட்டியிட்டால் சைக்கிள் சின்னம் கிடைக்கும். ஆனால், எங்களுக்கு தே.ஜ., கூட்டணியில் ஐந்து 'சீட்' தான் கிடைத்தது. எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டேன்.
கூட்டணி கட்சிக்கு நம்பிக்கையூட்டும் வகையில், முதன்மையான கொள்கை ரீதியில், தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தோம். இலை மேல் தான் தாமரை உள்ளது. கட்சி தான் வேறு; ஆனால் கூட்டணி ஒன்று. நாங்கள் ஒன்றும் டேபிள், சேர், புட்பால், கார், டயர், சோப் போன்ற சின்னத்தை தேர்வு செய்யவில்லையே? மத்தியிலும் மாநிலத்திலும் 'டபுள் இன்ஜின்' ஆட்சி நடந்தால் தான், மாநிலம் வளர்ச்சி பெறும்.
தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கவே, தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். அந்த சின்னம், கடந்த உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் போட்டியிட்டு உள்ளதால், கிராமங்களில் நன்றாக ரீச்சாகியிருப்பது, எங்களுக்கு பலன் தரும்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் தோல்வி அடைவோம் என்ற பயத்தாலேயே, நீங்கள் தாமரையை தேர்வு செய்துள்ளதாக, நடிகர் கருணாஸ் கூறியுள்ளாரே...
மரியாதைக்குரியவர் கருணாஸ். கடின உழைப்பாளி. சிறந்த காமெடி நடிகர். சமூக பணி ஆற்றக்கூடியவர். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. தமிழகத்தின் முதன்மை கட்சி அ.தி.மு.க. இந்தியாவின் முதன்மை கட்சி பா.ஜ. இரட்டை இலை சின்னம் பிரபலம் இல்லை என சொல்பவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை.
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை தவிர்த்து, பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தீர்கள். அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கியதை மறந்து, பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்ததால், பழனிசாமி உங்கள் மீது வருத்தப்பட்டது உண்மையா?
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியை ஆதரித்து, தே.ஜ., கூட்டணியில் இணைந்தோம். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பழனிசாமியை ஆதரித்து கூட்டணியில் இருந்தோம். அடுத்து 2024 லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியை ஆதரித்து, தே.ஜ., கூட்டணியில் சேர்ந்தோம். அ.தி.மு.க., வுடன் கூட்டணி இல்லாமல் இருந்தாலும், எங்கள் இருவரின் நட்பு தொடர்ந்தது. நானும், பழனிசாமியும், பல்வேறு இடங்களில் சந்தித்து பேசி, நட்பை தொடர்ந்து பேணி வருகிறோம்.
லோக்சபா தேர்தலில் பிரிந்த அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, மீண்டும் உருவாக நீங்கள் பாடுபட்டீர்கள். அன்புமணிக்கு அ.தி.மு.க., வழங்கியதை போல், பா.ஜ., உங்களுக்கு ஏன் ராஜ்யசபா எம்.பி., வழங்கவில்லை?
நான் த.மா.கா., தலைவர். எந்த கட்சிக்கும் இடையே, நான் கூட்டணி பேச்சு நடத்தவில்லை. கூட்டணி என்பது, அந்தந்த கட்சி தலைவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., கொடுத்தது, எங்கள் கூட்டணிக்கு பலம். மனதார சந்தோஷப்படுகிறேன். ராஜ்யசபா எம்.பி., சீட்டை நான் கேட்கவில்லை. சட்டசபை தொகுதிகளை அதிகமாக கேட்பதிலேயே கவனம் செலுத்தினேன்.
தே.ஜ., கூட்டணியில், த.வெ.க., இடம் பெற வேண்டும் என, நீங்கள் அழைப்பு விடுத்தீர்கள். வேறு என்ன முயற்சி எடுத்தீர்கள்?
நான் அழைப்பு விடுக்கவில்லை. தி.மு.க., அரசை வீழ்த்த, எங்கள் வெற்றிக்கு பலம் சேர்க்கும் கட்சிகள், துணை நிற்க வேண்டும் என்றேன். எந்த கட்சியும் வரலாம்; வராமலும் இருக்கலாம். அவர்கள் முடிவை பொறுத்தது. எந்த கட்சிகள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதில், அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் எடுக்கும் முடிவுதான் இறுதியான முடிவு.
தேர்தல் முடிந்ததும், த.மா.கா.,வை பா.ஜ.,வில் இணைத்து, மத்திய அமைச்சராகும் திட்டத்துடன் தான் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக, உங்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே...
கடைந்தெடுத்த பொய் மட்டுல்ல, கட்டுக்கதையும் கூட. கூட்டணி வெற்றியை தடுத்து, த.மா.கா.,வின் குரல் சட்டசபையில் ஒலிக்கக்கூடாது என, நினைப்போரின் தவறான எண்ணம். அதற்கெல்லாம் நான் மு க்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு பலமுறை இருந்தது.
இந்த தேர்தலில் நீங்கள் ஏன் போட்டியிடவில்லை? உங்கள் தந்தை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது போல், நீங்கள் வெற்றி பெற்றிருக்கலாமே?
என்னை பொறுத்தவரை, நான் போட்டியிடுவதை விட, கட்சியில் என் விசுவாசிகள் போட்டியிட வேண்டும். அதற்கு எங்கள் கட்சிக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தொகுதிகள் கிடைக்க வேண்டும். கட்சி தலைவர் என்ற முறையில் அதிக தொகுதிகளை வாங்கி, போட்டியிட விரும்புவோருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் என் உள்மனதில் துடித்ததால், நான் போட்டியிடுவது குறித்து சிந்திக்கவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில், ஆறு தொகுதிகளில் போட்டியிட்டீர்கள். இப்போது ஐந்து தான். தொகுதி குறைப்புக்கு ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?
எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நல்லெண்ணம் தான் பெரியது; எண்ணிக்கை குறைந்தது பெரிதல்ல.
தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில், அசோக்குமார், அமைச்சர் காந்தியை சந்தித்து பேசிய புகைப்படம் சர்ச்சையாகி உள்ளதே...
சமூக வலைதளங்களில் 'படம்' காட்டுகின்றனர். அதாவது 'சீன்' காட்டுகின்றனர். நலம் விசாரிக்கும் படம் வெளிவரக் கூடாதா. அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருப்பவர்கள் சந்தித்து பேசும் படம் வரக்கூடாதா. பல சந்தர்ப்பங்களில் எதிர் எதிரே சந்திக்கும்போது படம் எடுப்பது சர்வ சாதாரண விஷயம். இதை, சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றுவோர் எண்ணம் தான் உள்நோக்கம் கொண்டதாக இருக்கும்.
ஆளுங்கட்சியின் மூன்று அமைச்சர்களை எதிர்த்து, உங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற முடியுமா? தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெறும் தொகுதிகள் என்பது தெரிந்தும், அவற்றை நீங்கள் வாங்கியது எந்த நம்பிக்கையில் என சொல்லுங்களேன்?
தி.மு.க., அமைச்சர்கள் மீது, மக்களிடம் கோப அலை வீசுகிறது. தி.மு.க., ஆட்சியின் மீது எதிர்ப்பு அலையும் வீசுகிறது. ஊழல்வாதிகளை வெற்றி பெற வைக்கக்கூடாது என்பது மக்கள் எண்ணமாக உள்ளது.
கூட்டணியில் இருந்தும், உங்கள் கட்சியினரால் வெற்றி பெற முடியாததற்கு என்ன காரணம்?
மக்கள் நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என, சிந்தித்து ஓட்டு போட முன் வரவில்லை. ஆளுங்கட்சியினர் தரும் அழுத்தத்தை, கவனிப்பை அதாவது அந்த 'அழுக்கை' வாங்கி ஓட்டு போடுவதால் தான், மக்களுக்கு தொண்டு செய்ய நினைக்கும் நல்ல வேட்பாளர்கள் வெற்றி பெற முடியவில்லை.
உங்கள் மகனை அரசியலுக்கு கொண்டு வரும் எண்ணம் இருக்கிறதா?
நிச்சயமாக, 101 சதவீதம் இல்லை. நான் அரசியலுக்கு வருவேன் என, கனவில் கூட நினைக்கவில்லை. என் தந்தை மூப்பனாரும் விரும்பவில்லை. அவரது மறைவுக்கு பின், அரசியலுக்கு அழைக்கப்பட்டேன். பொது வாழ்க்கைக்கு யார் யார் வர வேண்டும் என்பதெல்லாம், தனிமனிதனிடம் இல்லை; இறைவன் கையில் தான் உள்ளது.
அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்கள், மாணவர்கள் முதலில் நாட்டை பற்றியும், சுதந்திரப் போராட்ட தலைவர்கள் பற்றியும் அனைத்து துறைகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லெண்ணத்துடன், அரசியலுக்கு வருவோர்தான் மக்கள் பணியை சிறப்பாக செய்ய முடியும்.
Advertisement
இவரைப் போன்ற நல்ல அமைதியான சிறந்த பண்பு கொண்டஅரசியல் வாதிகள் பெரும்வெற்றி பெற இயலாது இருப்பது நமது துரதிர்ஷ்டம்
அந்த அழுக்கை காப்பாற்ற தானே நீங்களே கூட்டணியில் இருக்கிறிர்கள்
மனதில் அழுக்கும் வன்மமும் கொலை கொலைவெறியும் கொண்டவர்களை ஆட்சி செய்ய அனுமதித்தால் இதைத்தவிர வேறு என்ன ஆகும்? அவர்கள் குணம் அறிந்தும் இலவசங்களுக்கு ஏமாறி வாழ்க்கையைத் தொலைக்க அனுமதிக்கும் வாக்காள பலி ஆடுகளை என்னவென்று சொல்வது?

உங்க அப்பாரே அந்தக் காலத்தில் பத்து லட்ச ரூவா petti யோட வந்து இறங்கினதா செய்தி வந்துச்சு. அழுக்கு அந்தக்காலத்திலிருந்தே மக்களுக்கு விநியோகம்.