அதிருப்தி நிர்வாகிகளிடம் தி.மு.க.,-அ.தி.மு.க., சமரசம்
திட்டக்குடி (தனி) தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., நேரடியாக களம் காணுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.
கடலுார் மாவட்டத்தின் கடைகோடி தொகுதியாக திட்டக்குடி (தனி) தொகுதி உள்ளது. தொகுதியில் ஆண்கள் 1,01,774, பெண்கள் 1,04,992, இதர வாக்காளர்கள் 4 பேர் என மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 770 வாக்காளர்கள் உள்ளனர்.
2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட தே.மு.தி.க.,வேட்பாளர் தமிழ் அழகன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வி.சி., வேட்பாளர் சிந்தனைசெல்வன் தோல்வியைத் தழுவினார்.
கடந்த 2016 தேர்தலில் தி.மு.க., சார்பில் கணேசனும், அ.தி.மு.க., சார்பில் அய்யாசாமியும் போட்டியிட்டனர். கணேசன் 65, 139 ஓட்டுகளும், அய்யாசாமி 62 ஆயிரத்து 927 ஓட்டுகள் பெற்றனர். 2,212 ஓட்டுகள் வித்தியாசத்தில் கணேசன் வென்றார். 2021ல் நடந்த தேர்தலில் கணேசனை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் தடா பெரியசாமி 20,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். வெற்றி பெற்ற கணேசன் அமைச்சரானார். வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க.,வும் 2வது முறை நேரடியாக களம் காண்பதால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இரு கட்சியினரும் மூத்த நிர்வாகிகளையும், அந்தந்த கட்சிகளில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதே போன்று, த.வெ.க., - நா.த.க., வேட்பாளர்களும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுவதால் எந்த வேட்பாளராக இருந்தாலும் சொற்ப ஓட்டுகளில் தா ன் வெற்றி பெற முடியும்.
-சிறப்பு நிருபர்-:
Advertisement

வாசகர்கள் கருத்துகள்