வரித்துறை சோதனை அதிகார துஷ்பிரயோகமா?

தி.மு.க., பொருளாளர், துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த், வேலுார் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், பண்ணை வீடுகளில், சமீபத்தில், வருமான வரித்துறை, அதிரடி சோதனை நடத்தியது.'மூழ்கும் கப்பலில் இருந்து எப்படியாவது தப்ப நினைத்து, கடைசியாக, வருமான வரித் துறையை பிரதமர் மோடி ஏவி விடுகிறார்; இது, அதிகார துஷ்பிரயோகம்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துகள்:----------------------


பா.ஜ.,வுக்கு பின்னடைவை தரும்தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தி.மு.க., வேட்பாளர்கள், வாக்காளர்களை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம், அவர்களுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்கிறது. இதை, அ.தி.மு.க., - பா.ஜ., வினரால் தாங்கி கொள்ள முடியவில்லை.இதனால், தேர்தல் பிரசாரத்தை திசை திருப்பவும், எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஒடுக்கவும், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, வேட்பாளர்களின் வீடு, நிறுவனங்களுக்கு, வருமான வரித்துறையினரை அனுப்பி மிரட்டி வருகின்றன.


வேட்பாளர்களை, மனரீதியாக சோர்வடை செய்ய வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கர்நாடகா மற்றும் வடமாநிங்களில் உள்ள, சில எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் வீட்டில் நடந்த ரெய்டுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடந்த எந்த தேர்தல்களிலும், வேட்பாளர்களின் வீடுகளில், வருமான வரித்துறை சோதனை நடத்திய வரலாறு கிடையாது.


முதன் முறையாக, இத்தகைய மோசமான நடவடிக்கையை, பா.ஜ., அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது, அக்கட்சிக்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும்.'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண வினியோகம் தாராளமாக நடந்தது. எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை' என, தேர்தல் ஆணையமே கைவிரித்ததை, நாட்டு மக்கள் நன்கு அறிவர். எல்லாவற்றுக்கும் மேலாக, 2016 சட்டசபை தேர்தலில், தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியின் ஊது குழலாக செயல்பட்டது என, நீதிபதிகளே சுட்டிக்காட்டிய நிகழ்வு, சமீபத்தில் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக, இதுவரை, எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.


எதிர்க்கட்சிகளின் வெற்றியை தடுக்க நினைக்கும், இந்த அடக்குமுறையை சந்திக்க, நாங்கள் தயாராக இருக்கிறோம். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை, யாராலும் தடுக்க முடியாது. வருமான வரித்துறை சோதனை தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் தெரிவித்த கண்டனத்தால், தி.மு.க.,வுக்கு தேசிய அளவில், ஆதரவும், செல்வாக்கும் பெருகி உள்ளது.

மா.சுப்பிரமணியன்

எம்.எல்.ஏ.,முன்னாள் மேயர்,

சென்னை மாநகராட்சி,சென்னை தெற்கு மாவட்ட செயலர், தி.மு.க.,தோல்வி பயத்தில் உளறல்


சரியாக கணக்கு காட்டாமல், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போரை கண்காணித்து, சோதனை நடத்தி, வருமான வரித்துறையினர், தங்கள் கடமையை நிறைவேற்றுகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தோர்; வருமான வரியை கட்டாதவர்களின் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. இது, எப்படி பழிவாங்கும் செயலாக கருத முடியும்.


தமிழகத்தின், 39 தொகுதிகளில், சில கோடீஸ்வர வேட்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் வீட்டில் சோதனை நடத்தாமல், துரைமுருகன் வீட்டில் மட்டும் சோதனை நடத்துகின்றனர் என்றால், வெளிப்படையாக பண பரிமாற்றம் ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. சோதனைக்கு, அரசியல் உள்நோக்கம் காரணமல்ல.


கடந்த, 2004 முதல், 2014 வரை, மத்தியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. தமிழக சட்டசபைக்கு, 2011ல் தேர்தல் நடந்த போது, மத்தியில், காங்கிரஸ் ஆட்சி தான் நடந்தது. தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில், கூடுதல் தொகுதிகளை வாங்க, அறிவாலயத்தின் கீழ் தளத்தில், காங்., தொகுதி பங்கீடு பேரம் நடத்தியது.அதே நேரம், அறிவாலயத்தின் முதல் மாடியில், '2 ஜி' வழக்கு தொடர்பாக, தயாளுவிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


இந்த விசாரணையின் காரணமாக, காங்கிரசுக்கு, 63 தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிர்பந்தம், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது. இது தான், அரசியல் உள்நோக்கம். பழி வாங்கும் நடவடிக்கை எடுப்பது, தி.மு.க., - காங்கிரசுக்கு கைவந்த கலை.'மடியில் கனமில்லை; எனவே பயம் இல்லை' என, ஸ்டாலின் கூறுகிறார். பயம் இல்லை என்றால், வருமான வரித்துறை சோதனைக்கு, எதற்காக உள்நோக்கம் கற்பிக்க வேண்டும். அவர், அமைதியாக இருக்க வேண்டியது தானே.


லோக்சபா தேர்தல், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தலில், தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடையும் என்ற கருத்துக் கணிப்புகள் வெளிவரத் துவங்கியுள்ளன. இந்த தோல்வி பயத்தால், ஸ்டாலின் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். பிரதமர் மோடி மீது, சம்பந்தமில்லாமல் வீண் பழி சுமத்துகிறார். எனவே, ஸ்டாலின் கண்டனமெல்லாம் மக்களிடம் எடுபடாது.


வைத்தியலிங்கம்,


ராஜ்யசபா எம்.பி.,துணை ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)