பேரனுக்கு காங்., எதிர்ப்பு

கர்நாடகா லோக்சபா தேர்தலில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, தன் தொகுதியை, பேரனுக்கு விட்டு கொடுத்துள்ளார். ஆனால், பேரனை வெற்றி பெற வைக்க முடியாது என, கூட்டணி கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது, அவருக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா லோக்சபா தொகுதியில், முன்னாள் பிரதமரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான, தேவகவுடா மற்றும் தற்போதைய முதல்வர், குமாரசாமியின் மத சார்பற்ற ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது.மொத்தம் உள்ள, 28 தொகுதிகளில், எட்டு தொகுதிகளில் மட்டும், மத சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடுகிறது.இதில், மாண்டியா தொகுதியில், குமாரசாமியின் மகனும், தேவகவுடாவின் பேரனுமான, நிகில் கவுடா போட்டியிடுகிறார். 86 வயதான தேவகவுடா, தும்கூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள, ஹசன் தொகுதியில் போட்டியிட்டு தேவகவுடா வெற்றி பெற்றார். தற்போது அந்த தொகுதியை, தனது மற்றொரு மகன், கர்நாடக பொதுப்பணி துறை அமைச்சர், ரேவண்ணாவின் மகன், பிரஜ்வால் ரேவண்ணா வுக்கு, தேவகவுடா ஒதுக்கியுள்ளார்.இதற்கு கூட்டணி கட்சியான, காங்.,கில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.இதுவரை நடந்த, தேர்தல்களில், ஹசன் தொகுதியில், காங்., ஒன்பது முறை; மத சார்பற்ற ஜனதா தளம் மூன்று முறை; ஜனதா தளம் மூன்று முறை, சுதந்திரா கட்சி மற்றும் பாரதிய லோக் தளம் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

அதனால், இந்த தொகுதி, காங்கிரசின் கோட்டையாக கருதப்படுகிறது. 'தேவ கவுடாவுக்காக மட்டுமே, இந்த தொகுதியை விட்டு கொடுப்போம். 'அவரது பேரனுக்கெல்லாம் வேலை செய்ய முடியாது' என, காங்., தரப்பினர் வெளிப்படையாகவே கூறி விட்டனர்.அவர்களை சரிக்கட்ட, அமைச்சர் ரேவண்ணாவும், அவரது மனைவி பவானியும், காங்., தலைவர்களின் வீடுகளுக்கு சென்று, ஆதரவு கேட்டு மன்றாடி உள்ளனர்.ஆனால், காங்., தரப்பினர் வழிக்கு வரவில்லை.

இதற்கிடையில், ஹசன் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, அர்கல்குட் சட்டசபை தொகுதியில், மூன்று முறை காங்., - எம்.எல்.ஏ.,வாக தேர்வான மஞ்சு, தேவகவுடா பேரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.அவர், காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்துஉள்ளார். அவரை வைத்து, தேவகவுடா பேரனை தோற்கடிக்க, பா.ஜ.,வும் வியூகம் வகுத்து வருகிறது. இதை எப்படி சமாளிப்பது என, தேவகவுடா தவித்து வருகிறார்.
- நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)