'கிப்ட்' யாருக்கு, 'லிப்ட்?'

நீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 'பொது சின்னம்; அதுவும், கிப்ட் பாக்ஸ் கிடைத்தது, எங்களுக்கு, லிப்ட் தரும்' என, தினகரன் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதேநேரம், அ.ம.மு.க., பெறும் ஓட்டுகளால், யாருக்கு பாதிப்பு; யாருக்கு, 'லிப்ட்' என்ற விவாதமும் களைகட்டிஉள்ளது. அ.தி.மு.க., வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன், 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை துவக்கி, நடத்தி வருகிறார்.

பரிசுப் பெட்டிதமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகள்; இடைத்தேர்தல் நடக்கும், 18 சட்டசபை தொகுதி கள்; புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி; இடைத்தேர்தல் நடக்கும் ஒரு சட்டசபை தொகுதிக்கும், வேட்பாளரை நிறுத்தி உள்ளார். தன் கட்சிக்கு, 'குக்கர்' சின்னம் கோரி, உச்ச நீதிமன்றத்தில், தினகரன் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கட்சியை பதிவு செய்யாததால், 'குக்கர்' சின்னம் வழங்கும்படி, தேர்தல் ஆணையத் திற்கு உத்தரவிட, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.


எனினும், பொது சின்னம் ஒதுக்க, பரிந்துரை செய்தது. இதனால், தினகரன் நிம்மதி அடைந்தார்.அ.ம.மு.க., வேட்பாளர்கள் அனைவரும், சுயேச்சைகளாகவே மனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கும் என, அ.ம.மு.க.,வினர் மட்டுமின்றி, பிற கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில், ஆங்கிலத்தில், 'கிப்ட் பாக்ஸ்' என, அழைக்கப்படும், 'பரிசுப் பெட்டி' சின்னத்தை, நேற்று முன்தினம் இரவு, தேர்தல் ஆணையம், அ.ம.மு.க.,விற்கு ஒதுக்கியது. அனைவரையும் கவரும் வகையில், தங்களுக்கு இந்த சின்னம் கிடைத்துள்ளதாக, அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அறிவிப்பு வெளியான உடன், தங்கள் சின்னத்தை, விளம்பரப்படுத்தும் பணியை துவக்கினர். சமூக வலைதளங்களில், பரிசுப் பெட்டி சின்னத்தை பிரபலப்படுத்தும்
வகையில், பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர்.

ஒரு வீடியோவில், பரிசுப் பெட்டி திறக்க, அதிலிருந்து தினகரன் கும்பிட்டபடி தோன்றுவது போன்ற காட்சி இடம் பெற்றுஉள்ளது. மற்றொரு வீடியோவில், மிகப்பெரிய கட்டடத்தில், போர்த்தப் பட்ட துணியை, ஹெலிகாப்டர் அகற்ற, 'நமது சின்னம் பரிசுப் பெட்டி' என்ற வாசகம் மிளிர்கிறது. அதேபோல, ஏற்கனவே வெளியான, 'டோன்ட் வொரி; பி ஹேப்பி... மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா...' என்ற பாடலில், பிரபல நடிகர்கள், நடிகையர் பரிசுப் பெட்டியைதிறப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


இந்த பாடல், அ.ம.மு.க.,வினருக்கு, பிரசார பாடல் போல் அமைந்து விட்டது. அந்த பாடல்களில், நடிகர், நடிகையர் பரிசுப் பெட்டியை திறக்கும் காட்சியை, அ.ம.மு.க.,வினர் தனியே பிரித்தெடுத்து, விளம்பரப் படுத்தி வருகின்றனர்.

யாருக்கு பாதிப்பு?அதே நேரம், அ.ம.மு.க.,விற்கு பொது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி பெறும் ஓட்டுகள், யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விவாதமும் எழுந்துள்ளது. அ.தி.மு.க., - அ.ம.மு.க., - தி.மு.க., என, மூன்று கட்சியினரும், தங்களுக்கே சாதகம் என்கின்றனர்.இது குறித்து, அ.தி.மு.க., வினர் சிலர் கூறுகையில், 'அ.ம.மு.க., விற்கு பொது சின்னம் வழங்காவிட்டால், அதற்கும் நாங்கள்தான் சதி செய்தோம் என, பிரசாரம் செய்வர்.


'பொது சின்னம் வழங்கப்பட்டதால், ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளவர்களின் ஓட்டு, தி.மு.க.,விற்கு போகாமல், அ.ம.மு.க.,விற்கு செல்லும்.இது,எங்களுக்கு சாதகமாக அமையும்'
என்றனர்.தி.மு.க., நிர்வாகிகள், 'தினகரனுக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட்டதால், அ.தி.மு.க., ஓட்டுகள், அ.மு.மு.க.,வுக்கு அதிகம் செல்லும். அவர், சின்னத்தை விளம்பரப்படுத்த, சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே, ஆளுங்கட்சி மீதுள்ள, அதிருப்தி ஓட்டுகள், எங்களுக்கு வந்து விடும். இது எங்களுக்கு தான் சாதகம்' என்கின்றனர்.

அ.ம.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:'கிப்ட் பாக்ஸ்' சின்னம் வழங்கப்பட்டுள்ளதால், மக்களிடம் விளம்பரப்படுத்துவது, எங்களுக்கு எளிது.ஆர்.கே. நகரில், குக்கர் சின்னத்தை விளம்பரப்படுத்தியது போல, 'கிப்ட் பாக்ஸ்' சின்னத்தை எளிதாக, மக்களிடம் சேர்க்க முடியும்.அ.தி.மு.க., ஓட்டுகள் மட்டுமின்றி, ஆளும் கட்சி மீதான அதிருப்தி ஓட்டுகளும், சிறுபான்மையின மக்கள் ஓட்டுகளும், எங்களுக்கு வரும்.


மக்களின் எதிர்பார்ப்பை, நாங்கள் பூர்த்தி செய்வோம் என்பதால், எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.தினகரனுக்கு, 'கிப்ட் பாக்ஸ்' சின்னம் ஒதுக்கியது, தங்களுக்கு சாதகமாக அமையும் என, ஒவ்வொரு கட்சியினரும் கூறும் நிலை யில், இந்த சின்னத்திற்கு, சமூக வலைதளங் களில், அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சின்னம், யாருக்கு, 'லிப்ட்' கொடுக்கும் என்பது, மே, 23ல் தெரியவரும்.

ஓட்டுச்சாவடி முகவர்கள் கிடைக்காமல், 'அப்செட்'லோக்சபா தேர்தலில் போட்டியிடும்,தினகரன், நடிகர் கமல் கட்சிகளின்வேட்பாளர்கள், அனைத்து ஓட்டு சாவடிகளுக்கும், முகவர்கள் கிடைக்காமல்,ஆட்களை தேடி வருகின்றனர்.
சட்டசபை, லோக்சபா, உள்ளாட்சி தேர்தலின் போது, ஓட்டுச்சாவடிகளில், அதிகாரிகளுடன், போட்டியிடும் வேட்பாளர்களின், முகவர்கள் இருப்பர். அவர்கள், அந்த பகுதியை சார்ந்தவராக இருப்பர். எத்தனை ஓட்டுக்கள் பதிவாகின; மாற்று கட்சியினர் கள்ள ஓட்டு போடுவதை தடுப்பது போன்ற பணிகளை, முகவர்கள் கவனிப்பர்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., - அ.தி.மு.க., ஆறு மாதங்களுக்கு முன், ஓட்டுச்சாவடி முகவர்களை தேர்வு செய்து, அவர்கள், எதிரணியிடம் விலை போகாமல் இருக்க, 'கவனிப்பு'களையும் செய்துவிட்டன.லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கு, தி.மு.க., கூட்டணியில், காங்., - ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட்கள் - விடுதலை சிறுத்தை - முஸ்லிம் லீக்கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க., அணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - புதிய தமிழகம் - புதிய நீதி கட்சிகள் உள்ளன.

அ.ம.மு.க., என்ற கட்சியை நடத்தி வரும் தினகரன் தனித்தும்; மக்கள் நீதி மையம் கட்சியை நடத்தி வரும் கமல், சில சிறு கட்சி களுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடு கின்றனர்.இரு கட்சிகளின் சார்பில் அறிவிக்கப் பட்டு உள்ள வேட்பாளர்கள், தங்கள் தொகுதி களில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடிகளுக் கும், முகவர்கள் கிடைக்காமல், 'அப்செட்' ஆகியுள்ளனர். இதற்காக, தற்போது, ஆட்களை தேடி வருகின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)