கன்ஹையாவை, 'வெச்சு செஞ்ச' லாலு பிரசாத்

பீஹாரின், பெகுசராய் லோக்சபா தொகுதிக்கு, வேட்பாளரை அறிவித்ததன் மூலம், 'முன்னாள் மாணவர் தலைவர், கன்ஹையா குமாரை, பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும்' என்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர், லாலு பிரசாத் நிராகரித்துள்ளார்.

டில்லியில் உள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவரான, கன்ஹையா குமார், 2016ல் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நாட்டுக்கு எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது; அவர் மீது, தேசவிரோத வழக்குகள் பதியப்பட்டன.பீஹாரைச் சேர்ந்த அவருக்கு, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்திருந்தது. பீஹாரின், பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த அவரை, அந்த தொகுதியின் வேட்பாளராக, இந்தியக் கம்யூனிஸ்ட் அறிவித்தது. மேலும், தேசிய அளவில் அமைந்துள்ள, 'மகாகட்பந்தன்' எனப்படும், மெகா கூட்டணியின், பொது வேட்பாளராக அவரை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.

கடந்த, 2016ல், தன் மீதான வழக்குகளை எதிர்த்து, கன்ஹையா குமார், போராட்டங்களில் ஈடுபட்டார். அப்போது, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாதை சந்தித்தார். 'பெகுசராயில், நீங்கள் தான், எங்களின் பந்தய குதிரை' என, லாலு அப்போது கூறியிருந்தார்.கால்நடை தீவன வழக்கில் சிறையில் உள்ள, லாலுவை, இந்திய, கம்யூ., தேசிய செயலர், டி.ராஜா சந்தித்த போதும், கன்ஹையாவை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், பீஹாரில் அமைக்கப்பட்டுள்ள, மெகா கூட்டணியில், இந்திய, கம்யூ.,வை, லாலு சேர்க்கவில்லை. மேலும், பெகுசராய் தொகுதிக்கு, தன்வீர் ஹசனை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். லாலுவின் இந்த மனமாற்றத்துக்கு காரணம் என்ன...தன் இரண்டாவது மகனும், கட்சியின் நிர்வாகத்தை கவனித்து வருபவருமான, தேஜஸ்வியின் அரசியல் எதிர்காலம் குறித்து, லாலு கவலைப்படுகிறார். கன்ஹையா, சிறந்த பேச்சாளராக உள்ளார். அவரை ஆதரித்தால், தன் மகனுக்கு பாதிப்பு வரலாம் என, அவர் நினைக்கிறார்.மேலும், பெகுசராய் தொகுதியில், முஸ்லிம் வேட்பாளரையே, லாலு எப்போதும் நிறுத்துவார். முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே, தன்வீர் ஹசனை நிறுத்தி உள்ளார்.
நாட்டுக்கு எதிராக கோஷமிட்ட கன்ஹையாவின் பேச்சை, லாலுவும், அவர் மகன் தேஜஸ்வியும் விரும்பவில்லை. கன்ஹையாவை ஆதரித்தால், தங்கள் கட்சி மீது விமர்சனம் ஏற்படும் என, அவர்கள் நினைத்துள்ளனர். அதனால், அவருக்கு ஆதரவு தெரிவிக்க, லாலு தயக்கம் காட்டிஉள்ளார்.இதை விட, பீஹாரில், ஒரு காலத்தில், வலுவாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி களை ஒன்று மில்லாமல் ஆக்கினார் லாலு. அதனால் தான், தற்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் குரலை கேட்க அவர் தயாராக இல்லை!

- கன்ஹையா பெல்லாரி -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)