பீஹாரில் தாவல் ஜாஸ்தி

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெற்றி வாய்ப்புள்ள கட்சிக்கு மாறி, லோக்சபாவுக்கு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில், பீஹார் மாநிலத்தில் பலர், கட்சி தாவி வருகின்றனர்.

தேர்தல் சமயத்தில், இது சாதாரணமான நிகழ்வு தான். இருப்பினும், தற்போதைய தேர்தலில், வழக்கத்தை விட அதிகளவில் கட்சி தாவல் நடந்து வருகிறது.ஒரு கட்சியில் வாய்ப்பு கிடைக்காதவர்கள், வாய்ப்பு அளிக்கும் கட்சிக்கு தம் விருப்பப்படி மாறிக் கொண்டிருக்கின்றனர்.


பீஹாரில், 2014 லோக்சபா தேர்தலின் போது, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின், 13 எம்.எல்.ஏ.,க்கள், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்று முன், சட்டசபை சபாநாயகரை அணுகி, தங்களை தனி பிரிவினராக அறிவிக்கும்படி வலியுறுத்தினர்; இது, ஐக்கிய ஜனதாதளம் கட்சியினருக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.இம்முறை, காட்சிகள் மாறியுள்ளன. ஐக்கியஜனதாதளம், தற்போது, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிறிய கட்சிகள், காங்., ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணியை நோக்கி படையெடுத்து வருகின்றன.தேர்தல் தொடர்பான தங்கள் கோரிக்கைகளை, அந்த கூட்டணி நிறைவேற்றும் என, இந்த கட்சிகள் நம்புகின்றன.


இந்த வரிசையில், முதலில் காங்., கூட்டணியின் கதவை தட்டியது, முன்னாள் முதல்வர், ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான, மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா.பின், முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா தலைமையிலான, ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சி, முகேஷ் சஹானி தலைமையிலான, வி.ஐ.பி., எனப்படும், விகாஷி இன்சான் கட்சி, இந்த கூட்டணியில் ஐக்கியம் ஆகின.பீஹாரின் அண்டை மாநிலமான, ஜார்க்கண்டில், பா.ஜ., மூத்த தலைவர், நீரஜ் போக்தா, காங்.,கில் இணைந்துள்ளார். மேலும் பலர், காங்.,கில் சேர, தக்க சமயத்துக்காக காத்திருக்கின்றனர்.தேசிய ஜனநாயக கூட்டணியில், லோக்சபா தேர்தல், 'சீட்' கிடைக்காது என கருதும் பலர், காங்.,கில் சேரும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.


*பீஹாரில், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யும், பிரபல நடிகருமான சத்ருகன் சின்ஹா, காங்., அல்லது ராஷ்ட்ரீய ஜனதாதளத்தில் சேருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது

*பா.ஜ.,வில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத், ஏற்கனவே, காங்.,கில் சேர்ந்துள்ளார்
* தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பலர், ராஷ்ட்ரீய ஜனதாதளத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக, அக்கட்சி தலைவர், தேஜஸ்வி பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்

*பா.ஜ.,வின் தற்போதைய தலித், எம்.பி.,க்களில் ஒருவர், 'எனக்கு சீட் தராவிட்டால், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் சேர்ந்து, மத்திய பீஹாரில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தோல்வியை உறுதி செய்வேன்' என, மிரட்டல் விடுத்துள்ளார்
*கடந்த முறை, ஜெஹானாபாத் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற, ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சி, எம்.பி., அருண்குமார், இந்த முறை, காங்.,கில் சேர ஆலோசித்து வருகிறார். 'நரேந்திர மோடி தலைமையிலான அரசை வேரோடு சாய்ப்பதாக சபதம் செய்துள்ளேன்' என, அவர் ஆவேசமாக கூறியுள்ளார்
* பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவரான, சுயேச்சை எம்.எல்.ஏ., ஆனந்த் சிங், காங்., கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.தேர்தல் நேரத்தில் கட்சி தாவுவோரின் முக்கிய எண்ணம், சுயநலமாக மட்டுமே இருப்பதாக, அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-- கன்ஹையா பெலாரி -சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)