வாழ்வா, சாவா நிலையில் காங்., : முன்னாள் அமைச்சர் கபில் சிபல் சிறப்பு பேட்டி

இந்தத் தேர்தல், காங்கிரசுக்கு, வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதா?
இது உண்மையில்லை. ஆனால், நாட்டில் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் என, பல அமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. நாடு மிகவும் மோசமான, இக்கட்டான கட்டத்தில் உள்ளது. நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம், மக்களுக்கு உள்ளது. தேர்தல்களில், வெற்றி, தோல்வி பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதே நேரத்தில், ஆபத்துகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு, தற்போதுள்ள, மோடி தலைமையிலான அரசு அகற்றப்பட வேண்டும். இதற்காகவே, காங்கிரஸ் போராடுகிறது. நாட்டைக் காப்பாற்றும் வகையில், வாழ்வா, சாவா நிலையில், காங்கிரஸ் உள்ளது.

அமைப்புகள் சிதைக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், அதற்கு என்ன ஆதாரம்?
கடந்த, 2014 தேர்தலுக்கு முன், இந்த அமைப்புகள் எப்படி இருந்தன, தற்போது எப்படி உள்ளன என்பதை பார்த்தால், அது உங்களுக்கு தெரிந்துவிடும். சி.பி.ஐ.,யில், தங்கள் ஆட்களை புகுத்தி, அதிகாரப் போட்டி ஏற்பட வைத்து, அதை நசுக்கினர். சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு மீது, பல புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தன்னாட்சி அமைப்பான, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, அரசுக்கு சாதகமாக அறிக்கை தாக்கல் செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளார். 'ரபேல்' போர் விமானம் தொடர்பான அறிக்கை ஒன்றே போதும், இதை நிரூபிக்க. பல மாநிலங்களில், கவர்னர்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதை பார்த்திருப்பீர்கள். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கிளை அலுவலகங்களாக, கவர்னர் மாளிகைகள் மாறியுள்ளன; பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் இந்த ஆபத்தில் இருந்து, நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை, காங்கிரசுக்கு உள்ளது.

நானும் காவல்காரன் என்ற, பா.ஜ.,வின் பிரசாரத்தை எதிர்ப்பது ஏன்? இது குறித்து, காங்கிரஸ் பேசாமல் இருந்தாலே, அது பிரபலமாகி இருக்காதே?
கடந்த தேர்தலில், டீக்கடைக்காரன் என்று, பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். தற்போது, 'சவ்கிதார்' எனப்படும், காவல்காரன் என்று கூறி, பிரசாரம் செய்து வருகிறார். அடுத்த தேர்தலில், வேறொன்றை எடுத்துக் கொள்வார். அப்போது, காவல்காரர்களை மறந்து விடுவார். நாட்டில் பல பிரச்னைகள் உள்ளன. விவசாயிகள் கடும் சிக்கலில் உள்ளனர், வேலைவாய்ப்பு இல்லை என்ற பிரச்னைகள் இருக்கையில், மக்களை திசை திருப்பும் வகையில், இந்த பிரசாரத்தை, பா.ஜ., துவக்கி உள்ளது. பொய் பிரசாரத்தில், பா.ஜ., ஈடுபட்டு வருகிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதனால் தான், இது குறித்து விமர்சனம் செய்து வருகிறோம்.
பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, பா.ஜ.,வின் மவுசு அதிகரித்து உள்ளதா?
ஜம்மு - காஷ்மீரில், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அண்டை நாடான, பாக்., மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு, அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், பாலகோட் தாக்குதலை, பா.ஜ., தங்களுக்கு சாதகமாக அரசியல் ரீதியில் பிரசாரம் செய்ய பயன்படுத்துகிறது. தற்போது, காவல்காரன் என்று கூறி கொள்ளும், பிரதமர், நரேந்திர மோடி, பதன்கோட், யூரி உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடந்த போது, எங்கு இருந்தார்? அப்போதெல்லாம் ஏன், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை சமாளிக்கவே, விமானப் படை நடத்திய தாக்குதலை, ஏதோ இவர்களே நடத்தியது போல், பிரசாரம் செய்து கொள்கின்றனர். ஆனால், அதை மக்கள் நம்ப மாட்டார்கள். அதனால், பா.ஜ.,வின் மவுசு உயராது.

சாந்தினிசவுக் தொகுதியின், 'மாஜி':காங்கிரஸ் மூத்த தலைவரான, கபில் சிபில், 70, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக உள்ளார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்துள்ளார். ராஜ்யசபா எம்.பி.,யாகவும், டில்லி சாந்தினிசவுக் தொகுதியில், 2004, 2009ல், லோக்சபா, எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தொலைத் தொடர்பு, சட்டம் உள்பட, பல துறைகளின் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

''பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 பேர் உயிரிழந்தனர். இதனால், நாடு கொந்தளிப்பில் இருந்தது. அப்போது, 'பாகிஸ்தானை எச்சரிக்க வேண்டும்; பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆதரவு அளிப்போம்' என, அனைத்துக் கட்சிகளும் கூறின. ஆனால், வீரர்களின் உயிர் தியாகத்தை, பா.ஜ., அரசியலாக்கி உள்ளது''
-கபில் சிபல், காங்கிரஸ் மூத்த தலைவர்

- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)