மந்திரிக்கு மா.செ., பதவி திடீரென கிடைத்தது எப்படி?



அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தங்களின் ஆதரவாளர்களுக்கு, 'சீட்' கேட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தான், 17ம் தேதி, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் மற்றும், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த ஞாயிறன்று மாலை, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.அப்போது, மதுரை லோக்சபா தொகுதி வேட்பாளராக, தன் ஆதரவாளருக்கு, சீட் வழங்குமாறு, அமைச்சர் உதயகுமார் கேட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, அந்த மாவட்டத்தின், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, தன் மகனுக்கு, சீட் கேட்டதால், இரு தரப்புக்கும் இடையில், கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஒரு கட்டத்தில், தன் மகனுக்கு சீட் வழங்கினால், தேர்தல் செலவுகளை தானே பார்த்து கொள்வதாக, ராஜன் செல்லப்பா கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, அவரின் மகன், ராஜ்சத்யன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், உதயகுமார் அதிருப்தி அடையாமல் இருக்க, மதுரை மாவட்டம் பிரிக்கப்பட்டு, அவருக்கு மாவட்ட செயலர் பதவி வழங்கி, கட்சி தலைமை சமாளித்துஉள்ளது.அதேபோல், இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளில், சீட் கேட்டு, முன்னாள், எம்.எல்.ஏ.,க்களும்; ஆதரவாளர்களுக்கு, சீட் கேட்டு, அமைச்சர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஏற்பட்ட இழுபறியால் தான், நான்கு மணி நேர ஆலோசனைக்கு பின், இரவு, 10:00 மணிக்கு மேல், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)