சபரிமலை விவகாரத்தில் அரசு மீது மக்களுக்கு கோபம்: கேரளாவிலும் காணாமல் போனது இடதுசாரி

திரிபுரா, மேற்கு வங்கத்தை தொடர்ந்து, கேரளாவிலும், இடதுசாரிகள் காணாமல் போயுள்ளனர். கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலை விவகாரத்தை, மிக மோசமாக கையாண்டதால், மக்களுக்கு ஏற்பட்ட கோபமே, இதற்கு காரணம்.

நாடு சுதந்திரம் பெற்ற போது, காங்கிரசுக்கு சவால் விடும் வகையில், நாடு முழுவதும் பரவலாக இருந்த கட்சி, கம்யூனிஸ்ட். அதன் பின், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என, இரண்டாக உடைந்தது. இதன்பின், வரிசையாக நடந்த தேர்தல்களில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒவ்வொரு மாநிலத்திலும், தங்கள் பலத்தை இழந்து வந்தன.ஒரு கட்டத்தில், மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா ஆகிய மாநிலங்களை தவிர, வேறு எங்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளால், தனித்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டது, ஆனாலும், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் தொடர்ந்து ஆட்சி செய்து, அந்த மாநிலங்களில், தங்களை யாரும் வெல்ல முடியாது என்ற இறுமாப்பு கூட, மார்க்சிஸ்ட் கட்சியிடம் ஏற்பட்டது.மேற்கு வங்கத்தில், தொடர்ந்து, 34 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த இடதுசாரி அரசுக்கு, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, முற்றுப்புள்ளி வைத்தார்

தொடர் போராட்டங்கள்மேற்கு வங்கத்தில், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் தான், இடதுசாரிகளுக்கு சரிவு ஏற்பட்டது. இதன்பின், 2011ல் ஆட்சியை இழந்தது. இப்போது, மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கிட்டத்தட்ட காணாமல் போயுள்ளது. திரிபுராவில், 25 ஆண்டுகளாக இருந்து வந்த இடதுசாரி அரசுக்கு, கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது, அங்கும், இடதுசாரிகள் மாயமாகிவிட்டன.கேரளாவை பொறுத்தவரை, ஐந்து
ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடப்பது வழக்கம். மார்க்சிஸ்ட் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியும், காங்., தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி மாறி ஆட்சி நடத்தும்.இந்த வகையில், கேரளாவில், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்து, பினராயி விஜயன், முதல்வரானார்.அம்மாநிலத்தில், பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கு, கோவிலுக்குள் செல்ல, 10 வயதுக்கு மேல், 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை, பல நுாறு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்த நடைமுறையை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு, செப்டம் பரில், சபரிமலைக்கு செல்ல, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என, உத்தரவிட்டது.இது, அய்யப்ப பக்தர்களிடமும், ஹிந்துக்களிடமும், பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து, கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்தன.முல்லை பெரியாறு அணை விவகாரம் உட்பட, உச்ச நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளை அமல்படுத்தாத முதல்வர் பினராயி விஜயன், சபரி மலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என, பிடிவாதம் காட்டினார்.உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, பக்தர்கள் விரும்பினர். ஹிந்துக்கள் நம்பிக்கையை புண்படுத்தும் விதத்தில், அரசு செயல்படாமல், தீர்ப்பிற்கு எதிராக மனு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

முக்கிய பிரச்னைஆனால், அதற்கு மாறாக, முதல்வர் பினராயி விஜயன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்க ஆர்வம் காட்டினார். பலர் சபரிமலை வந்தனர்; பக்தர்கள் எதிர்ப்பால், தரிசனம் செய்யாமல் திரும்பினர். அரசின் மறைமுக ஏற்பாட்டில், இரண்டு இளம் பெண்கள், சபரிமலைக்குள், போலீஸ் பாதுகாப்புடன் நுழைந்து, தரிசனம் செய்தனர். இந்த விவகாரம், பினராயி அரசு மீது, ஹிந்துக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. சபரி மலை விவகாரத்தை, பினராயி அரசு கையாண்ட விதத்தை, தேர்தலில் முக்கிய பிரச்னையாக முன் வைத்து, காங்கிரசும், பா.ஜ., வும் பிரசாரம் செய்தன. கேரளாவில், பிரசாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும்,
சபரிமலை விவகாரத்தில், பினராயியின் நடவடிக்கையை கண்டித்தார்.லோக்சபா தேர்தல் முடிந்து, முடிவுகள், 23ல் வெளியாகின. கேரளாவில் மொத்தம் உள்ள, 20 தொகுதிகளில், 19ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. ஒன்றில் மட்டுமே, இடது சாரி கூட்டணி வென்றது.சபரிமலை விவகாரத்தில், காங்.,கை விட, பல போராட்டங்கள் நடத்திய, பா.ஜ., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், கடந்த தேர்தலில், 10 சதவீதம் ஓட்டுகள் பெற்ற, பா.ஜ., இந்த முறை, 15 சதவீதம் பெற்றுள்ளது.கேரளாவில், தனித்து எந்த தொகுதியிலும், வெற்றி பெற முடியாத நிலையில் தான், பா.ஜ., உள்ளது. எனவே, வெற்றி பெறும் நிலையில் உள்ள காங்கிரசிற்கு ஓட்டளித்தால், சபரிமலை விவகாரத்தில், பினராயிக்கு பதிலடி கொடுக்க முடியும் என்பதில், கேரள வாக்காளர்கள் தெளிவாக இருந்து உள்ளனர்.பினராயி விஜயனின், மூன்று ஆண்டு ஆட்சியில், பெரியளவில் குற்றச்சாட்டுகள் எதுவும் கூறப்படவில்லை.ஆனால், ஹிந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல், சபரிமலை விவகாரத்தை மோசமாக கையாண்டதால், கேரளாவில், கம்யூனிஸ்டுகள் காணாமல் போயுள்ளனர்.

முதல்வர் ஒப்புதல்லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பிரசாரம் சூடு பிடித்த நிலையில் கூட, 'சபரிமலை விவகாரத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என, முதல்வர் பினராயி விஜயன் கூறி வந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி படுதோல்வியடைந்த நிலையில், சபரிமலை விவகாரத்தால் தான் தாங்கள் தோல்வியடைந்ததாக முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளார். 'சபரிமலை விவகாரத் தால், மக்கள், காங்கிரசுக்கு ஓட்டு போட்டு விட்டனர்' என, பினராயி விஜயன் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)