ஆமதாபாத்: குஜராத்தில், 2014 லோக்சபா தேர்தலை விட, 2019 தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றி வித்தியாசம் அதிகரித்துள்ளது.
லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலின் போது, குஜராத் முதல்வராக, நரேந்திர மோடி இருந்தார். பாஜ.,வின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். 2014 தேர்தலில், குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளையும், பா,ஜ., கைப்பற்றியது.இதன்பின், குஜராத்தில், 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 182 தொகுதிகளில், 99ல் வென்று, ஆறாவது முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்தது.
ஆனால், தொகுதிகளும், ஓட்டு சதவீதமும்
குறைந்தது, பா.ஜ.,வுக்கு கவலையை ஏற்படுத்தி யது. 'இதனால், இந்த லோக்சபா
தேர்தலில், கடந்த முறையைப் போல, பா.ஜ., வெற்றி பெறுவது சந்தேகம் தான்' என,
அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.ஆனால்,நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., 26 தொகுதிகளையும் கைப்பற்றி யது. அத்துடன், பா.ஜ., வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசமும், கடந்த முறையை விட, அதிகமாக உள்ளது.
கடந்த தேர்தலில், பிரதமர் மோடி உட்பட, ஆறு வேட்பாளர்கள் மட்டுமே, 3 லட்சம் ஓட்டுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஆனால், இம்முறை, 15 பா.ஜ., வேட்பாளர்கள், 3 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.நவ்சாரி தொகுதியில், பா.ஜ., வேட்பாளர், சி.ஆர்.பாட்டீல், 6.89 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த தேர்தலில், நரேந்திர மோடி, வதோதரா தொகுதியில், 5.7 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.இம்முறை, பா.ஜ.,வின் ரஞ்சன் பட், 5.89 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.கடந்த முறை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காந்தி நகர் தொகுதியில், 4.83 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இம்முறை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, 5.57 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.கடந்த தேர்தலில், குஜராத்தில் பதிவான ஓட்டுகளில், 60 சதவீத ஓட்டுகளை, பா.ஜ., பெற்றது. இம்முறை, அது, 62.2 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது,
வாசகர் கருத்து