பழைய இபிஎஸ்., இல்ல.. இவரு...!

சென்னை: நான்காண்டுகளுக்கு முன்பிருந்த இ.பி.எஸ்., இப்போது இல்லை. இயல்பே மாறிவிட்டது; விஷயங்களை அணுகும் விதமே அலாதியாக இருக்கிறது.கூட்டணி கட்சியினரை, ஜெயலலிதா கூட அப்படி அணுகியதில்லை. இ.பி.எஸ்., அத்தனை கறாராக பேச்சு நடத்தி, கூட்டணி அமைத்திருக்கிறார். அதனால் தான், தே.மு.தி.க., வெளியே போனது என்கிறார், கூட்டணி பேச்சில் பங்கேற்ற ஒருவர்.

கூட்டணி பேச்சு எப்படி நடந்தது என்று, அவர் விவரித்த போது, இ.பி.எஸ்., சின் விஸ்வரூபம் நன்றாகவே தெரிந்தது. சுதீஷும், விஜய பிரபாகரனும், முதல்வரை ஏன் கடுமையாக விமர்சித்தனர் என்பதும் புரிந்தது. கூட்டணி அமைப்பதில், ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம் இ.பி.எஸ்.,சுக்கு இல்லை என்று, பிரேமலதா சொன்ன பின்னணியை உணர முடிந்தது.

'சீட் இவ்வளவு தான் தர முடியும்; சரின்னா வாங்கிட்டு வேலைய பாக்கலாம்; இல்லைன்னா தாராளமா வெளிய போகலாம்' என்று இ.பி.எஸ்., சொன்ன போது, மென்மையாக பேசி வந்த அதே முதல்வரா இவர் என, ஒவ்வொரு கட்சித் தலைவரும் ஆச்சரியப்பட்டு உள்ளனர்.என்றாலும், இது கண்மூடித்தனமான கறார் கிடையாது. ஒவ்வொரு கட்சியுடனும் பேசும் முன், அந்தக் கட்சி குறித்த, அத்தனை புள்ளி விபரங்களையும், அவர் கவனமாக படித்து, பக்கத்தில் இருப்பவர்களிடம், சில சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு, அதன் பின்னே ஆணித்தரமாகப் பேசுகிறார்.

அது மட்டும் அல்ல; குறிப்பிட்ட கட்சிகளை, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எப்படி நடத்தினர் என்பது வரை, இ.பி.எஸ்., விரல் நுனியில் விபரங்களை வைத்திருந்தார். சுற்றுப்பயணம் செல்லும் நேரங்களில், கிடைத்த நேரத்தை எல்லாம், இந்த விபரங்களை தெரிந்து கொள்வதில் அவர் செலவிட்டுள்ளார் என்பது, நன்றாகவே தெரிகிறது. கூடவே இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கே, இது வியப்பாக இருந்தது.

மாறுபட்ட இ.பி.எஸ்.,சின், அணுகுமுறையில், முதல் அடி வாங்கிய கட்சி, ச.ம.க., 'சரத்குமார் பேச்செல்லாம், நன்றாகத்தான் பேசுவார். ஆனால், அவர் கட்சிக்கு எங்கேயுமே ஓட்டு வங்கி இல்லை. திருமங்கலம் இடைத்தேர்தலில், ராதிகா வாங்கியது, 628 ஓட்டு. அதுதான், ச.ம.க.,வின் உண்மையான நிலை. சரியாக சொல்வதனால், ச.ம.க.,வை கூட்டணியில் வைத்திருப்பது, 'வேஸ்ட்.' எனவே, அவர்கள் பேச வந்தால், எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்' என, அவர் முன் எச்சரிக்கை கொடுத்தது, கட்சியினர் எதிர்பாராத விஷயம்.

அ.தி.மு.க., தலைவர்கள் பிடி கொடுக்காமல் பேசி அனுப்பியதால், அதிருப்தியான சரத்குமார், நேராக கமலை சந்தித்து, ம.நீ.ம., கூட்டணியில் சேர்ந்த தகவலை சொன்னபோது, 'அப்பாடா... எங்கயோ இடம் கிடைச்சிருச்சுல்ல... சந்தோஷம்' என்றாராம்.கடந்த முறை ஜெயலலிதா, 'என்கரேஜ்' செய்த தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோருக்கும், 'சீட்' கொடுத்து வீணடிக்க வேண்டாம் என சொல்லி, அவர்களை கழற்றி, அந்தரத்தில் தொங்க விட்டார். 'நம்மை மிரட்டிப் பார்த்து, நடக்கவில்லை என்றதும், தி.மு.க.,வுக்கு ஓடுவார்கள். அங்கேயும் இதுதான் நடக்கும்' என, இ.பி.எஸ்., கணித்தது அப்படியே நடந்ததில், அமைச்சர்களுக்கு ஏக சந்தோஷம். வரிசையாக சென்று பாராட்டினார்களாம்.

'என்னால் தான், இ.பி.எஸ்., ஆட்சியே கவிழாமல் ஓடுகிறது' என, மூவரும் நான்கு ஆண்டுகளாக, கொடுத்த பேட்டிகளுக்கும், அதிகாரிகளுக்கு கொடுத்த நெருக்கடிகளுக்கும், ஒரே, 'ஸ்ட்ரோக்'கில் பழி தீர்த்து விட்டார், இ.பி.எஸ்., என, கோட்டையில் குதுாகலம் பரவியது.பா.ம.க.,வால், அரசுக்கு எத்தனையோ இடைஞ்சல்கள் ஏற்பட்டிருந்த நிலையிலும், அக்கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும் என்றே இ.பி.எஸ்., நினைத்தார். எனவே தான், வன்னியருக்கு, 20 சதவீதம் உள் ஒதுக்கீடு கேட்ட ராமதாஸ் கோரிக்கையை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

'மற்ற ஜாதிகளை நம்மிடம் இருந்து விலகிப் போக வைத்து விடும். தேர்தல் நேரத்தில் இந்த, 'ரிஸ்க்' எடுக்க வேண்டாம்' என, சீனியர் நிர்வாகிகளும், அதிகாரிகளும் எச்சரித்தும் இ.பி.எஸ்., அசையவில்லை. 'இந்த கோரிக்கையை நிபந்தனையாக விதித்து, பேரம் பேசப் போகிறீர்களா?' என, அமைச்சர்களை அனுப்பி ராமதாசிடம் நேரடியாகவே கேட்டு வரச் சொன்னார்.'உள் ஒதுக்கீடு ரொம்ப முக்கியம். ஆனால், அதை வைத்து கூட்டணி பேச்சில் நெருக்கடி கொடுக்க மாட்டோம்' என, ராமதாஸ் சொல்லி அனுப்பிய பதிலால், இ.பி.எஸ்., திருப்தி அடைந்தார். உடனே, ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலும் பெற்றார். இதனால், ராமதாஸ் குடும்பமே, இ.பி.எஸ்.,சை புதிய பார்வையில் கண்டனர்.

ஆனால், பங்கீடு பேச்சு துவங்கியதுமே, பா.ம.க., 60 தொகுதி கேட்டதும், அமைச்சர்கள் அதிர்ந்து போயினர். முதல்வரிடம் சொன்னார்கள். அவர் கூலாக, 'அப்படி தான் ஆரமிப்பார்கள். இதோ இந்த புள்ளி விபரங்களை எடுத்துச் சொல்லி, நான்கு தொகுதி தான் கொடுக்க முடியும் என உறுதியாக பேசுங்கள்' என, சொன்னாராம்.

பேச வந்த, பா.ம.க.,வினருக்கு அதிர்ச்சி. அமைச்சர்கள் சொன்னதை கேட்டு, தலை கிறுகிறுத்தது. கண்கள் சிவந்தன. 'டாக்டரய்யா ஒப்புக் கொள்ளவே மாட்டார்' என, சொல்லி எழுந்தனர். அப்போது, இ.பி.எஸ்., சொன்னபடியே, அமைச்சர்களிடம் ராமதாஸ் அளித்த உறுதிமொழியை ஞாபகப்படுத்தி இருக்கின்றனர். பா.ம.க., தரப்பால் எதுவும் பேச முடியவில்லை.

'அவ்வளவு கறாரா இருக்காரா, இ.பி.எஸ்., ' என, நீண்ட நேரம் மவுனமாக யோசித்த ராமதாஸ், 'சரி, கொஞ்சமா குறைச்சுட்டே, இருபத்தஞ்சுக்கு வாங்க' என, குழுவை மீண்டும் அனுப்பினார். அப்படித்தான், 23ல் முடிந்தது ஒப்பந்தம்.'தேர்தலை புறக்கணித்து வெளியில் இருந்து, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கிறோம்' என, ராமதாஸ் சொன்னதாக பேச்சு நடுவே, பா.ம.க., தலைவர்கள், ஒரு, 'பிட்'டை போட, அதை முதல்வருக்கு சொன்னார்கள் அமைச்சர்கள். இமைக்கும் நேரத்தில் பதில் சொன்னார் இ.பி.எஸ்., 'ரொம்ப நல்லது. அப்படியே செய்யட்டும்; ஒரு பேப்பர்ல, ஒப்பந்தமா எழுதி கையெழுத்துப் போட்டு அனுப்பிற சொல்லுங்க!' என்று.

அதன் பின்பே, சட்டென பேச்சு முடிந்து, ஒப்பந்தம் கையெழுத்தானது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை, பா.ம.க., கேட்டபோதும், 'அப்படி கொடுக்க கூட்டணியே வேண்டாமே' என்று சொல்லி, பா.ம.க.,வை மடக்கினார் முதல்வர். அவர்களுக்கு இந்த கறார் பிடிக்கவில்லை. ஆனால், வேறு வழியில்லை.அடுத்து, பா.ஜ.,வை அணுகியது, அதை விட கெடுபிடியானது.

விழுப்புரம் கூட்டத்துக்கு வந்த அமித் ஷா, முதல்வர் இ.பி.எஸ்.,சை, 'லீலா பேலஸ்' ஓட்டலில் சந்திக்க ஏற்பாடு. முதல் நாள், தங்கமணி, வேலுமணியிடம் பேசினார் முதல்வர். 'பா.ஜ.,வுக்கு, ஐந்து போதும்; அவர்களுக்கு தமிழகத்தில், பலம் அவ்வளவு தான்' என, சொல்லி இருக்கிறார்.லீலா பேலஸ் ஓட்டலில் அமித் ஷா, தான் வைத்திருக்கும் புள்ளி விபரங்களை எல்லாம் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். 'தினகரனை தனித்து விட வேண்டாம்; அது நம்மை பாதிக்கும்' என, சொல்லியிருக்கிறார்.

இ.பி.எஸ்., கூலாக, 'அவர்களை சேர்த்துக் கொண்டு ஜெயிப்பதைவிட, கவுரவமாக தோற்கலாம்; தவறில்லை' என்று சொன்னாராம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அமித் ஷா பேச்சை ஏற்கவே முடியாது என, மறுத்து விட்டார். 'பா.ஜ.வு.,க்கு, 60 'சீட்' கொடுங்க' என, அமித் ஷா கேட்டதும், டக்கென்று, 'நாலு போதும்' என, இ.பி.எஸ்., சொல்ல, அமித் ஷா சற்று நேரம் எதுவுமே பேசவில்லையாம்.'எனக்கு நேரமாகி விட்டது; 'லோக்கல்' தலைவர்களுடன் பேசி, ஒரு முடிவுக்கு வாங்க...' என்று சொல்லி விட்டு, அமித் ஷா, சிறப்பு விமானத்தில் டில்லி புறப்பட்டார். அதன் பின், இரு நாட்கள், 'லோக்கல்' பா.ஜ., தலைவர்களுக்கு தண்ணி காட்டினார் முதல்வர். ஒவ்வொரு தொகுதியாக ஏற்றிக் கொண்டே போய், '20 தான் லாஸ்ட்' என, சொல்லிவிட்டார்.
அவர்கள் அதை அமித் ஷாவிடம் சொல்ல, 'டில்லியில் நான் பலமுறை சந்தித்த, இ.பி.எஸ்., இப்போது இல்லை. பிரச்னையில்லாம பேசி முடிங்க' என, கூறிவிட்டார்.இதன் பின்பே, தே.மு.தி.க.,வை கையில் எடுத்தார் முதல்வர். அவர்களுக்கு விட்டுக் கொடுக்க திட்டமிட்ட எண்ணிக்கை, எட்டு தான். தங்கமணியும், வேலுமணியும் பல முறை சந்தித்து, தே.மு.தி.க.,வோட பேசி முடிச்சிடலாம்னு சொன்ன போதெல்லாம், 'நான் சொல்லும் போது பேச்சு துவங்கினா போதும்' என்றே, நாள் கடத்தினார்.

தே.மு.தி.க., தரப்பில் பேச வந்த குழு, 41 தொகுதிகள் கேட்டபோது, 'கேப்டன், 'ஆக்டிவா' இல்லாத சூழ்நிலைல, உங்க பலம் இது தான்' எனச் சொல்லி, சில பேப்பர்களை, அ.தி.மு.க., தரப்பு நீட்ட , தே.மு.தி.க., அதை வாங்கவே இல்லை.'கேப்டன் கண்டிப்பா பிரசாரத்துக்கு வருவாருன்னு, நீங்க உறுதியா சொன்னா, நாலு, 'சீட்' சேர்த்து, எட்டா கொடுக்கலாம்'னு, 'சீயெம்' சொன்னதாக, அ.தி.மு.க., குழு சொன்னது. பின்னர் சுதீஷ் முதல்வரை சந்தித்து, 25 தருமாறு கேட்டார். 'தே.மு.தி.க.,வுக்கு, 2 சதவீத ஓட்டுதான் இருக்கு. உங்க மாமாவும், பிரசாரத்துக்கு வர முடியாது. அப்ப உங்க கூட்டணியால, எங்களுக்கு என்ன லாபம்?' என்று இ.பி.எஸ்., 'ஒப்பனாக' கேட்டுள்ளார்.

உறவு முறிந்தது அந்த கணத்தில் தான். கடைசியா, த.மா.கா.,வையும் இதே பாணியில், 'டீல்' செய்யச் சொன்னார் இ.பி.எஸ்., ஒரு தொகுதியில் துவங்கி, வாசனை பதற வைத்தார். 'வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறோம்; தேர்தலில் ஒதுங்கி விடுகிறோம்' என்று வாசனை சொல்ல வைத்து, பின், பா.ஜ., அழுத்தத்தால், அ.தி.மு.க.,வும் மற்ற கூட்டணி கட்சிகளும் வேண்டாம் என ஒதுக்கிய, ஆறு தொகுதிகளை, த.மா.கா.,வுக்கு தள்ளி விட்டு, பேச்சுவார்த்தையை முடித்தார் முதல்வர்.

இந்திய எதிர்க்கட்சிகள் அனைத்தையும், கதற வைக்கும் அமித் ஷா துவங்கி, அனைத்து தலைவர்களையும் தண்ணீர் குடிக்க வைத்து விட்டாரே... என, கூடவே இருக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சும் வியந்து பார்த்தாராம் இ.பி.எஸ்.,சை.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)