தேனி, : தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், பிரம்ம முகூர்த்தத்தில் சான்றிதழ் பெற வந்து, நீண்ட நேர காத்திருப்புக்கு பின், பெற்றார்.தேனி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், 76, ஆயிரத்து, 693 ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்., வேட்பாளர் இளங்கோவனை வீழ்த்தினார்.தேனி தொகுதி ஓட்டு எண்ணிக்கை, ஆரம்பம் முதலே மந்தமாக நடந்தது. 24ம் தேதி காலை வெற்றி உறுதியான நிலையில், ரவீந்திரநாத் குமாரை, பிரம்ம முகூர்த்த நேரத்தில் சான்றிதழ் பெற, அவரது ஜோதிடர்கள் அறிவுறுத்தினர்.
இதனால், ஓட்டு எண்ணும் மையத்திற்கு, அதிகாலை, 4:30 மணிக்கு வந்தார். அவரிடம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பல்லவி பல்தேவ், 'சிறிது நேரம் அறையில் காத்திருங்கள்; அழைக்கிறேன்' என்றார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த வேட்பாளர் மற்றும் அக்கட்சியினர், 'துணை முதல்வரை வரவேற்க மதுரை செல்ல வேண்டும்' எனக் கூறி, விரைவாக சான்று வழங்க வலியுறுத்தினர்.ஆனால், 'தேர்தல் முடிவுகளை, தேர்தல் ஆணைய இணையதளத்திற்கு அனுப்பிய பின் தான் வழங்க முடியும்; இன்னும் கொஞ்சம் பொறுங்கள்' என, காத்திருக்க வைத்தார். இதனால், கட்சியினர் பொறுமை இழந்து தவித்தனர். ஒருவழியாக தேர்தல் நடைமுறைகள் முடிந்து, காலை, 6:20 மணிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் சான்றிதழை பெற்றுச் சென்றார்.- நமது நிருபர் -
வாசகர் கருத்து