தபால் ஓட்டுகளில் தி.மு.க., கூட்டணி அமோகம்: அரசு ஊழியர்கள் 67 சதவீதம் பேர் ஆதரவு இ.பி.எஸ்., அரசு மீதான கோபம் எதிரொலிப்பு

அ.தி.மு.க., அரசு மீதுள்ள கோபத்தில், தபால் ஓட்டு செலுத்திய, அரசு ஊழியர்களில், 67 சதவீதம் பேர், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்; 20 சதவீதம் பேர் மட்டுமே, அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர்.


தேர்தலுக்கு முன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்களில் ஈடுபட்டனர்.அவர்களின் கோரிக்கையை, அரசு ஏற்கவில்லை. ஆனால், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.அ.தி.மு.க., அரசு, போராட்டத்தில் ஈடுபட்டோரை அழைத்து பேசாமல், போராட்டத்தை ஒடுக்க, நடவடிக்கை எடுத்தது. வேறு வழியின்றி, அரசு ஊழியர்களும், போராட்டத்தை கைவிட்டனர்.எனினும், அவர்களுக்கு அரசு மீதான கோபம் தீராமல் இருந்தது.

தங்கள் கோபத்தை, தேர்தலில் காண்பித்துள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டு கள் வழங்கப்பட்டன. கடந்த தேர்தல்களை விட,இம்முறை அதிக அளவில், தபால் ஓட்டுகள் பதிவாகின.லோக்சபா தேர்தலில், 2.06 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின. இதில், தி.மு.க., கூட்டணி, 1.37 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளது. பதிவான தபால் ஓட்டுகளில், இது, 67 சதவீதம். அ.தி.மு.க., கூட்டணிக்கு, 41 ஆயிரத்து, 230 தபால் ஓட்டுகள் மட்டும் கிடைத்துள்ளன; இது, 20 சதவீதம்.மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு, 13 சதவீத தபால் ஓட்டுகள் கிடைத்துள்ளன.

கன்னியாகுமரி தொகுதியில் மட்டும், தபால் ஓட்டு பதிவில் தலைகீழ் மாற்றம் நடந்திருக்கிறது. அங்கு, தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட, அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, கூடுதல் தபால் ஓட்டுகள் கிடைத்துள்ளன.இந்த தொகுதியில், காங்கிரசுக்கு, 2,608 ஓட்டுகளும், பா.ஜ.,விற்கு, 2,704 ஓட்டுகளும் கிடைத்துள்ளன. பெரம்பலுார் தொகுதியில், பதிவான தபால் ஓட்டுகளில், 83.5 சதவீதம், தி.மு.க., வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும், 'நோட்டா'விற்கும் பலர் தபால் ஓட்டளித்துள்ளனர்.
- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)