திருச்செந்துாரில், அ.தி.மு.க., வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன். இவர் மீது, கொலை வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, தி.மு.க., நகர செயலரின் தம்பி மீது, வெடிகுண்டு வீசி தாக்க முயன்ற வழக்கு, ஆறுமுகநேரி, தி.மு.க., அலுவலகத்தை, தீ வைத்து எரித்த வழக்குகள் உள்ளன.எப்படியும், 'சீட்' கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், ஒரு மாதம் முன்பே, வீடு வீடாக, 'குக்கர்' கொடுத்து, ஆதரவை திரட்டி வைத்திருந்தார். இப்போது, அ.ம.மு.க., அங்கே போட்டியிடுகிறது. வடமலைபாண்டியன் என்பவர் நிற்கிறார். அவருக்கு, குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.அ.ம.மு.க.,வினர் ஓட்டு கேட்டு செல்லும் போது, ஒவ்வொரு வீட்டிலும், 'குக்கர் வந்ததா' என கேட்க, 'ஆமாப்பா, ரொம்ப தேங்சுப்பா..' என்கின்றனர் பெண்கள்.'அய்யோ அய்யோ...' என, அடித்துக் கொள்ளும், அ.தி.மு.க.,வினர், 'ஏண்ணே நீங்க குக்கர் வாங்கி குடுத்தீங்க... வேற எதயாவது குடுத்திருக்கலாம்ல்ல...' என, வேட்பாளரிடம் புலம்புகின்றனர்.அவரும் கடுப்பாகி, 'அப்ப வீடு வீடா போயி, குக்கர திருப்பிக் குடு...னு கேக்கவாடா..?' என்கிறார் பரிதாபமாக.
வாசகர் கருத்து