ஹரியானாவில் பா.ஜ., 'சுனாமி' 10 தொகுதிகளிலும் வெற்றி

சண்டிகர், ஹரியானாவில், லோக்சபா தேர்தலில், பா.ஜ., அலை, 'சுனாமி' சுழன்றடித்து, மொத்தமுள்ள பத்து தொகுதிகளையும் அள்ளியது.ஹரியானா மாநிலம், பெரும்பாலும் காங்., கோட்டையாகவே இருந்தது. இங்கு, 2014 வரை, பா.ஜ., இரண்டாம் இடம் கூட பிடித்ததில்லை, அத்துடன், மாநிலத்தில், சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.வால், குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடிந்ததில்லை.ஆனால், 2014ல், இந்த நிலை மாறியது. அந்த தேர்தலில், எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு, ஏழு இடங்களில் வெற்றி பெற்றது. இதன்பின் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 90 தொகுதி களில், 47ல் வென்று, முதல் முறையாக, இம்மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. முதல்வராக, மனோகர் லால் கட்டார் தேர்வு செய்யப்பட்டார்.வழக்கமாக, ஹரியானாவில், ஜாட் இன மக்கள் யாருக்கு ஓட்டளிக்கின்றனரோ, அந்த கட்சியே வெற்றி பெறும். ஆனால், ஜாட் இனத்தை தவிர, மற்ற இன மக்களின் ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், பா.ஜ., வெற்றி பெற்றது. மேலும், ஜாட் இன ஓட்டுகள் பிரிந்ததும், பா.ஜ.,வும் கூடுதல் பலமாக அமைந்தது. எதிர்க்கட்சிகளில் ஒன்றாக இருந்த, ஓம் பிரகாஷ் சவுதாலா தலைமையிலான, இந்திய தேசிய லோக்தள் கட்சி, ஓராண்டுக்கு முன் உடைந்தது. சவுதாலாவின் இளைய மகன், அஜய் சவுதாலா, லோக்தள் கட்சியிலிருந்து பிரிந்து, 'ஜனநாயக் ஜனதா கட்சி' என்ற புதிய கட்சியை துவக்கினார். இது, லோக்தள் கட்சிக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.ராணுவத்தில், ஹரியானாவை சேர்ந்தோர், பலர் பணியாற்றுகின்றனர். புல்வாமா தாக்குதலும், அதற்கு, பதிலடியாக, பாகிஸ்தானில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலும், ஹரியானா மக்களிடம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் மோடி அலையும் சேர்ந்தது. இது, ஹரியானாவில், பா.ஜ.,வுக்கு மாபெரும் வெற்றி பெற்று தந்துள்ளது.நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல், ரோத்தக் தொகுதியை தவிர, மற்ற அனைத்திலும் பா.ஜ., தொடர்ந்து முன்னிலை வகித்தது. ரோத்தக் தொகுதியில், காங்கிரசின், தீபேந்தர் சிங் ஹுடாவுக்கும், பா.ஜ.,வின் அரவிந்த் குமார் சர்மாவுக்கு இழுபறி நீடித்தது. முடிவில், அரவிந்த் குமார் சர்மா வெற்றி பெற்றார்.காங்கிரசை சேர்ந்த, முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹுடா, சோனிபட் தொகுதியில், தோல்வியடைந்தார்.ஹரியானாவில், மொத்தம் உள்ள, 10 தொகுதிகளையும் கைப்பற்றி, பா.ஜ., சாதனை படைத்துள்ளது.மாநிலத்தில், செப்டம்பர், அக்டோபரில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலுக்கான முன்னோட்டமாக, லோக்சபா தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)