அறிவாலயத்தில் கொண்டாட்டம்: மாம்பழத்தை நசுக்கி எதிர்ப்பு

சென்னை, தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் தேசிய அளவில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் அமோக வெற்றி பெற்றதால் சென்னை அறிவாலயத்திலும் பா.ஜ., அலுவலகமான கமலாலயத்திலும் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்க கொண்டாடினர்.அறிவாலயம்
லோக்சபா தேர்தல் முடிவுகளில் தி.மு.க., கூட்டணி முன்னிலை வகிக்கிறது என்ற தகவல் வெளியானதும் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கும் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கும் திரண்டு வந்தனர்; மேளதாளம் முழங்க ஆடி பாடினர்.வீட்டிற்கு முன் எந்த ஆட்டமும் வேண்டாம் என ஸ்டாலின் வீட்டில் இருந்த சிலர் சொன்னதும் அங்கு கூடிய தொண்டர்கள் நேராக அறிவாலயத்திற்கு வந்தனர். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மாம்பழத்தை நசுக்கி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பா.ம.க. தோல்வியை கொண்டாடும் வகையில் அக்கட்சியின் சின்னமான மாம்பழத்தை காலில் போட்டு மிதித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கமலாலயம்
தமிழக பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ஐந்து வேட்பாளர்களும் தோல்வி முகத்தில் உள்ளனர் என்ற தகவல் வந்ததால் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ., தொண்டர்கள் வருத்தமாக காணப்பட்டனர். ஆனால் தேசிய அளவில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று மீண்டும்மோடி பிரதமர் பதவி ஏற்க இருப்பதால் உற்சாகம் அடைந்தனர்.அதை கொண்டாடும் வகையில் மாநில நிர்வாகிகள் சக்கரவர்த்தி நிர்மல்குமார் உள்ளிட்ட பலர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கினர். காலை 10:00 மணி அளவில் கமலாலயத்திற்கு திரண்டு வந்த தொண்டர்கள் 'பிரதமர் மோடி வாழ்க' என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர். செண்டை மேளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பா.ஜ., வினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தாயகம்
தி.மு.க. கூட்டணியில் ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட ம.தி.மு.க. வெற்றி முகத்தில் உள்ளது தெரிய வந்ததும் அக்கட்சியின் தொண்டர்களும் அங்கு திரண்டு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில் ''மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்தாலும் தமிழகத்தில் பெற்றுள்ள வெற்றியின் வாயிலாக அதை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ''தமிழகம், திராவிட பூமி என்பதை, மீண்டும் நிரூபித்து இருக்கிறது,'' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)