தேவை இலவசங்கள் தானா?

சென்னை:'இலவசங்களை அள்ளி விடும் கட்சிகளுக்கு, மக்களை ஆள மனமிருக்கிறதா?' என, சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முக்கிய கட்சிகள் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. போட்டி போட்டு ஏலம் விடுவதுபோல, இலவசங்களை அள்ளி இறைத்து விட்டு போகும் கட்சிகளில், ஒன்று கூட, அடிப்படைத் தேவைகளை கண்டுகொள்ளவில்லை. மாதம், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த வருமானம் உள்ள, 70 சதவீத மக்கள், கல்விக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும் மட்டுமே, இரவு பகலாக உழைத்து, வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எதிர்காலத் தலைமுறைக்கு கல்வியையும், மருத்துவத்தையும் தர வேண்டியது தான் முதல் கடமை. இதை உணர்ந்தால், இப்போது கூட, இதற்கான சட்டங்களை கொண்டு வருவோம் என, மக்களை ஆள நினைக்கும் கட்சிகள் அறிவிக்கலாம்.அரசின் மொத்த செலவில், 40 சதவீத தொகை, அரசு ஊழியர்களுக்கே மாத ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும் செலவிடப்படுகிறது. மக்களின் வரிப் பணத்தில், 40 சதவீதத்தை எடுத்துக் கொள்கிற இவர்கள் தானே, அரசுப் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் சீர் செய்ய வேண்டும்.

அரசு ஊதியமாக, 1 ரூபாய் வாங்கும் ஊழியர் முதல், மாநிலத்தை ஆளும் முதல்வர் வரை, யாராக இருந்தாலும், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தான், குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும்.அப்போதுதான், எக்கேடு கெட்டால் என்ன என, கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசுப் பள்ளிகள், மாணவர்கள் பயிலும் தகுதியுடைய இடமாக மாறும்.

மாட்டுக் கொட்டகைகள் போல் மாறிக் கொண்டிருக்கும் அரசு மருத்துவமனைகளும், தரமுள்ளவைகளாக மாறும்.ஏற்கனவே கடனில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசின் நிதி நிலையில் தான், ஒவ்வொரு கட்சியும் எண்ணற்ற இலவசங்களையும், நுாற்றுக்கணக்கான திட்டங்களுக்கு உறுதிமொழிகளையும் தந்துள்ளன. நான் சொன்ன இந்த இரண்டு திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்துவோம் எனக் கூற, பணம் தேவையில்லை; மனம் தான் தேவை!இவ்வாறு தங்கர்பச்சான் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)