மாயாவதியின் பிரதமர் பதவி கனவு பொய்த்தது

லக்னோ: பிரதமர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த, பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதியின் கனவு, பொய்த்துள்ளதால், அவரது கட்சியினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில், நான்கு முறை முதல்வராக பதவி வகித்தவர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், மாயாவதி. ஆவேச பேச்சுக்கும், தடாலடி அரசியலுக்கும் பெயர் பெற்றவர்.கடந்த, 1995ல், இவர், முதல்வராக பதவியேற்றபோது, 'ஜனநாயகத்தின் பேரதிசயம்' என, முன்னாள் பிரதமர், நரசிம்மராவ் கூறினார். கடந்த முறை, உ.பி.,யில் நடந்த சட்டசபை தேர்தலில், படு தோல்வியை சந்தித்த பின், தேசிய அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். பா.ஜ.,வை முறியடிப்பதற்காக, தன் பரம எதிரி கட்சியான, சமாஜ்வாதியுடன் கைகோர்த்து, லோக்சபா தேர்தலில் களம் இறங்கினார்.

'காங்., - பா.ஜ., அல்லாத கட்சிகளின் தலைமையில், மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால், பிரதமர் பதவியில் அமர்ந்து விடலாம்' என்பதே, அவரது எண்ணம். இதற்காக, திட்டமிட்டு காய் நகர்த்தி வந்தார். தன் பிரதமர் பதவி கனவை, வெளிப்படையாக கூறாவிட்டாலும், அவரது நடவடிக்கைகள், அதை, அப்பட்டமாக வெளிப்படுத்தின. சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ், அவருக்கு பக்க பலமாக இருந்து வந்தார். அரவிந்த் கெஜ்ரிவால், நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களும், அவருக்கு ஆதரவு அளிக்க தயாராக இருந்தனர். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், மாநில கட்சிகளின் தலைவர்கள் சிலரும், அவரது பிரதமர் பதவி ஆசைக்கு பக்க பலமாக இருந்தனர்.

'சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைந்துள்ளதால், உ.பி.,யில், 50க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம்' என, உறுதியாக நம்பினார். ஆனால், உ.பி.,யில், இந்த முறையும் வீசிய மோடி அலை, மாயாவதியின் பிரதமர் பதவி கனவை, சிதறடித்து விட்டது. ஏற்கனவே, மாநில அரசியல் கைவிட்ட நிலையில், தேசிய அரசியலும், ஏமாற்றத்தை அளித்திருப்பது, மாயாவதியின் அரசியல் வாழ்க்கைக்கு, பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)