ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடில்லி: மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்கு முன், ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படும் 5 ஓட்டுச்சாவடிகளில் இருந்த விவிபேடில் பதிவான ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. பிரச்னை ஏற்படும் பகுதிகளில், 100 சதவீதம் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

டில்லியில் 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், திமுகவின் கனிமொழி, திரிணமுல் காங்கிரசின் டெப்ரிக் ஒ பிரையன், மார்க்சிஸ்ட் கட்சி பொது செயலர் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில் மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்கு முன்னர், விவிபேடில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும். கடைசியில் எண்ணக் கூடாது. விவிபேட் இயந்திரங்களை சரிபார்க்கும் போது முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், விவிபேட் இயந்திரங்களில் உள்ள 100 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

இதன் பிறகு நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது: இவிஎம் இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒப்புகை சீட்டை சரிபார்ப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.
ஒப்புகை சீட்டு எண்ணிக்கையும், இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கையும் சரியாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகம் ஏற்படுத்துபவையாக உள்ளன. மின்னணு இயந்திரங்களுக்கு முறையாக பாதுகாப்பு அளிக்கவில்லை. இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளில் சந்தேகப்படும்படியான நடமாட்டம் உள்ளது.
எங்கள் கோரிக்கை குறித்து நாளை (மே 22) பரிசீலனை செய்வதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பின்னர் எங்களை சந்திப்பதாக கூறியுள்ளது. பிரச்னை ஏற்படும் தொகுதிகளில் 100 சதவீதம் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என வலியுறுத்தினோம்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், எங்களின் கோரிக்கையை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரும் வலியுறுத்தியுள்ளார். மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை நாங்கள் கேட்டு கொண்டுள்ளோம். அதனை அவமானப்படுத்தக் கூடாது என்றார்.


காங்கிரஸ் மூத்த தலைவர் அபிசேக் சிங்வி கூறுகையில், நாங்கள் ஒன்றரை மாதமாக சந்தேகத்தை எழுப்பி வருகிறோம். எங்களுக்கு ஏன் பதிலளிக்கவில்லை என தேர்தல் ஆணையத்தை கேட்டோம். எங்களின் கோரிக்கையை கேட்ட ஆணையம், நாளை மீண்டும் சந்திப்பதாக கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)