கோரக்பூர் தொகுதி மீண்டும் பா.ஜ., வசமாகுமா?

கடைசி கட்டமாக, வரும், 19ல் தேர்தலை சந்திக்கும், உத்தர பிரதேசத்தின், 13 தொகுதிகளில், கோரக்பூர் மிகவும் முக்கியமானது. ஏனெனில், உ.பி.,யின் இப்போதைய முதல்வர், பா.ஜ.,வின், யோகி ஆதித்யநாத்தின் செல்ல தொகுதி இது.கடந்த, 1998 முதல் 2017 வரை, தொடர்ந்து, ஐந்து முறை, இந்த தொகுதியின், எம்.பி.,யாக ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கு முன், அவரின் குருநாதரும், கோரக்நாத் மடத்தின் தலைவருமான, யோகி அவெத்யநாத், மூன்று முறை, இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஹிந்து மஹா சபை சார்பில் ஒரு முறையும், பா.ஜ., சார்பில் இரண்டு முறையும் வெற்றி பெற்ற, அவெத்யநாத் மறைவுக்கு பின், யோகி ஆதித்யநாத், இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உ.பி., முதல்வராக அவர் ஆனதும், இந்த தொகுதியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத் தேர்தலில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியின், சமாஜ்வாதி வேட்பாளரான, பிரவீன் நிஷாத், இங்கு வெற்றி பெற்று, எம்.பி.,யாக உள்ளார்.ஏழாம் கட்ட தேர்தலில், ஓட்டுப்பதிவை சந்திக்கும், 13 தொகுதிகளும் கடந்த தேர்தலில், பா.ஜ., வசம் இருந்தவை. இந்த முறையும் அந்த வெற்றியை தொடர, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.ஆனால், உ.பி.,யின் கிழக்குப் பகுதியின், காங்., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவின் தீவிர பிரசாரம் மற்றும் பிரதமர் மோடி அரசு மீதான அதிருப்தி போன்றவற்றால், பா.ஜ., எண்ணம் நிறைவேறுமா என்பதுகேள்விக்குறியே!
மொத்தம், 19.54 லட்சம் வாக்காளர்களை உடைய இங்கு, பத்து வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். எனினும், மும்முனைப் போட்டி தான் நிலவுகிறது. பா.ஜ.,வின், போஜ்பூரி நடிகர், ரவி கிஷன்; காங்கிரசின், மதுசூதன் திரிபாதி; சமாஜ்வாதியின், ராம்புலால் நிஷாத் ஆகியோர் தான், முக்கிய போட்டியாளர்களாக திகழ்கின்றனர்.இந்த தொகுதியின், எம்.பி.,யான பிரவீன் நிஷாத், பா.ஜ.,வுக்கு சமீபத்தில் தாவினார். அதையடுத்து, சந்த்கபீர் நகர் தொகுதி வேட்பாளராக நிற்கிறார்.உ.பி.,யின் நட்சத்திர தொகுதிகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள, மோடியின் வாரணாசி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூரை, மீண்டும், பா.ஜ., வசம் கொண்டு வர, அக்கட்சி பகீரத பிரயத்னம் மேற்கொள்கிறது.முதல்வர் யோகி, இதுவரை இங்கு, 20க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். பிரதமர் மோடியும், 75 ஆயிரம் கோடி ரூபாய், விவசாயிகள் திட்டத்தை, இந்த தொகுதியில் தான் அறிவித்தார்.
முன்னேறிய வகுப்பினர், தலித் மக்கள் மற்றும் நிஷாத் சமுதாயத்தினர் ஓட்டுகளை, பா.ஜ., குறிவைத்துள்ளது. இந்த பகுதியில், ஆதித்யநாத் வைத்தது தான் சட்டம் என்பதால், அவரின் செல்வாக்கை உறுதிப்படுத்தும் விதமாக, தேர்தல் முடிவு இருக்கும்.அதே நேரம், யோகி ஆதித்யநாத் துவக்கிய, ஹிந்து யுவ வாஹினி என்ற அமைப்பு, இப்போது உடைந்துள்ளதாலும், ஆதித்யநாத்திற்கு எதிராக அந்த அமைப்பின் முன்னாள் தலைவர், சுனீல் சிங், பிரசாரம் மேற்கொள்வதாலும், போட்டி கடுமையாக மாறியுள்ளது.- கே.எஸ்.நாராயணன் -நமது சிறப்பு நிருபர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)