நடக்குமா? மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட தேர்தல்... பா.ஜ., - திரிணமுல் மோதலால் பதற்றம்

புதுடில்லி : மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், பா.ஜ., பேரணியின் போது வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, இரு கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் துவங்கியுள்ளது. இதனால், வரும், 19ல், கடைசி கட்ட லோக்சபா தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்க தொகுதிகளில், பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்வர், மம்தா பானர்ஜி தலைமை யிலான, திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ள மேற்கு வங்கம், ஏழு கட்டங்களிலும் தேர்தலை சந்திக்கிறது. வரும், 19ல் நடக்கும் கடைசி கட்டத்தில், மாநிலத்தில் உள்ள, ஒன்பது தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. இதற்காக, பா.ஜ., சார்பில், அதன் தேசியத் தலைவர், அமித் ஷா தலைமையில், கோல்கட்டாவில், நேற்று முன்தினம் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அப்போது, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தொண்டர்கள் இடையே, மோதல் ஏற்பட்டது; அது, வன்முறையாக மாறியது. கோல்கட்டா பல்கலை மற்றும் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் கல்லுாரி அருகே, இரு கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது; அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான, வித்யாசாகர் நினைவாக கட்டப்பட்டுள்ள அந்தக் கல்லுாரியில் இருந்த, அவரது மார்பளவு சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில், இரு கட்சிகளும் நேற்று வார்த்தைப் போரில் ஈடுபட்டன. வன்முறை தொடர்பாக, இரு கட்சித் தலைவர்களும் பரஸ்பரம் புகார் கூறியுள்ளனர். பா.ஜ., சார்பில், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், மவுனப் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், ஜிதேந்திர சிங், ஹர்ஷ் வர்தன், மூத்த தலைவர், விஜய் கோயல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

அனுமதி மறுப்புஅவர்கள் கூறியதாவது: ஜனநாயகத்தின் குரல்வலையை நசுக்கப் பார்க்கிறார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில், பிரசாரம் செய்வதற்கு, பா.ஜ., தலைவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளார். ஹெலிகாப்டர்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் ஆதரவோடு, பிரமாண்ட பேரணி நடத்தி யதை பொறுக்க முடியாமல், கற்களை வீசி தாக்கு தல் நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்தே, அங்கு வன்முறை வெடித்துள்ளது.

வன்முறையில் ஈடுபடும்படி, தன் கட்சித் தொண்டர்களை, மம்தா துாண்டி விட்டுள்ளார். பூட்டப்பட்டிருந்த கல்லுாரி வளாகத்தில், பூட்டப்பட்ட அறையில் இருந்த, ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை எப்படி உடைக்கப்பட்டிருந்தது. அவர்களது கட்சியினர் திட்டமிட்டு, இந்த சிலையை உடைத்து, பா.ஜ., மீது பழி போடுகின்றனர். மேற்கு வங்கத்தில், ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், தேர்தல் ஆணையம் தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, திரிணமுல் காங்கிரஸ் சார்பில், டில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி., யுமான, டெரக் ஓ பிரையன் கூறியதாவது: வித்யாசாகர் சிலையை, பா.ஜ.,வினர் சேதப்படுத்தினர் என்பதற்கான, 'வீடியோ' ஆதாரங்கள் உள்ளன; அவற்றை, தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளோம். இதன் மூலம், சிலையை சேதப்படுத்தியதுடன், அமித் ஷா ஒரு பொய்யர் என்பதும் நிரூபணமாகி உள்ளது. கோல்கட்டா மக்கள், அதிர்ச்சியிலும், கோபத்திலும் உள்ளனர். மேற்கு வங்கத்தின் கவுரவத்துக்கு, பா.ஜ., களங்கம் ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மக்களால் மதிக்கப்படும், வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளனர்.அந்த சிலையை உடைக்கும்படி, பா.ஜ.,வினர் கூறியது தொடர்பான, வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும், தேர்தல் ஆணையத்திடம் அளித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், மம்தா பானர்ஜி உட்பட, திரிணமுல் கட்சியின் மூத்த தலைவர்கள், சமூக வலைதளங்களில், தங்கள் கணக்கில், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் படத்தை வைத்துள்ளனர். கோல்கட்டாவில் நடந்த வன்முறையைக் கண்டித்து, திரிணமுல் காங்கிரஸ் சார்பில், நேற்று பேரணியும் நடத்தப்பட்டது.

அதிரடிவரும், 19ல், ஏழாவது கட்டத் தேர்தல் நடக்க உள்ளது. இந்தக் கட்டத்தில், எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. அதில், மேற்கு வங்கத்தில் உள்ள, ஒன்பது தொகுதிகளும் அடங்கும். மேற்கு வங்கத்தில், பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதுகுறித்து விவாதித்தனர்.
தேர்தல் நடக்கும் தொகுதிகளில், நாளையுடன் பிரசாரம் முடிவடைவதாக இருந்தது. ஆனால், தொடர்ந்து வன்முறை வெடிப்பதாலும், அசாதாரண சூழல் நிலவுவதாலும், இன்று இரவு, 10:00 மணியுடன், பிரசாரத்தை முடிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
'அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்' பா.ஜ., தலைவர் அமித் ஷா, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சகோதரி மம்தா அவர்களே, நீங்கள் மேற்கு வங்கத்தில் மட்டுமே, போட்டியிடுகிறீர்கள். அதுவும், வெறும், 42 தொகுதிகளில் மட்டும் தான். ஆனால், பா.ஜ., வேட்பாளர்கள், நாடு முழுவதும் போட்டியிடுகின்றனர். எந்த ஒரு இடத்திலும், கலவரமும் நடக்கவில்லை; பிரச்னையும் இல்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் வன்முறை நடக்கிறது என்றால், அதற்கு காரணம், நீங்கள் தான். திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்தவர்களால் தான், வன்முறை ஏற்பட்டது. நல்லவேளையாக, எனக்கு பாதுகாப்பாக, மத்திய ரிசர்வ் படை போலீசார் இருந்தனர்; அவர்கள் மட்டும் இல்லையெனில், என்னால் தப்பியிருக்கவே முடியாது. மூர்க்கத்தனமான வன்முறை நடைபெற்றது. காயங்கள் இன்றி தப்பியதற்கு, மத்திய ரிசர்வ் போலீசாரே காரணம். திரிணமுல் காங்கிரசாரின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது, அவர்களின் ஆட்சியின் நேரம் முடிவுக்கு வரப்போகிறது என்பது தெரிகிறது. ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ள, 23ம் தேதிக்கு பின், மம்தாவின் ஆட்சி முடிந்து விடும். கலவரத்தை அடக்க, மாநில போலீசார் முன்வரவில்லை. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. உ.பி., முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பத் தெரிந்த தேர்தல் ஆணையம், மம்தா விஷயத்தில் மட்டும் மவுனம் காக்கிறது. இதுவரை நடந்துள்ள ஆறு கட்ட தேர்தல்களிலேயே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை, பா.ஜ., தாண்டிவிட்டது. தற்போது, ஏழாம் கட்ட தேர்தல் முடியும் போது, 300 இடங்களைத் தாண்டி, பெரும் வெற்றிக்கான இலக்கை, பா.ஜ., தொடும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)