6ம் கட்ட லோக்சபா தேர்தலில் 63 சதவீதம் ஓட்டுப்பதிவு: மே.வங்கத்தில் வழக்கம் போல சலசலப்பு

புதுடில்லி: லோக்சபாவுக்கு ஆறாம் கட்டமாக, 59 தொகுதிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில், 63.3 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில், வழக்கம் போல் நடந்த சில வன்முறை சம்பவங்களை தவிர, தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்து, தேர்தல் தேதிகளை, மார்ச், 10ல் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆறாம் கட்டமாக, 59 தொகுதிகளுக்கு, நேற்று தேர்தல் நடந்தது.உத்தர பிரதேசத்தில், 14; ஹரியானாவில், 10; பீஹார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில், தலா, எட்டு; டில்லியில், ஏழு; ஜார்க்கண்டில், நான்கு என, மொத்தம், 59 தொகுதிகளுக்கு, தேர்தல் நடந்தது.

பலத்த பாதுகாப்புஇந்த, 59 தொகுதிகளிலும், மொத்தம், 979 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மத்திய அமைச்சர்கள், ராதா மோகன் சிங், ஹர்ஷ் வர்தன், மேனகா; சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ்; காங்., மூத்த தலைவர்கள், திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில், நேற்று தேர்தல் நடந்தது,தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த, தேர்தல் ஆணையம், அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. 2.13 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 59 தொகுதிகளிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.நேற்று காலை, 7:00 மணிக்கு, 59 தொகுதிகளிலும், ஓட்டுப்பதிவு
துவங்கியது. டில்லியில், சில ஓட்டுச்சாவடிகளில், 50 நிமிடம் தாமதமாக, ஓட்டுப்பதிவு துவங்கியது.டில்லியில் உள்ள, ஏழு தொகுதிகளிலும், மொத்தம், 164 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்து தொகுதிகளிலும், துவக்கம் முதலே, ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. சில ஓட்டுச்சாவடிகளில், மின்னணு ஓட்டு இயந்திரங்கள் பழுதானதாக புகார்கள் வந்தன; அவை, உடன் சரி செய்யப்பட்டன.

நீண்ட வரிசைமேற்கு வங்கத்தில், எட்டு தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. மாநிலத்தில், இதற்கு முன் நடந்த ஐந்து கட்ட தேர்தல்களிலும், பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. நேற்றும், சில தொகுதி களில், வன்முறை, மோதல்கள் ஏற்பட்டன. எனினும், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.மொத்தம், 59 தொகுதி களிலும், நேற்று மாலை, 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. பல தொகுதிகளில், ஓட்டுப்பதிவு நேரம் முடிந்த பின்னும், நீண்ட வரிசையில் நின்று, வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.நேற்று மாலை, 7:00 மணி நிலவரப்படி, 59 தொகுதிகளிலும், மொத்தம், 63.3 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.மேற்கு வங்கத்தில், 80.16 சதவீதம்; டில்லியில், 60; ஹரியானா வில், 62.91; உத்தர பிரதேசத்தில், 53.37; பீஹாரில், 59.29; ஜார்க்கண்டில், 64.46; மத்திய பிரதேசத்தில், 60.40 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தகவல் வெளியாகி உள்ளது. டில்லியில், 2014 லோக்சபா தேர்தலில், 64 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இப்போது, 4 சதவீத ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.

இறுதி கட்டம்லோக்சபாவுக்கு, முதல் கட்டதேர்தல், ஏப்., 11; இரண்டாம் கட்ட தேர்தல், 18; மூன்றாம் கட்ட தேர்தல், 23; நான்காம் கட்ட தேர்தல், 29ம் தேதியும், ஐந்தாம் கட்ட தேர்தல், மே, 5ம் தேதியும் நடந்தன.ஐந்து கட்டத்தில், 424 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த ஐந்து கட்டத்தில் சராசரியாக, 78 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. ஆறாம் கட்டமாக, 59 தொகுதிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில், 63.3 சதவீத ஓட்டுகள் பதிவாகின.லோக்சபா தேர்தல், வரும், 19ல் முடிகிறது. ஏழாவது மற்றும் இறுதி கட்டமாக, பீஹார், மத்திய பிரதேசத்தில் தலா, எட்டு; மேற்கு வங்கத்தில், ஒன்பது; பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் தலா, 13; ஹிமாச்சல பிரதேசத்தில், நான்கு; ஜார்க்கண்டில், மூன்று; சண்டிகரில், ஒன்று என, 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.தேர்தல் நடந்த, 542 தொகுதிகளுக்கான, ஓட்டு எண்ணிக்கை, மே, 23ல், நடக்கிறது.

ஓட்டு போட்ட வி.ஐ.பி.,க்கள்ஆறாவது கட்ட தேர்தலில், வி.ஐ.பி.,க்கள் பலர் ஆர்வமாக ஓட்டளித்தனர்.ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், தன் மனைவியுடன், ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின், அவர் முதல் முறையாக ஓட்டளித்துள்ளார்.துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, நிர்மான் பவன் ஓட்டுச் சாவடியில் ஓட்டளித்தார். காங்., தலைவர் ராகுல், அவரது தாயும், கட்சியின் மூத்த தலைவருமான சோனியா, பொதுச் செயலர் பிரியங்கா, ஆகியோர், புதுடில்லி தொகுதியில் ஓட்டளித்தனர்.டில்லி முதல்வர், கெஜ்ரிவால், முன்னாள் முதல்வர், ஷீலா தீட்ஷித், மத்திய அமைச்சர்கள், சுஷ்மா சுவராஜ், ஹர்ஷ் வர்தன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசு உயர் அதிகாரிகள் உட்பட பலரும் நேற்று ஆர்வமாக ஓட்டளித்தனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)