பா.ஜ.,வுக்கு உதவும் மா.கம்யூ., : மே.வங்க திருப்பம்

கோல்கட்டா : பிரதமர் மோடிக்கு எதிர்பாராத விதமாக அவரது எதிரியிடமிருந்து கூட இந்த தேர்தல் வெற்றிக்கு உதவி கிடைக்கிறது. மேற்கு வங்கத்தில் தங்கள் எதிரியான மம்தாவை வீழ்த்த இடதுசாரிகள் பா.ஜ.,வை ஆதரிக்கும் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

அசைக்க முடியாத ஆட்சி ;அரசியல் களத்தில் பா.ஜ.,வும், மா.கம்யூ., உள்ளிட்ட இடதுசாரிகளும் நேரடி எதிர்க்கட்சிகள். ஆனால், வங்கத்தில் நிலைமை வேறாக உள்ளது. அங்கே, கடந்த 2011 ல், இடதுசாரி அரசாங்கத்தை வீழ்த்தி மம்தா ஆட்சியை பிடித்தார். அதுவரை, 1977 முதல் 2011 வரை அசைக்க முடியாமல் அங்கு 34 ஆண்டுகள் கோலோச்சியவர்கள் இடதுசாரிகள்.

ஆனால், மம்தா ஆட்சிக்கு வந்த பின்னர் தலைகீழாகிவிட்டது. திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களின் அராஜகத்தை, தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மாநிலத்தின் பல பகுதிகளில் இடதுசாரிகள் தவிக்கிறார்கள். எனவே, தங்களது முதல் எதிரியான மம்தாவை வீழ்த்துவதற்கு அவர்கள் வலுவில்லாத பகுதிகளில் பா.ஜ.,வை ஆதரிக்கிறார்கள்.

அதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தியாளர்களும் சில இடங்களில் பா.ஜ.,வை ஆதரிக்கிறார்கள். இதன் மூலம், 2021 சட்டசபை தேர்தல் குறித்து மம்தாவை எச்சரிக்க நினைக்கிறார்கள்.

எரிநெருப்பு ; எண்ணெய் சட்டி :இந்த நிலையை உணர்ந்துள்ள மே.வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த மா.கம்யூ., தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிணாமுலை எதிர்ப்பதற்காக பா.ஜ.,வை ஆதரிப்பது, 'எரிநெருப்பிற்கு தப்பி எண்ணெய்ச் சட்டியில் விழுவதற்கு சமம்,' என்று, மா.கம்யூ., வங்க நாளிதழான 'கணசக்தி' கட்டுரையில் இடதுசாரி ஊழியர்களை எச்சரித்துள்ளார்.

மம்தாவும் இந்த விசயத்தை குறிப்பிட்டு, 'நமது பழைய எதிரிகள், புதிய எதிரிகளோடு கைகோர்த்திருக்கிறார்கள், ஜாக்கிரதை,' என்று திரிணாமுல் தொண்டர்களை எச்சரித்துள்ளார்.

20 தொகுதிகளுக்கு குறி!கடந்த 2014 தேர்தலில், பா.ஜ., 2 எம்.பி.,சீ்ட்டுகளை பெற்று வங்கத்தில் முன்னேறியது. அப்போதே, ராய்கஞ்ச, டார்ஜிலிங், அலிப்பூர், மால்டா, அசன்சால் உள்ளிட்ட 10 தொகுதிகளில் திரிணாமுலுக்கு கடும் போட்டியை கொடுத்தது பா.ஜ., எனவே, இந்தமுறை மொத்தமுள்ள 42 தொகுதிகளில், 20 தொகுதிகளை பா.ஜ., குறிவைத்துள்ளது. இது சாத்தியம் தான் என்கிறார்கள் பா.ஜ., தலைவர்கள்.

உயரும் ஓட்டு :ஏனெனில், கடந்த 2011 தேர்தலில், இடதுசாரிகள் தோற்கும் போது, 39.6 சதவீத ஓட்டுகளை பெற்றார்கள். அப்போது பா.ஜ., ஓட்டு சதவீதம் வெறும் 4.06 சதவீதம் தான். ஆனால், 5 ஆண்டுகள் கழித்து கடந்த தேர்தலில் இடதுசாரிகளின் ஓட்டு சதவீதம் 25.6 சதவீதமாக சரிந்தது.

அதேநேரத்தில் பா.ஜ., ஓட்டு சதவீதம் 10.28 சதவீதமாக உயர்ந்தது. எனவே, இந்தமுறை குறிப்பிடத்தக்க வெற்றியை பெறமுடியும். அதற்கு இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் திரிணாமுல் அதிருப்தியாளர்களின் ஆதரவும் கூட உதவும் என்று நம்புகிறார்கள்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)