சென்னையில் பணக்காரர்கள் ஓட்டளிப்பதில்லை; மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆதங்கம்

சென்னை; 'அதிகம் படித்தவர்கள் உள்ள சென்னையில், 30 சதவீதம் பணக்காரர்கள், வேலைக்கு செல்வோர் ஓட்டளிப்பதில்லை' என, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கி, 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 40 லட்சத்து, 57 ஆயிரத்து, 360 வாக்காளர்கள் உள்ளனர்.இதில், 1.25 லட்சம் புதிய வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மாநிலத்திலேயே, அதிக வாக்காளர்கள் கொண்ட சென்னையில், ஒவ்வொரு தேர்தலிலும் சராசரியாக, 60 சதவீதம் மட்டுமே ஓட்டுப்பதிவாகிறது. அதிகம் படித்தவர்கள் உள்ள சென்னையில், 40 சதவீதம் பேர், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற முன்வருவதில்லை.ஒவ்வொரு தேர்தலிலும், பல்வேறு கட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், ஓட்டளிக்க மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இது குறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், ஒவ்வொரு தேர்தலின் போதும், ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஆனாலும், வாக்காளர்கள், தங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய முன்வருவதில்லை.இதற்கு, அரசியல் கட்சிகள் மீதான கோபம் ஒருபுறம் இருந்தாலும், வரிசையில் காத்திருந்து ஓட்டளிக்க வேண்டுமா என, பலர் தயக்கம் காட்டுகின்றனர்.கடந்த தேர்தல்களில் பதிவான ஓட்டுகளை பார்க்கும்போது, ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் ஆகியோரில், 90 சதவீதம் பேர், தங்களது ஓட்டுகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் பதிவு செய்துள்ளனர். ஆனால், பணக்காரர்கள், வேலைக்கு செல்வோர் என, 30 சதவீதம் பேர், ஓட்டளிக்க தயக்கம் காட்டுகின்றனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வேலை நிமித்தமாக சென்றோர் என, 10 சதவீதம் பேர் ஓட்டுளிப்பதில்லை. இதன் காரணமாக, ஒவ்வொரு தேர்தலிலும், சராசரியாக, 40 சதவீதம் பேர் ஓட்டளிப்பதில்லை.இந்தாண்டு, மாற்றுத்திறனாளிகள், முதியோர், கொரோனா தொற்றுக்கு ஆளானோர் உள்ளிட்டோருக்கு, தபால் ஓட்டு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தாண்டு ஓட்டு சதவீதம் உயரும். மேலும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அந்நிறுவனத்திற்கே சென்று, ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறோம்.வரிசையில் காத்திருக்க வேண்டுமா என, தயக்கம் காட்டுவோர், காலை, மாலை நேரங்களை தவிர்த்து, பிற்பகல் நேரங்களில் ஓட்டளிக்க வரலாம்.அப்போது, மக்கள் வரத்து குறைவாக இருப்பதால், விரைவாக சென்று ஓட்டளிக்க முடியும். எனவே, அனைத்து தரப்பினரும் தவறாமல், ஓட்டுளித்து ஜனநாயக கடமையை செய்ய முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)