சமாளிப்பு! 43 சாவடிகளில் ஓட்டுகளை சரிபார்க்க முடிவு; தேர்தல் அதிகாரிகள் குளறுபடியால் புது குழப்பம்

மாதிரி ஓட்டுப்பதிவிற்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவியில் இருந்த பதிவுகளை நீக்காமல், தேர்தலை அதிகாரிகள் நடத்தியதால், குளறுபடி ஏற்பட்டுள்ளது. அந்த குளறுபடிகளை சமாளிக்க, 43 ஓட்டுச் சாவடிகளில், ஓட்டு சரிபார்ப்பு கருவியில், அச்சிட்டு விழுந்த, ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க, தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.


தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகள், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஏப்ரல், 18ல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 23ல் நடக்கவுள்ளது. சூலுார், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 19ல், இடைத்தேர்தல் நடக்கிறது.

மறு ஓட்டுப்பதிவு:முறைகேடுகள் காரணமாக, தர்மபுரி, திருவள்ளூர், கடலுார் லோக்சபா தொகுதிகளில், 10 இடங்களில், மறு ஓட்டுப்பதிவு நடத்த பரிந்துரைத்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு கூறியிருந்தார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவில் இருந்த, மாதிரி ஓட்டுகளை நீக்காமல், 13 மாவட்டங்களில் உள்ள, 46 ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் நடந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதனால், இந்த இடங்களையும் சேர்த்து, மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படலாம் என, தலைமை தேர்தல் அதிகாரி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.


இந்நிலையில், '13 இடங்களில், மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம், அன்று இரவே அறிவித்தது. இந்த பட்டியலில், ஆணையத்திற்கு முதலில் பரிந்துரைக்கப்பட்ட, 10 இடங்களுடன், மாதிரி ஓட்டுப்பதிவை நீக்காத, 46 ஓட்டுச்சாவடிகளில், தேனியில், இரண்டு; ஈரோட்டில், ஒன்று என, மூன்று ஓட்டுச்சாவடிகளும் இடம் பெற்றுள்ளன. மீதமுள்ள, 43 இடங்களில், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவியில் அச்சிட்டு விழுந்த, ஒப்புகை சீட்டுகளை எண்ண, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.


இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில், 13 இடங்களில், மறு ஓட்டுப்பதிவு நடத்த, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நான்கு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுடன்,13 இடங்களில், மறு ஓட்டுப்பதிவு நடத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடு விரலில் மை:மறு ஓட்டுப் பதிவின் போது, வாக்காளர்களுக்கு, இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும். அது மட்டுமின்றி, மேலும், 43 இடங்களிலும், குளறுபடிகள் நடந்துள்ளது தெரிய வந்தது. இங்கு, தேர்தல் நடத்துவதில்லை என, தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதற்கு மாற்றாக, ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவியில், அச்சிட்டு விழுந்த ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். தமிழகத்தில் மட்டுமல்ல, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், மாதிரி ஓட்டுப்பதிவு குளறுபடிகள் நடந்துள்ளன.


ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், காலை, 6:00 முதல், 7:00 மணி வரை, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. ஈரோட்டை பொறுத்தவரை, 50 மாதிரி ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை அழிக்காமல் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இறுதியாக பார்த்த போது, 41 ஓட்டுகள் வித்தியாசம் வந்துள்ளது. இதை கழித்தாலும், ஒன்பது ஓட்டுகள் குளறுபடி ஏற்படும். எனவே தான், அங்கு மறு ஓட்டுப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.


தேனி தொகுதிக்கு உட்பட்ட, ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவியில், மாதிரி ஓட்டுகளை அழிக்கவில்லை. பெரியகுளத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மாற்றியுள்ளனர். எனவே, இங்கும், மறு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.


இருப்பு:கோவையில், 2,000த்துக்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கிருந்து தேனிக்கும், ஈரோட்டிற்கும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய அனுமதி பெற்று தான், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்ய முடியும். கோவை மற்றும் தேனியில், அரசியல் கட்சிகளுக்கு, தகவல் தெரிவித்து விட்டு தான், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றப்பட்டதாக, கலெக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


தேர்தல் ஆணையத்தால், 2.75 லட்சம் தபால் ஓட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 1.85 லட்சம் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. இன்னும், 10 நாட்கள் அவகாசம் உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களுக்கும், பலத்த பாதுகாப்பை, தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

புது குழப்பம்:வட சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலுார், கடலுார், தஞ்சாவூர், துாத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில், ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. இந்த பட்டியலில், இடைத்தேர்தல் நடக்கும்,
சில சட்டசபை தொகுதிகளும் உள்ளன. மாதிரி ஓட்டுப்பதிவுகளை நீக்காமல், ஓட்டுப்பதிவை நடத்தி, தேர்தல் அதிகாரிகள் குளறுபடி செய்து உள்ளனர். இந்த குளறுபடிகளை சமாளிக்க, ஒப்புகை சீட்டுகளை எண்ணும் முடிவை, தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


இது, அரசியல் கட்சிகள் மத்தியில் புது குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு பின், இப்பிரச்னையால், சிலர் நீதிமன்றங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனிடையே, இடைத்தேர்தல் மற்றும், 13 இடங்களில் மறு ஓட்டுப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு, சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், தேர்தல், டி.ஜி.பி., அசுதோஷ் சுக்லா, மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எந்தெந்த இடங்களில் மறு ஓட்டுப்பதிவு?* திருவள்ளூர் - தனி லோக்சபா தொகுதியில், பூந்தமல்லி சட்டசபைக்கு உட்பட்ட, மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியின், 195ம் எண் ஓட்டுச்சாவடி


* தர்மபுரி லோக்சபா தொகுதியில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபைக்கு உட்பட்ட, அய்யம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின், 181, 182ம் எண் ஓட்டுச்சாவடிகள். நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியின், 192, 193, 194, 195ம் எண் ஓட்டுச்சாவடிகள். ஜாலிபுதுார் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியின், 196ம் எண் ஓட்டுச்சாவடி


* கடலுார் லோக்சபா தொகுதியில், பண்ருட்டி சட்டசபைக்கு உட்பட்ட, திருவதிகை நகராட்சி உயர்நிலைப் பள்ளியின், 210வது ஓட்டுச்சாவடி


* ஈரோடு லோக்சபா தொகுதியில், காங்கேயம் சட்டசபைக்கு உட்பட்ட, திருமங்கலம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியின், 248ம் எண் ஓட்டுச்சாவடி


* தேனி லோக்சபா தொகுதியில், ஆண்டிப்பட்டி சட்டசபைக்கு உட்பட்ட, பாலசமுத்திரம், கம்மவார் சரஸ்வதி நடுநிலைப் பள்ளியின், 67ம் எண் ஓட்டுச்சாவடி. பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட, வடுகப்பட்டி சங்கர நாராயணா நடுநிலைப் பள்ளியின், 197ம் எண் ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.


- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)