நாயுடுவை முந்துகிறாரா ராவ்?

ஐதராபாத் : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முந்திக்கொண்டு, மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்க களத்தில் இறங்கியுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். இந்திய அரசியல் வட்டாரத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரும் 13ஆம் தேதி சென்னையில் சந்தித்துப் பேச உள்ளார். முன்னதாக அவர், கேரள முதல்வர் பினராயி விஜயனையும் சந்திக்கிறார்.

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ், பாஜக தலைமையிலான கூட்டணியிலோ, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலோ இணையவில்லை. தேர்தலுக்கு பின்னர் மாநில அளவில் வலுவான கட்சிகளை இணைத்து காங்கிரஸ், பாஜக அல்லாத அணியை அமைக்க சந்திரசேகர ராவ் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

பினராயி விஜயனுடன் சந்திப்புஇந்நிலையில், சந்திரசேகர ராவ், இன்று (மே. 6) மாலை 6 மணிக்குப் பிறகு, திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினரயி விஜயனை சந்தித்துப் பேச உள்ளார். வரும் 13ஆம் தேதி சென்னை வரும் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற போதிலும், தேசிய அரசியல் நிலவரம் குறித்து ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் ஒருமுறை சந்திரசேகர ராவ் சென்னை வந்து மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துச் சென்றார். அப்போது சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்பட்டபோதும், அப்படிப்பட்ட முயற்சியில் தாம் ஈடுபடவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மறுத்திருந்தார்.

எனினும், லோக்சபாவுக்கு 5 கட்டத் தேர்தல்களே முடிந்துள்ளன. இன்னமும் இரண்டு கட்டத் தேர்தல்கள் நடக்க வேண்டி உள்ளது. வரும் மே 23 அன்று தான் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. ஆனால், அதற்கு முன்னதாகவே, சந்திரசேகர ராவ் மாநிலம் தோறும் பயணம் செய்து வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

யார் அணி... ராவ்?சந்திரசேகர ராவ் மாநிலக்கட்சிகளின் கூட்டணி அமைக்கவே முயற்சிப்பதாக கூறப்பட்டாலும், அவருக்கு பா.ஜ.,வின் ஆதரவு உள்ளதாக தேர்தலுக்கு முன்னரே ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அவரும் மே.வங்க முதல்வர் மம்தாவும் சேர்ந்து 4 வது அணி அமைக்கப்போவதாகவும், அது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்றும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

எனினும், தேசிய அரசியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட, முக்கியத்துவம் பெறுவதற்கே சந்திரசேகரராவ் முயற்சிக்கிறார் என்கின்றனர், தேசிய அரசியல் பார்வையாளர்கள்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)