கர்நாடகாவில், காங்., - ம.ஜ.த., தலைவர்கள்...திகைப்பு! சட்டசபை இடைத்தேர்தலா, உள்ளாட்சி தேர்தலா?

பெங்களூரு:கர்நாடகாவில், குந்த்கோல், சிஞ்சோலி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, 29ல் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

இரு முக்கிய தேர்தல்கள், அடுத்தடுத்து வருவதால், எதற்கு முக்கியத்துவம் அளிப்பது என தெரியாமல், காங்கிரஸ் - ம.ஜ.த., தலைவர்கள் உச்சக்கட்ட குழப்பத்தில் உள்ளனர்.லோக்சபா தேர்தலில் ஒன்றாக இணைந்து களப்பணியாற்றியவர்களுக்கு, உள்ளாட்சி தேர்தலில், மீண்டும் எதிரிகளாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


கூட்டணி நீடிக்குமா?

லோக்சபா தேர்தல் முடிவு எப்படியிருக்குமோ? முடிவுக்கு பின் சூழ்நிலை மாறுமா என்ற கேள்வி யால், இரு தரப்பிலும் தயக்கம் காட்டுகின்றனர்.கர்நாடகத்தில், குந்த்கோல் தொகுதி வெற்றி பெற்று அமைச்சராக இருந்த, சிவள்ளி காலமானதாலும், சிஞ்சோலி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த உமேஷ் யாதவ் ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் சேர்ந்ததால், இடைத்தேர்தல் நடக்கிறது.கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இரு தொகுதிகளை தக்க வைப்பதில் தீவிரம் காட்டுகிறது.


ஆனால், ம.ஜ.த.,வுக்கு இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதால், தேர்தலை கண்டு கொள்ள வில்லை.லோக்சபா தேர்தல் முடிவுக்கு பிறகு, கூட்டணி நீடிக்குமா என்ற ஐயமும் அவர்களிடம் உள்ளது. தேர்தல், 19ம் நடக்கிறது. இன்னும், 14 நாட்கள் தான் உள்ளது.காங்கிரசை பொறுத்தவரை இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.இதனால் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் தினேஷ் குண்டு ராவ், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பலரும் தொடர்ந்து இத்தொகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.ஒவ்வொரு தாலுகாக்களிலும், ஒவ்வொரு அமைச்சருக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு உதவியாக மூன்று, எம்.எல்.ஏ.,க்கள், தேர்தல் பணியை மேற்கொண்டுள்ளனர்.

பின்னடைவு

குந்த்கோலில் மூத்த அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே; சிஞ்சோலியில் லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மேற்பார்வையாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்தல் பிரசாரம் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் தலைவர்கள் மட்டும், வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர்.இதற்கிடையில், இம்மாதம், 29ல் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் டிக்கெட் பெறும் லாபியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், முக்கிய தலைவர்கள், இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருவதால், உள்ளூர் தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் நெருங்கியவர்களுக்கு டிக்கெட் வழங்கவில்லை என்றால், அடுத்த சட்ட சபை அல்லது லோக்சபா தேர்தலின் போது, தமக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தலைவர்கள் கருதுகின்றனர். இதனால் இடைத்தேர்தலை கவனிப்பதா, உள்ளாட்சி தேர்தலை கவனிப்பதா என குழப்பத்தில் உள்ளனர்.இரு தேர்தலும் அடுத்தடுத்து வருவதால், இக்கட்டத்தில் சிக்கியுள்ள தலைவர்கள், எந்த பக்கம் சாய்வது என்பது தெரிய வில்லை.காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே இடைத்தேர்தல் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். கூட்டணி கட்சியான, ம.ஜ.த., தலைவர்கள், இன்னும் தொகுதி பக்கம் திரும்பி பார்க்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, மட்டும் வந்த, ம.ஜ.த., தலைவர்கள், குடும்பத்துடன் ஹாயாக காலத்தை கழித்து வருகின்றனர்.

'ஷாக்'


ஏற்கனவே மைசூரில், ம.ஜ.த.,வினர் பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டதாக, அமைச்சர், ஜி.டி.தேவகவுடா பகிரங்கமாக தெரிவித்து, காங்கிரசுக்கு, 'ஷாக்' கொடுத்தார்.இப்போது, இடைத்தேர்தலுக்கு வராதது, பல சந்தேகங்களை எழுப்பிஉள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தலில், இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளதால், ம.ஜ.த., தலைவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, உள்ளூரிலுள்ள பிரமுகர்கள், ஒருவரை ஒருவர் எதிர் கொண்டு போட்டியிடுவர்.லோக்சபா தேர்தலில் ஒன்றாக இணைந்து களப்பணியாற்றிய அவர்கள், மீண்டும் எதிரிகளாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரசுக்கு, ம.ஜ.த., தான் போட்டி என்று காணப்படும் பகுதிகளில், உள்ளூர் தலைவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல், திகைத்து போய் உள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)