ம.பி., அரசுக்கு ஆதரவு, 'வாபஸ்' காங்கிரசுக்கு மாயாவதி மிரட்டல்

போபால் : மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, 'வாபஸ்' பெறப்போவதாக, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.மத்திய பிரதேசத்தில், கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், 114 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்கு, இரண்டு தொகுதிகள் குறைவாக இருந்ததால், பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டு, எம்.எல்.ஏ.,க்கள், சமாஜ்வாதியின் ஒரு, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், காங்., ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் கமல்நாத், முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியில், காங்., சார்பில் ஜோதிராதித்யா சிந்தியா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், லோகேந்திர சிங் ரஜ்புத் போட்டியிட்டார்.இதற்கிடையே, லோகேந்திர சிங், நேற்று, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். இது, பகுஜன் தலைவர் மாயாவதிக்கு, கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது:அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதில், பா.ஜ.,வுக்கு சற்றும் சளைத்தது இல்லை, காங்கிரஸ். எங்கள் கட்சி வேட்பாளரை, வேண்டுமென்றே கட்டாயப்படுத்தி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, காங்கிரசில் இணைத்து உள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால், மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் அரசுக்கு அளிக்கும் ஆதரவை, 'வாபஸ்' பெறுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)