பா.ஜ., படுதோல்வி அடையும்: ராஜஸ்தான் துணை முதல்வர், சச்சின் ஆரூடம்

ராஜஸ்தானில் சமீபத்தில், பிரசாரம் செய்த பிரதமர் மோடி, தேசியம், நாட்டின் பாதுகாப்பு, துல்லிய தாக்குதல், பயங்கரவாதிகள் வேட்டை போன்றவை குறித்து, காங்கிரஸ் கட்சிக்கு, பல கேள்விகளை எழுப்பியிருந்தாரே?
அவர் கேள்வி இருக்கட்டும். காங்கிரஸ் தான், அவரிடம் பல கேள்விகளை கேட்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன், ஆட்சிக்கு வரும் போது, அளித்த வாக்குறுதிகளான, ஆண்டுக்கு, 2 கோடி பேருக்கு வேலை, மேக் இன் இந்தியா - ஸ்டார்ட் அப் இந்தியா என, பல வாக்குறுதிகளை அளித்தாரே... அவற்றை நிறைவேற்றினாரா என, நான் கேட்கிறேன்.

தேச பக்தி, தேச பாதுகாப்பு குறித்து, காங்கிரஸ் பதில் என்ன?

பிரதமர் மோடி அல்லது பா.ஜ., தலைவர்களுக்கு மட்டும் தான் இவை இருக்கின்றன என்ற எண்ணம். எதிர்க்கட்சிகளையும், கேள்வி கேட்பவர்களையும், தேச விரோதிகள் என சித்தரிப்பது அவர்கள் வழக்கம்.

பா.ஜ., தலைமையிலான ஆட்சியில் தானே, போக்ரான் குண்டுவெடிப்பு சோதனைகள், பாக்., எல்லைக்குள் பறந்து சென்று தாக்குதல் போன்ற துணிகர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்று இல்லையே?

இந்தியாவின் வரலாற்றை யாரும் மாற்ற முடியாது. பாகிஸ்தானுடன் இரண்டு
போர்களில், இந்தியா வெற்றி பெற்றது, காங்கிரஸ் ஆட்சியில் தான். வங்கதேச போரில் இந்தியா அடைந்த வெற்றிக்கு காரணம், அப்போதைய காங்கிரஸ் அரசு தான். கார்கில் போரின் போது, காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா, அப்போதைய, பா.ஜ., அரசுக்கு முழுஆதரவை அளித்தார்.

அவர்களை கேட்டால், காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பர். சும்மா சொல்லக் கூடாது... உங்கள் ஆட்சி யில், நக்சல் தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம், சீன ராணுவ அத்துமீறல் நடந்துள்ளதே!

ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும், பிரதமர் மோடி, காங்கிரசையும், அதன் தலைவர்களையும், கடுமையாக சாடுகிறாரே... அதற்குஉங்கள் பதில் என்ன?

இது போன்ற தவறான பேச்சை, பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் ஐந்தாண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தோம். எவ்வளவு பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டோம் என்பதை, தேர்தல் முடிவுக்கு பின், மோடி எண்ணிப்பார்ப்பார்.அதே நேரத்தில், எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என மோடி அறிவித்தார்... அவற்றை செய்தாரா? பசு காவலர்களால், இறைச்சி வியாபாரிகள் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா

?பல மாநிலங்களில், காங்கிரசால், சரியான கூட்டணி அமைக்க முடியவில்லையே ஏன்?

அது, அந்தந்த மாநில விவகாரங்களைப் பொருத்தது. எங்களுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன.பா.ஜ., கூட்டணி அப்படியே, கட்டுக்கோப்பாக இருக்கிறதா என்ன? தேர்தலுக்கு பின், எங்கள் கூட்டணி மேலும் வலுவடையும்.

பல மாநிலங்களில் நீங்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறீர்கள். முடிவு எப்படி இருக்கும்?

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, துாக்கி அடிக்கப்படும். மக்கள், காங்கிரசுக்கு பெரு வாரியாக ஓட்டளித்து வருகின்றனர். தெற்கே, பா.ஜ., ஒரு இடம் கூட வெல்லாது. குஜராத்தில் கூட, பலத்த அடி வாங்கும். ராஜஸ்தான், ம.பி., போன்ற மாநிலங்களில், காங்., தான் வெற்றி பெறும்; மொத்தத்தில், மோடி அரசு வீழ்த்தப் படும்.

*ராஜஸ்தான் மாநில துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் என, இரண்டு பெரிய பொறுப்புகளை சுகமாக சுமக்கும், இளம் தலைவர், சச்சின் பைலட், 41, பா.ஜ., மற்றும் பிரதமர் மோடி மீது, கடுமையாக சாடி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

*ராஜஸ்தான் மட்டுமின்றி, பிற மாநிலங்களுக் கும் சென்று, அனல் கக்கும் பிரசாரம் மேற்கொள்கிறார். இவரின் தந்தை, மறைந்த ராஜேஷ் பைலட் போலவே, கட்சியினரை ஒருங்கிணைத்து செல்கிறார்.

*கடந்த, 2013 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்த போதும், துவண்டு விடாமல், கட்சியினரை ஒருங்கிணைத்து, 2018ல் ஆட்சியை கைப்பற்ற உறுதுணையாக இருந்தவர்.

*ஹிந்துவான இவர், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லாவின் மகளை மணந்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)