'அம்பானி கொள்ளையடித்த பணத்தில் 'நியாய்' திட்டம் செயல்படுத்தப்படும்'

சமஸ்திபூர்: 'நரேந்திர மோடியின் உதவியுடன், அனில் அம்பானி போன்றவர்கள் கொள்ளையடித்த பணத்தில் இருந்து, 'நியாய்' திட்டம் செயல்படுத்தப்படும்' என, காங்., தலைவர், ராகுல் தெரிவித்தார்.


பீஹாரின், சமஸ்திபூர் மாவட்டத்தில் நடந்த, தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், காங்., தலைவர், ராகுல் பேசியதாவது:பிரதமர் மோடி, ஜம்மு - காஷ்மீரின் உரி மற்றும் புல்வாமாவில் நடந்த ராணுவ தாக்குதலை, அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்.வேலை இல்லா திண்டாட்டம், அனைவரின் வங்கி கணக்கிலும், 15 லட்ச ரூபாய் போடப்படும் போன்ற, அவர் அளித்த வாக்குறுதிகள் பற்றி, வாய் திறக்க மறுக்கிறார்.வங்கிகளில் கடன் பெற்று, நாட்டை விட்டு தப்பி ஓடிய, நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்களை, மோடி காப்பாற்றி வருகிறார்.

அவரது அனைத்து வாக்குறுதிகளும் பொய் என, நிரூபணமாகி விட்டன. மக்களிடம் இருந்தவற்றையும் பறித்துக் கொண்டுவிட்டார்.சாதாரண மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், விவசாயிகளுக்கும் உதவுவதே, எங்கள் நோக்கம்.காங்., ஆட்சிக்கு வந்தால், கடன் செலுத்தாத விவசாயிகளை சிறைக்கு அனுப்ப மாட்டோம். மோடியின் உதவியுடன், அனில் அம்பானி போன்றவர்கள் கொள்ளையடித்த பணத்தில் இருந்து, 'நியாய்' திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

ராகுலை சந்தித்த ராகுல்!



பீஹார் பிரசார கூட்டத்தில், வேலையில்லா திண்டாட்டம் குறித்து, ராகுல் பேசிக் கொண்டிருக்கையில், கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனிடம், பெயரை கேட்டார். 'என் பெயர் ராகுல்' என அந்த சிறுவன் கூறியதும், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.அவனை மேடைக்கு வருமாறு அழைத்தார். அந்த சிறுவனை, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் பேசுகையில், ''தினந்தோறும், ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கின்றனர். பல்வேறு அரசு துறைகளில், 22 லட்சம் பணியிடங்கள், காலியாக உள்ளன. பஞ்சாயத்துகளில் வேலை வாய்ப்பு உருவாக்க, நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவற்றை, ராகுல் போன்றவர்களுக்கு வாங்கி கொடுப்பதே என் நோக்கம்'' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)