21 ஆண்டு கால தொடர் வெற்றி என்னாகும்? புவனேஸ்வரில் பிஜு ஜனதா தளம் அச்சம்

ஒடிசா தலைநகர், புவனேஸ்வர் லோக்சபா தொகுதியில், பிஜு ஜனதா தளத்தின், 21 ஆண்டு கால வெற்றி வரலாறு என்னாகும் என, அக்கட்சியினர் அச்சத்தில் உள்ளனர்.

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வர் நகரை உள்ளடக்கிய, புவனேஸ்வர் லோக்சபா தொகுதிக்கு, நேற்று தேர்தல் முடிந்துள்ளது. இங்கு ஏற்கனவே, 16 முறை தேர்தல் நடந்துள்ளது. அதில், எட்டு முறை காங்கிரஸ், மூன்று முறை, பா.ஜ., மற்றும் ஐந்து முறை, பிஜு ஜனதா தளம் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. ஒடிசாவில், 19 ஆண்டுகளாக, முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி, ஆட்சியில் உள்ளது. அதேபோல், புவனேஸ்வர் தொகுதியிலும், 1998 முதல், பிஜு ஜனதா கட்சியே, லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய, எம்.பி., பிரசன்ன குமார் பதாசனி, தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்.இந்தத் தேர்தலில், அவரை, பிஜு ஜனதா தளம், 'கழற்றி' விட்டுள்ளது. மாறாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அனுப் பட்நாயக்கை, வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பா.ஜ.,வில் விருப்ப ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அபராஜிதா சாரங்கி வேட்பாளராகியுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை நிறுத்தாமல், மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜனார்தன் பதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் நவீன் பட்நாயக் அரசின் மீதான அதிருப்தி அலை பரவலாக உள்ளது. ஆனால், வேட்பாளராக உள்ள, போலீஸ் அதிகாரி அனுப் பட்நாயக்கின் பிரசார ஸ்டைல், மக்களை சந்தித்து பேசும் விதம், வாக்காளர்களை கவர்ந்துள்ளது.

அதேபோல், பா.ஜ., வேட்பாளர் அபராஜிதா சாரங்கி, நவீன் பட்நாயக்கின் ஆட்சியில், ஒடிசாவில் வளர்ச்சி ஏற்படாத நிலை குறித்து,பிரசாரம் செய்துள்ளார். இதற்கிடையில், வேலைவாய்ப்பு இல்லாமல், பல்வேறு மாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்த குடும்பத்தினர், விவசாயிகளின் ஓட்டை, மார்க்சிஸ்ட் கட்சி வளைத்துள்ளது. எப்படியானாலும், புவனேஸ்வரில் பிஜு ஜனதா தளத்தின், 21 ஆண்டு கால வெற்றி நீடிக்குமா, நின்று விடுமா என, அக்கட்சியினர் அச்சத்தில் உள்ளனர்.

- கே.எஸ்.நாராயணன் -
நமது சிறப்பு நிருபர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)