குஜராத் படேல்களால் பா.ஜ., துாக்கம் போச்சு!

ஒரே கட்டமாக, 23ல் தேர்தலை சந்திக்கும், 26 தொகுதிகளை கொண்ட குஜராத்தில், கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளையும், பா.ஜ., வென்றது. இந்த முறையும் அப்படி வெல்ல வேண்டும் என்பது தான், அக்கட்சியின் ஆசை.ஆனால், அதை, ஹர்திக் படேல், 33, என்ற இளைஞன் தலைமையிலான, படேல் சமுதாயத்தினர், நிறைவேற்ற விட மாட்டார்கள் போலும்.குஜராத்தின் வடக்கு பகுதி மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில், படேல் சமுதாயத்தினர் தான் பெரும்பான்மையினராக உள்ளனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த சமுதாயத்தி னர், பா.ஜ.,வின் ஆதரவாளர்களாகத் தான் அவர்கள் இருந்தனர்.

அதை, இட ஒதுக்கீடு, வேலையின்மை போன்ற
பிரச்னைகளை எழுப்பி, ஹர்திக்படேல் உடைத்து விட்டார். தங்கள் இன இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என கோரி, அவர் நடத்திய போராட்டங்களில், 15க்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர்.அதை ஒவ்வொரு கூட்டத்திலும், காரசாரமாகபேசி, பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டுகளை திசை திருப்பி வருகிறார்.


சமீபத்தில் காங்கிரசில் அவர் சேர்ந்துள்ளதால், அந்த கட்சியினர், மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகள், தங்களுக்கு கிடைக்கும் என, நம்புகின்றனர்.ஆனால், இப்படியே விட்டால் பிரச்னை என நினைத்து, படேல் இனத் தலைவர்களை, பா.ஜ.,தலைவர், அமித் ஷா சந்தித்து வருகிறார்.


குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் அவர் போட்டி யிடுவதால், அந்த தொகுதியின் வெற்றிக்கு, இடையூறாக இருக்கும் படேல் பிரச்னையை தீர்க்க, அந்த இனத் தலைவர்களை, அமித் ஷா சந்தித்து வருகிறார்.ஹர்திக் படேல் சார்ந்துள்ள, கட்வா படேல் என்ற பிரிவின், விஷ்வ உமியா அமைப்பின் தலைவர், சி.கே.படேலை, சில நாட்களுக்கு முன், அமித் ஷா சந்தித்தார்.

அப்போது, லோக்சபா தேர்தலில் ஆதரவு
அளித்தால், மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததும், இந்தப் பிரச்னையை தீர்க்க சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என, அமித் ஷா உறுதி அளித்து உள்ளார்.மேலும், படேல் இளைஞர்கள் மற்றும் ஹர்திக் படேல் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள், வாபஸ் பெறப்படும் என்றும் உறுதி அளித்து உள்ளார். எனினும், ஹர்திக் படேல் என்ற, 33 வயது இளைஞனால், பா.ஜ.,வுக்கு எதிராக, படேல் இளைஞர்கள் துாண்டி விடப்பட்டு உள்ளதால், பா.ஜ., தலைவர்கள் துாக்கத்தை தொலைத்து உள்ளனர்.
- தர்ஷன் தேசாய் -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)