மேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா?

தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிடும், துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், ரவீந்திரநாத்தை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., பேசுகையில், 'கர்நாடகாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டுவதற்கு, ஆதரவு அளிப்பதாக, காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறியிருக்கிறார்' என குற்றம் சாட்டினார். ஆனால், 'ராகுல் அப்படி பேசவே இல்லை; இது பொய்யான தகவல்' என, முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பான, இரு தரப்பு கருத்துக்கள் இதோ...

காரணம் இல்லாமல் எதிர்ப்பதா?தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, முரண்பாடுகளின் மொத்த உருவ கூட்டணி. கோவை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக, காங்கிரசார் தேர்தல் பணியாற்றுகின்றனர்.கேரளாவில், வயநாடு தொகுதியில், ராகுலுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தேர்தல் பணி செய்கின்றனர். ராகுலிடம், அரசியல் முதிர்ச்சி இல்லை. அதனால் தான், வட மாநிலங்களில், ராகுலை, 'பப்பு' என, அழைக்கின்றனர்.

'கர்நாடக விவசாயிகளை, காங்கிரஸ் அரசு பாதுகாக்கும்; மேகதாது அணை கட்டுவதற்கு, காங்கிரஸ் அரசு துணை நிற்கும்.'காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைப்பதற்கு, காங்கிரஸ் அரசு முயற்சி செய்யும்' என, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ராகுல் பேசியுள்ளார். இப்படி, இரட்டை வேடம் போடக் கூடிய காங்கிரசையும், தி.மு.க.,வையும், எந்த விதத்தில் மக்கள் நம்புவர்?

'மோடி, மீண்டும் பிரதமராகக்கூடாது' என, எதிர்க்கட்சியினர் சொல்கின்றனரே தவிர, ஏன் வரக்கூடாது என்ற காரணத்தை, யாரும் சொல்ல முடியவில்லை. ஒரு நாட்டை, வல்லரசு நாடாக மாற்றுவது குற்றமா; 'மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்' எனச் சொல்வது குற்றமா; 'ஊழல், லஞ்ச லாவண்யம் இல்லாத, நாடாக மாற்றுவேன்' எனச் சொல்வது குற்றமா?

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணிக்கு, மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை முன்னிறுத்த தகுதி இல்லை. மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் மோடியை, காரணம் இல்லாமல் எதிர்க்கின்றனர். தேசிய அளவில் ராகுல், தமிழகத்தில் ஸ்டாலின் என, ஒரு குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து, நாட்டையும், தமிழகத்தையும் மீட்க வேண்டும் என, மோடி விரும்புகிறார். அதைத் தான் மக்களும் விரும்புகின்றனர்.

- ஆர்.எம்.பாபு முருகவேல், முன்னாள் எம்.எல்.ஏ., செய்தி தொடர்பாளர், அ.தி.மு.க.,

ஓட்டு வங்கி அரசியல்அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., கூட்டணி, புலி, ஆடு, பூனை, எலி, தவளை கூட்டணி அமைத்தது போன்று, பொறி வைத்து, வலை வைத்து, உருவான கூட்டணியாக உள்ளது. யாருக்கு யார் இரை எனத் தெரியாமல், கூட்டணி அமைத்துள்ளனர். மக்களை சித்ரவதை செய்கிற, இன்னலுக்கு ஆளாக்குகிற புலியைப் பிடிக்க, ஆட்டை கூண்டுக்குள் வைக்கிற மாதிரி, தமிழக மக்கள், அ.தி.மு.க., என்கிற ஆட்டை பலி கொடுத்து, புலியை பிடித்து, மீண்டும் காட்டிற்கு விரட்டுகிற பணியை செய்ய காத்திருக்கின்றனர்.

இப்படியொரு கூட்டணியை அமைக்க காரணமாக இருந்த, முதல்வர், இ.பி.எஸ்., மேகதாது அணை கட்டுவதற்கு, ராகுல் ஆதரவு தெரிவித்ததாக, பொய் செய்தியை, பிரசார மேடையில், பிரதமர் மோடியின் முன் பேசியது, கண்டனத்துக்கு உரியது.காவிரி பிரச்னையில், பலமுறை பேச்சு நடத்தியும், நீதிமன்ற தீர்ப்புகளை மதித்தும், கடந்த காலங்களில், காங்கிரஸ் அரசு, உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தல் நேரத்தில் கூட, 'தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியபோது, 'அதை, உடனே நிறைவேற்ற வேண்டும்' என, கர்நாடக அரசை, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், உடனே அமல்படுத்தினார். மக்களின் ஜீவதார பிரச்னையை முன்னிறுத்தி, ஓட்டு வங்கி அரசியலை, காங்கிரஸ் ஒருபோதும் செய்யாது. காவிரி பிரச்னையில், யார் துரோகம் செய்தனர்; யார் வெறும் கடிதம் எழுதி, நாடகம் நடத்தினர்; காவிரி மேலாண்மை வாரியத்தை, உரிய காலத்தில் அமைக்காமல் இருப்பது யார் என்பது, மக்களுக்கு தெரியும்.

நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி, நியாயமான உரிமைகளை பெற்று விட்ட பின்னும், ஒரு வலுவான காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு போன்றவற்றில், முறையான உறுப்பினர்களை நியமித்து, அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வராத, திராணியற்ற முதல்வர், ராகுல் சொல்லாதவற்றை சொன்னதாக சொல்லி, ஒரு மலிவான அரசியலை நடத்துகிறார்.

-சிவ.ராஜசேகரன், மாவட்டத் தலைவர், சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)