'எலக் ஷன்' தேய்ந்து, 'என்டர்டெய்ன்மென்ட்' ஆன கதை!

எலக் ஷன்' எனப்படும் தேர்தலை, 'என்டர்டெயின்மென்ட்'டோடு ஒப்பிட்டு, ஏடாகூடமாக எழுதுவதற்காக, என் மேல் அவதுாறு வழக்கு போட வேண்டுமென்று, நீங்கள் நினைத்தால், அது நியாயமல்ல.காந்தி காலத்து காங்கிரசுக்கு பின் தோன்றிய, அனைத்து கட்சி, கழகங்களும், இதற்கான பழியை அவரவர்களின் திறமைக்கு ஏற்ப, தகுதி பங்கீடு செய்து கொள்ளும் உரிமை பெற்றுள்ளன எனலாம். கடந்த, 1950ல், நான், அரை நிஜார் போட்டு, ஆரம்ப பள்ளி செல்லும் நாட்களில், சுவரில் சுண்ணாம்பு பூசி, இரட்டை மாட்டு சின்னத்தை மிக சிரமப்பட்டு, நீல கலர் சுண்ணாம்பால் வரையும் போது தான், 'தேர்தல்' நடப்பதாக தெரிய வரும்.
நீதி, நேர்மை, துாய்மை என்பதற்கெல்லாம், ஒட்டுமொத்த குத்தகை எடுத்த நாட்டாமை கட்சியின் வேட்பாளர், ஆரிய நாமம், கதர் சட்டை போட்ட ஆசாமி, அதே மாட்டு வண்டியில் நின்றபடி, கை கூப்பி வெற்றி வாகை சூடி, தெருக்களில் ஊர்வலம் வருவார்.எல்லாருக்கும், இந்த கால அல்வா போல் இல்லாமல்,ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பது மட்டுமே தேர்தல் கொண்டாட்டமாக இருக்கும்.


ஓட்டு போடும் உரிமை பெற்ற எங்கள் வீட்டு பெருசுகளுக்கு, தேர்தல் என்பது,பொழுதை போக்கிக்கொள்ளும் சுவாரஸ்யத்தை, எப்போதும் வழங்கியதில்லை.'காங்கிரசை விட்டால், நாட்டை வேறு யார் காப்பாற்ற முடியும்' என்ற பெரும்பாலான வாக்காளர் களின் நம்பிக்கை இருந்ததால், போட்டிக்கு யாருமில்லாத, காங்., கால தேர்தல்களில், எந்த பொழுதுபோக்கும் தேவையில்லாமல் இருந்தது.

கலகலப்பு


அவ்வளவு சுலபமாக வரைய இயலாத இரட்டை மாட்டு சின்னத்திற்கு போட்டியாக, சுலபமாக இரட்டை மலைகளின் நடுவே, ஒரு அரைவட்ட சூரியனை போடும் காலம் உதித்த போதே, தேர்தல் காலங்களில் கலகலப்பு கூடி விட்டது.

எந்த ஆர்ப்பாட்ட பேச்சு, அலட்டல் களையும்
அறியாத காங்கிரஸ்காரர்களின் மேடை பேச்சை விட, திராவிட அடுக்கு மொழி பேச்சுகள், அதிக ஓட்டுகளை அள்ள ஆரம்பித்தன.


தேர்தல் காலங்களில், திராவிட கட்சி நிர்வாகிகளின் மேடை பேச்சுகள், வாக்காளர்களை சுவாரஸ்யமாக மகிழ்வித்தன. அவர்களின் பேச்சு சாதுர்யத்திற்கு, காங்., ஈடு கொடுக்க இயலாத நிலையில், கணிச மானவர்களின் ஓட்டுகளை, அந்த கட்சி இழக்க வேண்டியதாயிற்று.கதை, வசனம், இயக்கம், நடிப்பு துறையில் சம்பந்தப்பட்டவர்களின் தலைமையில், திராவிட கட்சிகளுக்கு, பேச்சில் மசாலா சேர்த்து, வாக்காள பெருமக்களை களிப்படைய செய்வது, சுலபமாக இருந்தது.


இரட்டை மாட்டு சின்னத்தில் இருந்து, பல மாற்றங் கள் பெற்று, கை சின்னமாக கரைந்த நிலையிலும், காங்கிரசுக்கு வாக்காளர்களை கவர்ந்து இழுக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் கைவரவில்லை.

அதை தக்க வைத்து கொண்டிருந்த, திராவிட கட்சிக்கு, அந்த அம்சமே பாதிப்பாகி, கட்சியே இரண்டாக உடைந்து, வேதனை தந்தது. கருணாநிதி யின் கை வண்ணம், வாய் வண்ணம் என, தேர்தல் ரசிப்புகளுக்கு குறைவில்லை என்றாலும், வெள்ளி திரையில், 'நான் ஆணையிட்டால்' என, சவுக்கு எடுத்து பாடிய மக்கள் திலகத்தின் முகராசிக்கு, அதிக ரசிக வாக்காளர்கள் பெருகியிருந்தனர்.

தமிழக தேர்தல் களத்தில், அப்போது தான், சினிமாவும் குதித்து, ஒரு சின்னம் பெற்றது. அதே சினிமா எனும் பொழுதுபோக்கு சாதனமே, ஒரு முதல்வரை தந்து விட்டதால், அடுத்து வரும் தேர்தல்களில் பொழுதுபோக்கு அம்சம், அபரிமித மான ஓட்டுகளை பெற்று வீரியமடைந்தது. உதய சூரியனில் இருந்து, இரட்டை இலை பிரிந்ததில் இருந்து, தேர்தல் தோறும், இரு கட்சி மேடை களிலும் வாக்காளர்களை மகிழ்விக்க, சினிமா நுழைந்து விட்டது.


நடிகர் கட்சியில், பல நடிகர் - நடிகையர், மக்களுக்கு தொண்டு செய்ய, தேர்தல் பிரசாரத்திற்கு வர துவங்கியதில், தேர்தல் மேடைகள் திரைப்பட ரசிக வாக்காளர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தன. கூட்டணி கூத்து

இதற்கு, அடுத்தபடியாக தேர்தல் களின் பொழுது போக்கு மதிப்பை, கட்சிகளின் கூட்டணி என்ற கூத்து, குத்துமதிப்பாக உயர்த்தியது. அந்த காலத்து, காமராஜ் காங்கிரசை கவிழ்க்க, உதித்த இந்த கூட்டணி உபாயம், எதிர்கால தேர்தல் ரசிக பெருமக்களுக்கு சிறந்தபொழுது போக்கை அள்ளித்தரும் என்பது, மூதறிஞர் மூளைக்கே எட்டியிருக்காது.தேர்தல் பிரசார கூட்டங்களில், குத்தாட்ட கவர்ச்சி நடனங்கள் அரங்கேறியது போல், தேர்தல் சமயங்களில் கூட்டணி என்ற கூத்து அரங்கேறி, எல்லை யில்லா பொழுது போக்கிற்கு, வகை செய்ய ஆரம்பித்தது.

நாளொரு ஜாதியும், பொழுதொரு சின்னமு மாக, உதிரி கட்சிகளின் உற்பத்தி பெருகியதால், தேர்தல் காலங்களில், ஒன்று, இரண்டு சீட்டுக்கு யாருடன் ஒட்டுவதென்று, அவை அலைவதை பார்ப்பதே உற்சாக பொழுதுபோக்கானது.இந்த கட்சி, இந்த தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி சேரும்; அப்படி சேர்ந்தால், முன் தேர்தலில் அந்த கட்சி மீது,சேறு பூசி பேசியதை, இப்போது எப்படி சமாளிக்கும் என்பது போன்ற, 'சஸ்பென்ஸ்'கள்.

எல்லாரும் அனுமானம் செய்து வைத்திருக்கும் கட்சியில் சேராமல், முற்றிலும் எதிர்மறை கட்சியில் சேரும்,'திடீர் திருப்பங்களும்' முந்தைய தேர்தல் கூட்டணி பேச்சை அப் படியே உல்டாவாக்கி, இப்போதைய கூட்டணிக் காக மாற்றிப் பேசும் காமெடி கலாட்டாக்கள் என, தேர்தல் சமயங்களில், ஒரு, 'சூப்பர் ஹிட்' மசாலா படங்களுக்கு உண்டான அத்தனை பொழுதுபோக்கு அம்சங்களையும், இந்த கூட்டணி கூத்தில், வாக்காளர்கள் அனுபவிக்க முடியும்.

'யார் வந்தால் என்ன, என்ன செய்தால் என்ன' என்ற, மாபெரும் தத்துவ நிலையை எய்து விட்ட வாக்காள பெருமக்களை, 'விட்டேனா பார்' என, விவாத மேடைகளால், 'டிவி' சேனல்கள், சீரியலில் இருந்து விலக்கி, இந்த தேர்தல் பொழுதுபோக்கில், உட்கார வைத்து விடுகின்றன.வலைதளங்கள்சில கட்சி தலை வர்களின், தேர்தல் பிரசார பேச்சே காெமடி காட்சியாகி, கலகலப்பூட்டி கொண்டிருக்க, இன்னும், சில தலைவர்களின், 'சீரியஸ்' பேச்சை, மொழிபெயர்ப்பாளர், 'காமெடி' ஆக்கி மகிழ்விக்கின்றனர்.

'பேஸ் புக், டுவிட்டர்' சமூக வலைதளங்களில், வாக்காள பெருமக்களும், இவற்றை நகைச் சுவைகளாக பதிவு செய்து மகிழும் பக்குவம் பெற்று விட்டனர்.காலபோக்கில், இந்த தேர்தல் பொழுதுபோக்கில் ஆனந்தமாகி, அறிவிழந்து, எந்த கூட்டணி தங்களை அதிகம் ஈர்ப்பு ஏற்படுத்தி மகிழ்விக்கிறதோ, அதற்கே தங்கள் பொன்னான ஓட்டு என, வாக்காளர் களின் மனப்போக்கு மாறி விடாமல் இருந்தால் சரி.
அகிலா கார்த்திகேயன்கட்டுரையாளர்'வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)